டெல்லி முதல்வருடன் அரசு மாதிரி பள்ளியை திடீர் விசிட் அடித்த ஸ்டாலின்!

டெல்லி அரசு மாதிரி பள்ளி மற்றும் அரசு மொஹலா கிளினிக்கை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லியில் மேற்கு வினோத் நகரில் உள்ள அரசு மாதிரி பள்ளியை பார்வையிட்டார். அப்போது, டெல்லி அரசு கல்வித் துறை இயக்குநர் ஹிமான்சூ குப்தா, அங்குள்ள கல்விமுறை பற்றிய முக்கிய கூறுகளை எடுத்துரைத்தார்.டெல்லி அரசுப் பள்ளிகளில் தொழிற்முனைவோர் மற்றும் வணிகம் குறித்த பாடத்திட்டமான பிசினஸ் பிளாஸ்டர்ஸ் படிப்பில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை
13 இலட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். இதற்காக 2021-22ஆம் ஆண்டில் தில்லி அரசால் 60 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் முக்கிய நோக்கம், மாணவர்களை தொழில்முனைவோர்களாக உருவாக்குவதாகும்.
மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் டெல்லி மாதிரி பள்ளியின் வளர்ச்சி குறித்த குறும்படத்தையும் பார்வையிட்டதோடு, அப்பள்ளி மாணவர்களிடம் கலந்துரையாடினார். பின்னர், அப்பள்ளி மாணவர்களால் உருவாக்கப்பட்ட பொருட்களை பார்வையிட்டு, பாராட்டினார். மேலும், அப்பள்ளியில் உள்ள நீச்சல் குளத்தை பார்வையிட்டு, அங்கிருந்த மாணவர்கள் மற்றும் நீச்சல் பயிற்சியாளர்களுடன் உரையாடினார்.
முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதலமைச்சர் மனிஷ் சிசோதியா, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்
அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.