ஆயுதங்களை விட்டுவிடுங்கள்… அசாம் முதல்வர் வேண்டுகோள்..!

தீவிரவாத அமைப்புகள் தங்களது ஆயுதங்களை விட்டுவிட்டு அமைதி வாழ்க்கைக்கு திரும்ப வேண்டுமென அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வாஸ் சர்மா கூறியுள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்பு ஒன்றிய அரசு ராணுவத்திற்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டத்தின் கீழ் அமைதியற்ற பகுதிகளாக கருதப்படும் பகுதிகளை குறைத்ததையடுத்து அவர் இவ்வாறு பேசியுள்ளார்.
இதுகுறித்து அசாம் முதல்வர் மேலும் பேசியதாவது, நான் வுல்ஃபா மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் ஆயுதமேந்தி அமைப்புகளை தங்களது ஆயுதங்களை கைவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் ஆயுதங்களைக் விடுவதன் மூலம் அசாமை அமைதி பூங்காவாக மாற்றலாம். இந்த முயற்சியில் நீங்கள் அனைவரும் பங்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார். இதனை அவர் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், ஒன்றிய அரசின் இந்த புதிய முடிவால் அசாம் மாநிலம் வலிமை பெறும். அசாம் மாநிலம் சார்பிலும் மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் சார்பிலும் நான் எனது மனமார்ந்த நன்றியை பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க முடிவு என்றார்.