டெல்லியில் இனி முகக்கவசம் அணியவில்லை என்றால் நோ அபராதம்..!

உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனாவின் பிடியில் சிக்கித் தவித்து வருகிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களும் கொரோனாவின் பிடியில் சிக்கி தவித்து வந்த நிலையில், தற்போது அந்த நிலை மாறி வருகிறது. கொரோனாவின் தாக்கம் குறையத் தொடங்கி நாட்டில் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது.
அண்மையில், மத்திய அரசு முக கவசம் அணிவது தவிர மற்ற அனைத்து கட்டுப்பாடுகளையும் மாநிலங்கள் நீக்கிக் கொள்ளலாம் என அறிவுரை வழங்கி இருந்தது. இதனையடுத்து, பல்வேறு மாநிலங்கள் அந்த அறிவுரையை ஏற்று தளர்வுகளை அறிவித்தன. இந்நிலையில், டெல்லியில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு விதிக்கப்பட்டு வந்த அபராதம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வந்த நிலையில், அதை ரத்து செய்ய மாநில பேரிடர் மேலாண்மை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. காரில் ஓட்டுநர்கள் முகக்கவசம் அணிய கட்டாயப்படுத்தும் உத்தரவை, கடந்த பிப்ரவரி மாதத்தில், டெல்லி அரசு திரும்பப் பெற்றிருந்தது. இந்நிலையில், கொரோனா பாதிப்பு குறைந்ததால் முகக்கவசம் தொடர்பான அபராதமும் ரத்து செய்யப்படுவதாகவும், இருப்பினும் பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.