இந்திய மாநிலங்களுக்கு இலங்கை நிலை வரலாம்… அதிகாரிகள் வேதனை..!

இலவசங்களை வழங்கும் சில மாநிலங்கள் இலங்கை போன்ற பொருளாதார நெருக்கடியை சந்திக்க நேரிடலாம் என பிரதமர் மோடியிடம் பல்வேறு துறைகளின் செயலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மாநில அரசுகளில் பணியாற்றி தற்போது மத்திய அரசு துறைகளிலுள்ள செயலாளர்கள் உட்பட பல்வேறு துறைகளின் உயர்மட்ட அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டம் சுமார் 4 மணி நேரம் நீடித்தது.

இக்கூட்டத்தில் கலந்துகொண்ட அதிகாரிகள் பேசியதாவது, தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் அறிவிக்கும் இலவசங்கள் மற்றும் கவர்ச்சிக்கர திட்டங்கள் பொருளாதார ரீதியாக நிலைக்கத்தக்கவை அல்ல. குறிப்பாக பஞ்சாப், டெல்லி, தெலங்கானா, ஆந்திரா, மேற்குவங்கம் ஆகியவற்றில் மாநில அரசுகள் அறிவித்துள்ள திட்டங்கள் அந்த மாநிலங்களில் நெருக்கடியை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது என்றனர்.

தொடர்ந்து அவர்கள் கூறியதாவது, அத்தகைய இலவச திட்டங்களால் மாநிலங்களின் பொருளாதார நிலை அதலபாதாளத்தை நோக்கி செல்வதாகவும் மத்திய அரசு உதவாவிட்டால் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் பெரும் வீழ்ச்சியை சந்தித்திருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.

மாநில நிதிநிலைமையை சீரமைக்காமல் இலவச திட்டங்களை தொடர்ந்தால் இலங்கை, கிரீஸ் போன்ற நாடுகளில் ஏற்பட்டதுபோன்ற பொருளாதார நெருக்கடியை அத்தகைய மாநில அரசுகள் சந்திக்க நேரிடும் என பிரதமர் மோடியிடம் பல்வேறு துறைகளின் செயலாளர்கள் கூறினர்.

Leave a Reply

Your email address will not be published.