தேச துரோக வழக்கு சட்டத்தினை மறுபரிசீலனை செய்ய ஒன்றிய அரசுக்கு அனுமதி – உச்ச நீதிமன்றம்

தேச துரோக வழக்கு சட்டத்தினை மறுபரிசீலனை செய்ய ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

பிரிட்டிஷ் ஆட்சியின் போது தங்கள் அரசுக்கு எதிராக பேசுதல், எழுதுதல், அரசை அவமதிக்கும் விதமாக நடத்தல் அல்லது அவ்வாறு நடப்பவர்களை ஊக்குவித்தல் போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை தண்டிப்பதற்காக கொண்டுவரப்பட்டதுதான் தேச துரோக வழக்கு சட்டம். இச்சட்டத்தை பிரிட்டிஷ் அரசியல்வாதியும் வரலாற்று ஆசிரியருமான தாமஸ் மெக்காலே என்பவர் உருவாக்கினார். 1870-ம் ஆண்டு சிறப்பு மசோதா மூலமாக இந்திய தண்டனை சட்டத்தில் சேர்க்கப்பட்டது. இந்திய தண்டனை சட்டத்தில் 124ஏ என்ற சட்ட பிரிவு தேசதுரோக சட்டத்தை பற்றி வரையறுக்கிறது. இச்சட்டத்தை உருவாக்கிய பிரிட்டன் நீதித்துறையில் இருந்து 2009-ம் ஆண்டு தேச துரோக வழக்கு தொடர்பான சட்டம் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இச்சட்டத்தை ரத்து செய்யக் கோரி ஓய்வு பெற்ற இந்திய ராணுவ மேஜர் ஜெனரல் எஸ்.ஜி.வொம்பாட்கெரே,   ‘எடிட்டர்ஸ் கில்டு’ என்ற பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் மற்றும் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹோவ் மொய்த்ரா ஆகியோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு தொடர்பாக கடந்த வாரம் ஒன்றிய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் பதிலளித்தார். அதில், “தேச துரோக சட்டத்தை ரத்து செய்ய வேண்டிய அவசியம் இல்லை. எனவே இம்மனுவினை தள்ளுபடி செய்ய வேண்டும்” எனக் கூறியிருந்தது.

இதே வழக்கில் கடந்த 9-ம் தேதி ஆஜரான ஒன்றிய அரசின் வழக்கறிஞர் “தேச துரோக சட்டத்தை மறுபரிசீலனை செய்ய அரசு தயாராக இருப்பதாகவும், அதற்கு நீதிமன்றம் அனுமதி அளிக்க வேண்டும்” எனவும் கோரினார்.  இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், தேச துரோக சட்டப்பிரிவுகளை ஒன்றிய அரசு மறுபரிசீலனை செய்து கொள்ளலாம் என தெரிவித்தனர். மேலும், இந்த பரிசீலனை முடிவடையும் வரையில் தேச துரோக வழக்குகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்தான விவரங்களை வழங்குமாறு ஒன்றிய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *