ஏழைகள் என்றால் கிள்ளுக்கீரையா?… கொந்தளித்த கமல்ஹாசன்!

நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த குடும்பத்தை அரசு பேருந்தில் இருந்து இறங்கிவிட்ட வீடியோவை பார்த்த கொந்தளித்துப்போன கமல் ஹாசன், ஏழைகள் என்றால் கிள்ளுக்கீரையா? என கடுமையாக விமர்சித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் வள்ளியூர் செல்லும் பேருந்தில் இருந்து நரிக்குறவர் சமுதாயத்தைச் சார்ந்த ஒரு முதியவர், பெண்மணி மற்றும் ஒரு சிறுமி ஆகியோரை ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இருவரும் சேர்ந்து நடுவழியில் இறக்கி விட்டுள்ளனர். பேருந்தில் வந்த அந்த பெண்மணி சத்தமாக பேசியதற்காக இறக்கிவிடப்பட்டதாக சில தகவல்கள் கூறப்படுகிறது. இருப்பினும் இவ்வாறு வலுக்கட்டாயமாக அந்த குடும்பம் இறக்கி விடப்பட்டிருப்பதற்கு சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து தங்களது கண்டனங்களை தெரிவித்து வந்தனர். இதனையடுத்து நாகர்கோவிலில் பேருந்தில் இருந்து நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த குடும்பத்தை பேருந்திலிருந்து கீழே இறங்கிய விவகாரத்தில், ஓட்டுநர் நெல்சன் மற்றும் உடைமைகளை தூக்கி வீசிய நடத்துநர் ஜெயபாலன் ஆகியோரை போக்குவரத்து துறை அதிகாரிகள் அதிரடியாக பணியிடைநீக்கம் செயப்பட்டுள்ளனர்.

இதற்கு முன்னதாக மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த பெண் ஒருவரும் மீன் விற்றுவிட்டு வந்ததால் நாற்றம் அடிக்கிறது எனக்கூறி அரசு பேருந்தில் ஏற்ற மறுத்த சம்பவம் அரங்கேறியது. இதனையடுத்து அந்த பேருந்தின் நடந்துநர், ஓட்டுநர், நேரக் காப்பாளர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இச்சம்பவங்களை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் வன்மையாக கண்டித்துள்ளார். இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் ட்விட்டர் பக்கத்தில், அரசுப்பேருந்திலிருந்து மீன் விற்கும் மூதாட்டி வலுக்கட்டாயமாக இறக்கிவிடப்பட்ட சம்பவத்தால் தமிழகமே கொதித்துக்கிடக்கிறது. நேற்று குறவர் இனத்தைச்சேர்ந்த ஒரு ஏழைக்குடும்பம் பேருந்திலிருந்து வலுக்கட்டாயமாக இறக்கி விடப்பட்டு, உடைமைகளும் சாலையில் வீசப்பட்டுள்ளன.ஏழைகள் என்றால் கிள்ளுக்கீரையா? கேட்க நாதி இல்லை எனும் எண்ணமா? மக்களிடம் மரியாதை காட்டாத ஊழியர்கள் தங்கள் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும். இதுபோன்ற அவமதிப்புகள் இனியும் நிகழாமல் இருப்பதை போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் உறுதி செய்யவேண்டும். என பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *