தேமுதிகவில் பிரேமலதாவுக்கு செயல் தலைவர் பதவியா ?

தேமுதிகவில் புதிய செயல் தலைவர் பதவி ஏற்படுத்துவது குறித்து கட்சித் தலைவர் விஜயகாந்த் அறிவிப்பார் என்று அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா தெரிவித்தார்.

சென்னையில் உள்ள புனிததோமையார் மலை தேவாலயத்தில் தேமுதிக சார்பில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. இதில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா பங்கேற்று, சிறப்பு பிரார்த்தனை செய்தார். பிறகு, ஏழை மக்களுக்கு இனிப்பு, பிரியாணி வழங்கினார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தேமுதிகவில் செயல் தலைவர் பொறுப்பை ஏற்படுத்த வேண்டும் என்றும், நான் அப்பதவியை ஏற்க வலியுறுத்தியும் சமீபத்தில் நடந்த கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் வலியுறுத்தினர்.ஒட்டுமொத்த நிர்வாகிகளின் கருத்தை கேட்டுப் பெற்று, செயல் தலைவர் பொறுப்பை ஏற்படுத்துவது குறித்து செயற்குழு, பொதுக்குழுவில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார். 

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள தேமுதிக தயாராகி வருகிறது. போட்டியிட கட்சியினரும் ஆர்வத்துடன் உள்ளனர். ஏற்கெனவே திட்டமிட்டபடி, இத்தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறோம். அதில் உறுதியாக இருக்கிறோம். தேர்தல் தேதி அறிவித்ததும், வேட்பாளர்கள் விவரம் வெளியிடப்படும்.விஜயகாந்த் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க இருப்பதாக வந்த செய்தி தவறானது. அவர் தற்போது கட்சிப் பணிகளை பார்ப்பதுடன் உடற்பயிற்சி மேற்கொண்டு ஓய்வில் இருக்கிறார்.

பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்தும் முடிவு வரவேற்கத்தக்கது. இதன்மூலம் பெண்கள்கல்லூரி படிப்பை முடித்து, உடல், மனரீதியாக பாதுகாப்புடன், எதிர்காலத்தை திட்டமிட உதவும். இருப்பினும், கிராமங்களில் பெரும்பாலானோர் 18 வயதில் திருமணம் செய்யவே நினைக்கின்றனர்.எனவே இதுதொடர்பாக மக்கள் கருத்தையும் கேட்டு, ஒன்றியரசுஅரசாணை வெளியிட வேண்டும். கொரோனா, ஒமைக்ரான் அச்சுறுத்தல் இருப்பதால் கட்டுப்பாடுகளை அரசு தீவிரப்படுத்த வேண்டும். மக்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *