வேதா இல்ல வழக்கு… அதிமுக மேல்முறையீட்டில் அதிரடி உத்தரவு!

chennai high court

வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்ற கையகப்படுத்திய உத்தரவை ரத்து செய்தது செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா நிலையம் வீட்டை அரசு இல்லமாக அறிவித்தது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு. நினைவு இல்லமாக மாற்றுவதற்காக, அந்த நிலத்தை கையகப்படுத்தி முந்தைய அதிமுக அரசு பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஜெயலலிதா நினைவு இல்ல அறக்கட்டளை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை, நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய் மற்றும் சத்திகுமார் சுகுமார குருப் அமர்வில் நடைபெற்று வந்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.வேதா நிலையம் என்ற தனியார் இடமான கையகப்படுத்தியதில் விதிமீறல் உள்ளது என கூறும் அதிமுக, தனி நீதிபதி முன்பாக விசாரணைக்கு வந்தபோது வழக்கில் இணையவில்லை. பொது நோக்கத்திற்காக நிலம் கையகப்படுத்தப்படவில்லை. அரசியல் காரணங்களுக்காகவே கையகப்படுத்தப்பட்டுள்ளது என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

ஏற்கெனவே அரசு சார்பில் மெரினாவில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ள்ள நிலையில் ஜெயலலிதாவிற்கு இரண்டாவது நினைவிடம் என்பது தேவையற்றது என்ற தனி நீதிபதி கருத்தில் தவறில்லை என்றும், வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்ற கையகப்படுத்திய உத்தரவை ரத்து செய்தது செல்லும் என்றும் நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *