தமிழர்களை ஒருபோதும் ஆள முடியாது… பாஜகவுக்கு சவால் விட்ட ராகுல் காந்தி!

தமிழ்நாட்டில் பாரதி ஜனதா கட்சி வாழ்நாளில் ஒருபோதும்
ஆள முடியாது என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மக்களவையில் வெளுத்து வாங்கியுள்ளார்.
மக்களவையில் குடியரசு உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய அவர், மாநிலங்களில் உள்ள பல்வேறு பிரச்சனைகளில் புரிந்து கொள்ளாமல் பாஜக ஆட்சி நடத்தி வருவதாக சாடினார். மாநிலங்களின் ஒன்றியமே இந்தியா என்பது அரசியலைப்பு சட்டத்தில் இருப்பதாக ராகுல் காந்தி குறிப்பிட்டார். மேலும் இந்தியா என்பது ஒரு கூட்டமைப்பு, ராஜ்ஜியம் இல்லை என்றும் குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டில் உள்ள எனது சகோதரர்களுக்கு இருக்கும் அதே உரிமை, மகராஷ்டிராவில் இருக்கும் எனது சகோதரிக்கும் உத்தர பிரதேசம், பிகார் போன்ற மாநிலங்களில் உள்ள எனது சகோதரனுக்கும், மணிப்பூர், நாகாலாந்து, மிசோரம், ஜம்மு காஷ்மீர், அந்தமான் ஆகியவற்றில் உள்ள எனது சகோதரிக்கும் இருக்கும் அதே உரிமை எல்லோருக்கும் இருக்க வேண்டும்.
பரஸ்பரம் ஆலோசனை, பேச்சுவார்த்தை, ஆலோசனை இருந்தால் மட்டுமே இந்தியாவை ஆள முடியும் என்றும், தமிழ்நாடு மற்றும் கேரளாவிற்கு தனிக்கலாச்சாரம் இருப்பதாகவும் ராகுல் காந்தி தெரிவித்தார். தமிழ்நாட்டை அடக்கி ஆள நினைத்தால் அது தோல்வியில் முடியும் என்றும், பாஜக தனது வாழ்நாளில் ஒருமுறை கூட தமிழ்நாட்டை ஆள முடியாது என்றும் சவால் விடுத்தார்.