ஆளுநரை எச்சரித்த உதயநிதி… ட்விட்டரில் ‘நறுக்’ கேள்வி!

8 கோடி தமிழகர்களின் ஒற்றை கோரிக்கையாக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாவை ஆளுநர் ஆர்.என். ரவி தமிழ்நாடு அரசுக்கே திருப்பி அனுப்பியுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது. சட்டமன்றத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் ஒருமனதாக நிறைவேற்றிய மசோதாவை ஆளுநர் திரும்பி அனுப்பியதற்கு அரசியல் கட்சிகள் பலவும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், பேரறிஞர் அண்ணாவின் 53 ஆவது நினைவு நாளில் “ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் தேவையா?“ என்று அண்ணா அவர்கள் அன்றே காரணத்தோடு எழுப்பிய கேள்வியை எண்ணிப் பார்க்கிறேன் எனக்குறிப்பிட்டிருந்தார்.
தற்போது நீட் மசோதா திருப்பி அனுப்பப்பட்ட விவகாரத்தை கண்டித்துள்ள சேப்பாக்கம் எம்.எல்.ஏ.வும், திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், நீட் விலக்கு மசோதா, ஒட்டுமொத்த தமிழர்களின் எண்ணத் தொகுப்பு. ஏ.கே.ராஜன் அவர்களின் அறிக்கை மூலம் பிற மாநிலத்தவரும் இதை உணரும்போது ஆளுநருக்கு தெரியாமல் போனது ஏன்? நம் கல்வி-மருத்துவம், சமூகநீதியின் அடித்தளத்தில் எழுப்பப்பட்டுள்ள கோட்டை என்பதை ஆளுநர் உணரும் காலம் வெகு தொலைவில் இல்லை என பதிவிட்டுள்ளார்.