முதல்வருடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு… காரணம் என்ன?

நடிகர் விஜய்யை புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி திடீரென சந்தித்து பேசிய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசியலில் பெரிதாக ஆர்வம் காட்டாமல் இருந்த விஜய், தனது ரசிகர்களையும் அந்த விஷயத்தில் ஊக்குவிக்காமல் இருந்தார். ஆனால் உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் தேர்தலில் களம் கண்டனர். இதற்கு விஜய்யும் க்ரீன் சிக்னல் காட்டியதாக கூறப்பட்டது. ஊரக உள்ளாட்சி தேர்தலில் தளபதி விஜய்யின் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் 169 பேர் போட்டியிட்டனர். அதில் 129 பேர் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்றவர்களுடன் விஜய் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியானதை அடுத்து, அவர் அரசியலில் களமிறங்கியது உறுதியானது.
ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலைத் தொடர்ந்து தற்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் விஜய்யின் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் போட்டியிட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்தார். அதுமட்டுமின்றி தேர்தலில் போட்டியிடுபவர்கள் விஜய் மக்கள் இயக்கத்தின் கொடியையும், விஜய்யின் படங்களையும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் அறிவிப்பு வெளியானது.
தேர்தலில் வெற்றி பெற்றாலும் விஜய் மக்கள் இயக்கத்தினர் திமுகவிற்கு சப்போர்ட் செய்ய வேண்டுமென விஜய் ரசிகர்களுக்கு வாய் வழி உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி , நேற்று சென்னை பனையூரில் உள்ள இல்லத்தில் விஜய்யை திடீரென சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டின் வாசல் வரை வந்து விஜய், முதல்வர் ரங்கசாமியை வரவேற்றுள்ளார். இந்த சந்திப்பின் போது அரசியல் மற்றும் திரைத்துறை தொடர்பாக இருவரும் நீண்ட நேரம் பேசியதாகவும், குறிப்பாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசித்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இது ஒரு மரியாதை நிமிர்த்தமான சந்திப்பு மட்டுமே என முதலமைச்சர் ரங்கசாமி தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.