நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது ஏன்?… அண்ணாமலை விளக்கம்!

நீட் மசோதாவை ஆளுநர் திருப்பியதற்கான காரணம் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் இதற்கு முன்பு, பிப்ரவரி 2017-ல் தமிழக சட்டப் பேரவையில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கக் கோரி நிறைவேற்றப்பட்ட தீர்மானம் அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதனை ஆளுநர் பிப்.2, 2017 அன்று குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார். இதனைத்தொடர்ந்து மார்ச் மாதம் மத்திய அரசு தமிழக அரசிடம் இதுதொடர்பாக சில சந்தேகங்களை கேட்டது.
இந்த சந்தேகங்களுக்கு தமிழக அரசு ஏப்ரல் 2017-ல் பதிலளித்தது. மே 2017-ல் மத்திய அரசின் சந்தேகங்கள் தொடர்பாக மேலும் சில தகவல்களையும் அப்போதைய தமிழக அரசு அளித்தது. இதனையடுத்து செப்.2017-ல், குடியரசுத் தலைவருக்கு தமிழக அரசின் பதில் மற்றும் நீட் விலக்கு மசோதா அனைத்தையும் மத்திய அரசு அனுப்பியது. செப்.18, 2017-ல் குடியரசுத் தலைவர், இந்த மசோதாவை ரத்து செய்து, செப்.22, 2017-ல் தமிழக அரசு அனுப்பி வைக்கப்பட்டது. இதனைப் பெற்றுக் கொண்டதாக அப்போதைய மாநில அரசு அக்.25, 2017-ல் எழுத்துப்பூர்வமாக ஒப்புக்கொண்டது.
இந்தத் தகவல்கள் அனைத்து உயர் நீதிமன்றத்தில், மத்திய அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில்மனுவின் மூலம் தெரிந்துகொண்டோம். இப்படி ஏற்கெனவே நீட் விலக்கு கோரிய மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டு, குடியரசுத் தலைவருக்கு சென்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதன்பின்பு, 2022-ல் தமிழக சட்டப் பேரவையில் மீண்டும் நீட் விலக்கு மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டு, ஆளுநர் அதனை சட்டப்பேரவை தலைவருக்கு மீண்டும் அனுப்பியுள்ளார். என்ன காரணத்துக்காக இந்த மசோதா திரும்ப அனுப்பி வைக்கப்பட்டது என்பது குறித்து ஆளுநர் தெரிவித்துள்ளார். ஆனால் மாநில அரசு அதை இன்னும்கூட வெளியிடவில்லை எனத் தெரிவித்துள்ளார்.