இனி எந்த பதவிக்கும் வர முடியாது… திமுகவினரை எச்சரித்த மூத்த அமைச்சர்!

திமுக கூட்டணி கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்களை எதிர்த்து சுயேட்சையாக களமிறங்கியுள்ள திமுகவினர் உடனடியாக விலகிக்கொள்ளவில்லை என்றால், இனி கட்சியில் எந்த பதவிக்கும் வர முடியாது என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 641 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் 649 நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக நகர்புற பிப்ரவரி 19ம் தேதி உள்ளாட்சித்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக, பாஜக, பாமக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம், தேமுதிக, அமமுக மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என பலமுனை போட்டி நடைபெறுகிறது. எனவே அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்வதற்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திமுகவை பொறுத்தவரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலி காணொலி காட்சி மூலமாக மாவட்ட வாரியாக பிரச்சாரம் செய்து வருகிறார். அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர் நேரில் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் திருச்சி திமுகவினரை அமைச்சர் கே.என்.நேரு எச்சரித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மணப்பாறையில் திமுக கூட்டணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.முக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு பங்கேற்றார். அப்போது கூட்டத்தில் பேசிய அவர், பல இடங்களில் தலைமை அறிவித்த கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு போட்டியாக திமுகவினர் சுயேட்சையாக களமிறங்கியுள்ளதாக புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. உடனடியாக போட்டியிலிருந்து விலகிக் கொண்டால் நல்லது. இல்லாவிட்டால் கட்சியில் இருந்து நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழ்நிலை வரும். அவர்களால் கட்சியில் இனி எந்த பதவிக்கும் வர முடியாது என எச்சரித்துள்ளார்.