இவங்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி கிடையாது… முதல்வர் மு.க.ஸ்டாலின் கறார்!

உண்மையான பயனாளிகள் அனைவருக்கும் நாங்கள் ரத்து செய்துவிட்டோம். 13 லட்சம் குடும்பங்களில் மகிழ்ச்சியை ஏற்படுத்திய ஆட்சிதான் இந்த ஆட்சி என்று நகர்புற உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நான் சொன்ன மக்கள் நலத் திட்டங்களை- உதவிகளை தமிழ்நாட்டு மக்களுக்குச் செய்திருக்கிறோம். அ.தி.மு.க. ஆட்சியில் நடந்த முறைகேடுகளை களைந்து மக்களுக்கு நகைக்கடளைத் தள்ளுபடி செய்தோம்! அ.தி.மு.க. ஆட்சியில் எவ்வாறெல்லாம் நகைக்கடன் முறைகேடுகள் நடந்தது என்று கேட்டீர்கள் என்றால், போலி நகைகளை வைத்துக் கடன் வாங்கியிருக்கிறார்கள். நகைகளே இல்லாமல், நகைகளை வைத்தது மாதிரியும் பொய்க் கணக்கு காட்டியிருக்கிறார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு வங்கியில், 500 நகைப் பொட்டலங்களில், 261 பொட்டலங்களில் நகைகளே இல்லை! வெறும் பொட்டலம்தான் இருக்கிறது. அதை வைத்து மட்டும், ஒரு கோடியே 98 லட்சம் ரூபாய் கடன் கொடுக்கப்பட்டிருக்கிறது.

நாமக்கல் மாவட்டத்தில் ஒருவர், 11 லட்சத்து 33 ஆயிரத்து 500 ரூபாய்க்கு கவரிங் நகைகளை வைத்து மோசடி செய்திருக்கிறார். ஒரே நபர், 5 சவரன் அடிப்படையில் 625 நகைக் கடன்கள் மூலம், ஒன்றேகால் கோடி ரூபாய் கடன் வாங்கியிருக்கிறார். இன்னொருவர், 647 நகைக்கடன்கள் மூலம், 1 கோடியே 47 லட்சம் ரூபாய் நகைக் கடன் பெற்றுள்ளார். ஒரே ஒரு ஆள் 7 கோடி ரூபாய் வரைக்கும் கடன் வாங்கியிருக்கிறார். இன்னும் ஏராளம் உள்ளது.

எந்தத் திட்டமாக இருந்தாலும், அதற்கான பயனாளிகள், உண்மையாக இருக்க வேண்டும். அதுதான் அரசின் திட்டங்களில் மிகமிக அடிப்படையானது. மக்கள் வரிப்பணத்தில் நிறைவேற்றுகிற திட்டங்களை பொறுப்பாக செயல்படுத்த வேண்டும். கூட்டுறவு அமைப்புகளை மோசடியாகப் பயன்படுத்தி இதுபோலக் கடன் பெற்றவர்களைப் பிரித்தெடுத்துவிட்டோம். அ.தி.மு.க.வினரை வைத்து செய்த நகை மோசடிக்கு, வெறும் பொட்டலத்துக்கு “ஏன் நகைக்கடன் தள்ளுபடி பண்ணவில்லை”என்று பழனிசாமியும் பன்னீர்செல்வமும் கேட்கிறார்கள். உண்மையான பயனாளிகள் அனைவருக்கும் நாங்கள் ரத்து செய்துவிட்டோம். 13 லட்சம் குடும்பங்களில் மகிழ்ச்சியை ஏற்படுத்திய ஆட்சிதான் இந்த ஆட்சி” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *