சிவப்பு கலர் காரில் வந்து வாக்களித்த விஜய்… இந்த முறை குறியீடு இதுவா?

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மாநிலம் முழுவதும் இன்று ஒரே கட்டமாக நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், பொதுமக்கள் வரிசையில் ஆர்வமுடன் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகர் விஜய் நீலாங்கரையில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் தன்னுடைய வாக்கை செலுத்தினார். வாக்கு செலுத்த காரில் வந்த நடிகர் விஜய், வாக்குப்பதிவு ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே தன்னுடைய வாக்கை பதிவு செய்துவிட்டுக் கிளம்பினார். நடிகர் விஜய் வருகை தந்தபோது அங்கிருந்த சிலர் விஜய்யுடன் புகைப்படம் எடுக்க முற்பட்டதால் அந்த இடத்தில் சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனிடையே விஜய் ஓட்டி வந்த காரும், அவர் அணிந்திருந்த மாஸ்கையும் தேர்தல் குறியீடு என ரசிகர்கள் சோசியல் மீடியாவில் உலவவிட்டு வருகின்றனர். கடந்த சட்டமன்ற தேர்தலின் போது நடிகர் விஜய் கறுப்பு, சிவப்பு நிற சைக்கிளில் வந்து நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடி தனது வாக்கினை பதிவு செய்தார். தனது காரை நிறுத்த இடமில்லாததாலும், வீட்டிற்கு அருகிலேயே விஜய் சைக்கிளில் வந்ததாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால் சோசியல் மீடியாவில் விஜய் திமுகவிற்கு ஆதரவு தெரிவிக்கவே அப்படி வந்தார் என்ற கருத்து தீயாய் பரவியது.
இன்று நடைபெற்று வரும் உள்ளாட்சி தேர்தலிலும் விஜய் தனது வாக்கினை செலுத்தியுள்ளார். இந்த முறையும் தளபதி ஏதாவது குறியீட்டுடன் வருகிறாரா? என ரசிகர்கள் காத்திருந்தனர். அப்படி அலசி ஆராய்ந்த ரசிகர்கள் விஜய் சிவப்பு நிற கார் மற்றும் கருப்பு கலர் மாஸ்க் அணிந்து வந்ததை சுட்டிக்காட்டி, திமுகவிற்கும் மீண்டும் சப்போர்ட் செய்துள்ளதாக பரப்பி வருகின்றனர்.