மதநல்லிணத்திற்கு கேடு… பாஜக பூத் ஏஜெண்ட்டை வெளுத்து வாங்கிய கனிமொழி எம்.பி.!

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது காலை 7 மணி முதலே மக்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் இஸ்லாமிய பெண்கள் ஹிஜாபை கழட்டிவிட்டு வாக்களிக்கும்படி பாஜக முகவர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலூரில் அல் அமீன் உருது தமிழ் உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் ஏராளமான இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிந்து வந்து, வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில் அங்கிருந்த பாஜக முகவரான ஹரி ராஜன் என்பவர், அனைத்து இஸ்லாமிய பெண்கள் முகம் தெரியும் படி ஹிஜாப்பை கழட்டிவிட்டு, வாக்களிக்க செல்ல வேண்டும் என பிரச்சனையில் ஈடுபட்டார். வாக்குச்சாவடி மையத்தில் இருந்த தேர்தல் அலுவலர்கள் பாஜக முகவரிடம் ’நீங்கள் முகத்தைப் பார்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை’ என்றனர். அதற்கு பாஜக முகவர், ‘‘நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன், அராஜகம் நடக்கிறது, ஏற்றுக்கொள்ள முடியாது. முகத்தை காட்டாமல் அனுமதிப்பது, கள்ளஒட்டு போட அனுமதிப்பதற்கு சமம், அவர் கள்ள ஓட்டுப்போட வந்தாரா?’’ என்று கோஷமிட்டார்.
அங்கிருந்த தேர்தல் அதிகாரிகள் வாக்காளர் பட்டியலை நாங்கள் பரிசோதித்தால் மட்டும் போதும், ஹிஜாபை கழட்ட வேண்டிய அவசியமில்லை எனத் தெரிவித்தனர். ஆனால் இதனை ஏற்றுக்கொள்ளாத கிரிராஜன் அதிகாரிகள் மற்றும் பிற கட்சி முகவர்களுடன் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து போலீசார் அவரை வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற்றினர்.
இந்த சம்பவத்தை திமுக எம்.பி. கனிமொழி கடுமையாக கண்டித்துள்ளார். இது குறித்து திமுக நாடாளுமன்ற எம்.பி.கனிமொழி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாய்த் திகழும் தமிழகத்தில், மதுரை மேலூர் நகராட்சி வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வந்த ஒரு இஸ்லாமியப் பெண்ணிடம், பாஜக பூத் நிர்வாகி ஹிஜாப்பை அகற்றச் சொல்லிக் கட்டாயப்படுத்தியிருப்பது கண்டனத்திற்குரியது. நல்லிணக்கத்திற்குத் தீங்கு விளைவிக்க முயன்ற அந்த நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.