ஜெயலலிதா மீது ஆணை… அதிரடி சபதம் ஏற்ற ஓபிஎஸ் – இபிஎஸ்!

தேர்தல் வெற்றிகளும், தோல்விகளும் எல்லோரும் பார்த்தவைதான். ஆனால், துவண்டுவிடாத நெஞ்சுறத்தோடு அதிமுகவை காப்பாற்றவும், தமிழக மக்களுக்கு தொண்டாற்றவும், நம்மை நம்பி ஜெயலலிதா விட்டுச் சென்ற பணிகளைச் செய்து முடிக்கவும், ஜெயலலிதாவின் சபதத்தை நாமும் ஏற்போம். என்று அதிமுக ஒருங்கிணைபாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூறியுள்ளனர்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக தொண்டர்களுக்கு ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “அன்புக்குரிய கழக உடன்பிறப்புகளுக்கு வணக்கம். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்வும் சாதனைகளும் நம்மை எல்லா நேரங்களிலும் வழிநடத்தும் ஆற்றல் கொண்ட திசைமானி என்றால் அது மிகையல்ல.

எத்தனை சோதனைகள் வாழ்வில் வந்தபோதும் அவற்றை எளிதில் முறியடித்து சிந்தனையிலும், செயல் முறைகளிலும் உலகமே வியந்து நோக்கும் வகையில் வெற்றி கண்டவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. எந்த பணியாக இருந்தாலும், எத்தகைய சூழலில் தள்ளப்பட்டாலும், ஒப்பாரும் மிக்காரும் இல்லாத வகையில் தன் கடமைகளை கர்ம சிரத்தையுடன் செய்து முடித்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா என்பதை அவருடைய வாழ்வின் ஒவ்வொரு அத்தியாமும் விளக்கிச் சொல்லும்.

‘ஒரு மாணவி’ என்ற வாழ்வின் தொடக்க நிலையில் அவர் நிகரில்லாத மாணவி. பாடம், படிப்பு, வகுப்பு என்பவை மட்டும் அல்ல. பள்ளிக்கூடத்தின் அனைத்து விளையாட்டுப் போட்டிகளிலும் அவர்தான் முதலிடம். எதைப் படித்தாலும் அதை முழுமையாகவும், ஆழமாகவும் படித்து, அதிலிருந்து பெற வேண்டிய பாடத்தை நூற்றுக்கு நூறு கற்றுக்கொண்டவர் என்பதை அவருடன் கலந்துரையாடியவர்கள் நன்கு அறிவார்கள். எந்தப் பொருளைப் பற்றிப் பேசினாலும் அதன் உச்சத்திற்குச் சென்று, முழுமையான அறிவுடனும், தெளிவுடனும் பேசுவார் மறைந்த முதல்வர் ஜெயலலிதா.

கலைத் துறைக்குள் மிகவும் இளம் வயதில் அடியெடுத்து வைத்த நாள் முதல், அந்தத் துறையில் இருந்து விடைபெறும் நாள் வரை, தனக்கென்று ஒரு தனி முத்திரையைப் பதித்தவர் என்று எல்லோரும் பாராட்டும் வகையில் தனது முழு மூச்சுடனும், முயற்சியுடனும், அர்ப்பணிப்புடனும், தான் ஏற்றுக்கொண்ட பொறுப்புக்கு நீதி செய்பவராக விளங்கியவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா.

தமிழக மக்களுக்கு, தான் ஆற்ற வேண்டிய மாபெரும் நன்றிக் கடனாக, அதிமுகவை ஆரம்பித்த எம்ஜிஆர், தனக்குப் பின்னால் இந்த இயக்கத்தை வழிநடத்த அறிவும், ஆற்றலும், அர்ப்பணிப்பு உணர்வும் கொண்ட ஒருவர் வேண்டும் என்பதற்காக தேர்ந்தெடுத்துத் தந்த நல்முத்து அல்லவா மறைந்த முதல்வர் ஜெயலலிதா.

அரசியல் உலகிற்குள் புகுந்தவுடன் ஜெயலலிதா கண்ட சூழ்ச்சிகளும், சதிச் செயல்களும், வேதனை தரும் வார்த்தை அம்புகளும், நம்பிக்கை துரோகங்களும் கொஞ்சமா? ஆனால், கர்மயோகியான ஜெயலலிதா, கடமையில் தவறாத, துறவிகளுக்கே உரிய நெஞ்சுறத்தோடு ஒரு துறவியின் மனநிலையோடு எதிர்ப்புகளை முறியடித்தார்.இமாலய சாதனைகள் பல படைத்தார்.

பகைவர்களை மன்னித்தார். பழிச் சொல் கூறியவர்களையும், பாசத்துடன் ஏற்றுக்கொண்டார். உடன் இருந்தே குழி பறித்தோரையும், கொடுஞ்செயல் செய்தோரையும் கூட, குணம் என்னும் குன்றேறி நின்று ஏற்றுக்கொண்டார்கள். ஆட்சிப் பொறுப்பில், முதல்வராக மட்டும் அல்ல, எதிர்க்கட்சித் தலைவராகவும் எந்தப் பொறுப்பிலும் இல்லாமல் போன நிலை வந்த போதும், தன் வாழ்வின் இறுதி நேரத்திலும் ஏற்றுக்கொண்ட பொறுப்பிற்கு எந்தெந்த வகைகளில் உழைக்க முடியமோ அவை அத்தனையும் முழு மனதோடும், முழு ஆற்றலோடும் செய்து முடித்தார், மறைந்த முதல்வர் ஜெயலலிதா.

எத்தனை பேருக்கு தன் சொந்த பொறுப்பில் கல்வி கொடுத்தார். எத்தனை பேரின் கண்ணீரை தன் அன்புக் கரங்களால் துடைத்தார். அதிமுகவின் ஒன்றரை கோடித் தொண்டர்களுக்கு மட்டுமல்லாமல், தமிழக மக்களுக்கே தாயாக வாழ்ந்தவர். அவரது வாழ்வு அழகானது. அவரைப் போலவே, இன்று அவர் கட்டிக் காத்த இயக்கம் கழக உடன்பிறப்புகளின் அயரா முயற்சியையும், தளரா நெஞ்சுறுதியையும், தாய்க்கு மகனும், மகளும் ஆற்ற வேண்டிய நன்றிக் கடன்களையும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.

ஏழை, எளிய மக்கள், அதிகாரத்தின் ஒரு துளியையேனும் அனுபவித்திராத மக்கள், ஜனநாயகத்தின் மூலம் மட்டுமே பலம் பெற்று குரல் எழுப்பும் வாய்ப்பு பெற்ற மக்கள், பிறப்பாலும், வாழ்க்கையின் சூழல்களாலும் எப்பொழுதும் சூறாவளியில் சிக்கிய சருகுபோல் அல்லல்படும் பல கோடி மக்கள், இவர்கள் எல்லாம் ஏற்றம் பெற வேண்டும். மக்களாட்சியின் மகத்தான சாதனைகளில் இவர்கள் பங்குபெற வேண்டும் என்பதற்காகத் தான் “என்னுடைய காலத்திற்குப் பிறகும் அதிமுக ஆயிரம் ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும். மக்கள் பணியாற்று” என்று சட்டமன்றத்தில், வேறு எந்த கட்சியின் தலைவரும், முதல்வரும் சொல்லாத மன உறுதியோடு சபதமேற்று சூளுரைத்தார் மறைந்த முதல்வர் ஜெயலலிதா.

தேர்தல் வெற்றிகளும், தோல்விகளும் எல்லோரும் பார்த்தவைதான். ஆனால், துவண்டுவிடாத நெஞ்சுறத்தோடு அதிமுகவை காப்பாற்றவும், தமிழக மக்களுக்கு தொண்டாற்றவும், நம்மை நம்பி ஜெயலலிதா விட்டுச் சென்ற பணிகளைச் செய்து முடிக்கவும், ஜெயலலிதாவின் சபதத்தை நாமும் ஏற்போம். அதிமுகவை அரியணையில் அமரச் செய்வோம். “நீடு துயில் கொள்ளும் எங்கள் அம்மாவே உங்கள் பிள்ளைகள், உங்கள் நம்பிக்கையை வீண்போகச் செய்யமாட்டோம். கட்சிக்கு வெற்றியை ஈட்டி உங்கள் ஆன்மாவை மகிழ்விப்போம்” என்பது அவரது பிறந்தநாளில் நமது சூளுரையாக அமையட்டும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *