அப்பா மட்டும் இருந்திருந்தால்… கலைஞரை நினைத்து கண் கலங்கிய கனிமொழி… உருகிய ஸ்டாலின்!

திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தனது வாழ்க்கை வரலாறு குறித்து, “உங்களில் ஒருவன்” என்ற புத்தகத்தை எழுதி உள்ளார். இந்த புத்தகத்தின் முதல் பாகத்தை வெளியிடும் நிகழ்ச்சி, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்றது.
இதில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சித் தலைவரும், பீகார் மாநில எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ், ஜம்மு – காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும், தேசிய மாநாட்டு கட்சித் தலைவரும் ஒமர் அப்துல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் விழாவில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் வரவேற்புரையாற்றிய கனிமொழி, சுயமரியாதை சமூகநீதி, மாநில சுயாட்சி, மத நல்லிணக்கம், மாநில அடையாளம், மொழி உரிமை என்று பேசும் தலைவர் ராகுல்காந்தி என குறிப்பிட்டார். ஒன்றிய பாஜக அரசு 2 இந்தியாவை உருவாக்குகிறது என்றும், ஒன்று பணக்காரர்களின் இந்தியா, மற்றொன்று ஏழைகளை ஏழைகளாகவே வைத்திருக்கும் இந்தியா என முழங்கிய நவீன இந்தியாவின் நம்பிக்கை ராகுல் என்றும் அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், புத்தகத்தில் ஒவ்வொரு வரியிலும் கலைஞர் கருணாநிதியைப் பற்றி குறிப்பிட்டிருப்பதாக தெரிவித்தார். “இந்த விழாவில் இரண்டு கண்களை தேடுகிறேன். உங்களை வாரி அணைத்து வாழ்க உன் பணி ஸ்டாலின் என கரகரத்த குரலில் கொஞ்சும் அப்பாவை தேடுகிறேன். அவர் இங்கில்லை ஆனால், அவரது உடன் பிறப்புகள் அனைவரது முகத்தில் இருக்கு பெருமையிலும், பூரிப்பிலும் பொங்கி வழிகிறது அப்பாவின் அன்பு” என கனிமொழி கூறும் போது அவருக்கு நா தழுதழுக்க,புன்னகை பூத்த முதல்வர் ஸ்டாலினின் முகமும் சற்றே வாடியது நெகிழ்ச்சியான சம்பவம் அமைந்தது.