நானும் தமிழன் என ஏன் சொன்னேன்?… ராகுல் காந்தி உருக்கமான விளக்கம்!

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எழுதிய உங்களில் ஒருவன் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்று, புத்தகத்தை வெளியிட்டு பேசிய ராகுல் காந்தி, தமிழகத்திற்கு வருவது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும், இதை மனதின் அடி ஆழத்தில் இருந்து சொல்வதாகவும் குறிப்பிட்டார்.
தனது ரத்தம் தமிழ் மண்ணில் உள்ளது என குறிப்பிட்ட ராகுல் காந்தி, அதன் காரணமாகவே தமிழன் என்ற உணர்வு தமக்கு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கடந்த 3 ஆயிரம் ஆண்டுகளில் தமிழ் மண்ணில் யாராலும், எதையும் திணிக்க முடிந்ததில்லை என கூறிய ராகுல் காந்தி, தனித்துவமான இந்த மண்ணை புரிந்துகொள்ளாமல், மத்திய ஆட்சியாளர்கள் செயல்பட்டு வருவதாகக் குற்றம் சாட்டினார்.
வேற்றுமையில் ஒற்றுமை என்பதே நமது நாட்டின் அடையாளம் என தெரிவித்த ராகுல் காந்தி, அந்த அடையாளத்தை சிதைக்க மத்திய ஆட்சியாளர்கள் முயல்வதாக விமர்சித்தார். நமது அமைப்பில் மக்களின் குரல்தான் எதிரொலிக்க வேண்டும் என்று வலியுறுத்திய ராகுல் காந்தி, இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்பதை தீர்பமானிப்பதற்கு ஆட்சியாளர்கள் யார் என கேள்வி எழுப்பினார்.