#BREAKING அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமின்

Jayakumar

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது சென்னை உயர் நீதிமன்றம். திருச்சியில் தங்கியிருந்து அங்குள்ள கண்டோமெண்ட் காவல் நிலையத்தில் 2 வாரங்களுக்கு கையெழுத்திட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. அன்றைய தினம் சென்னை ராயபுரம் பகுதியில் 49-வது வார்டில் திமுகவைச் சேர்ந்த நடராஜ் என்பவரை ஏற்கெனவே வேறொரு வாக்குச்சாவடியில் வாக்களித்துவிட்டு, கள்ள வாக்கு செலுத்த வந்ததாகக் கூறி அதிமுகவினர் சுற்றிவளைத்தனர்.

இந்த தகவலறிந்து அந்த இடத்துக்கு விரைந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அந்த நபரிடம் வாக்குவாதம் செய்தார். பின்னர், அங்கிருந்த அதிமுக-வினரிடம் அந்த நபரின் கைகளைக் கட்டி காவல்நிலையத்தில் ஒப்படைக்குமாறு கூறினார். பின்னர், அதிமுக-வினர் அந்த நபரின் சட்டையைக் கழற்றி அவரை அரை நிர்வாணப்படுத்தி இழுத்துச் சென்றனர்.

இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் 40-க்கும் மேற்பட்டோர் மீது சட்ட விரோதமாகக் கூடி கலகம் செய்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் தண்டையார்பேட்டை காவல்துறை வழக்கு பதிவுசெய்தது. இதனையடுத்து இன்று இரவு ஜெயக்குமார் வசித்து வரும் பட்டினப்பாக்கம் வீட்டுக்குச் சென்ற காவல்துறையினர், அவரை கைது செய்தனர்.

இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஜெயக்குமார் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு கொலை முயற்சியாக மாற்றப்பட்டதை அடுத்து ஜெயக்குமார் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திலும் ஜெயக்குமார் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி ஜெயக்குமார் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், புகார் அளித்தவர் தற்போது நல்ல உடல் நிலையில் இருப்பதால் கொலை முயற்சி வழக்காக பதிவு செய்யப்பட்டது தவறு என்றும், அரசியல் காரணங்களுக்காக வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த மனு இன்று நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. நிபந்தனையின் அடிப்படையில் ஜாமீன் வழங்கலாம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து திருச்சியில் தங்கி இருந்து கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் ஜெயக்குமார் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையோடு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published.