இந்த மூணும் சமத்துவத்துக்கு பிடித்த சாபம்… ஸ்டாலினை எச்சரிக்கும் கம்யூனிஸ்ட்!

சாதியம், மதவெறி, பெண்ணடிமைத்தனம் போன்றவை அரசியல் சாசனம் உறுதிப்படுத்தி இருக்கும் சமத்துவ விழுமியங்களுக்கு எதிரானவை என்றும், இதனை எதிர்க்க வலுவான பிரச்சாரத்தை முன்னெடுக்க வேண்டும் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.
தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையின் தலைவர் யுவராஜ் உட்பட 10 பேருக்கு சாகும் வரை சிறையில் இருக்கும் விதத்தில் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்திருப்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வரவேற்கிறது. இந்த ஆணவப் படுகொலைக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் பல ஜனநாயக அமைப்புகளும் வலுவான போராட்டங்களை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
முக்கிய சாட்சிகள் உட்பட பலரும் பிறழ் சாட்சிகளாக மாறியது, வழக்கின் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்ட டிஎஸ்பி விஷ்ணுபிரியா வழக்கைத் திசை திருப்ப விரும்பிய ஆதிக்க சக்திகளின் நிர்ப்பந்தத்தின் காரணமாக தற்கொலை செய்து கொண்டது போன்ற நிகழ்வுகளுக்கு மத்தியில் ஏழாண்டுகளாக வழக்கு நடந்து தற்போது இந்தத் தீர்ப்பு வெளி வந்திருக்கிறது.
நீதி கிடைப்பதற்காக உறுதியாய் நின்ற கோகுல்ராஜின் தாயார் சித்ரா, விடாப்பிடியாக உழைத்த சிறப்பு அரசுதரப்பு வழக்கறிஞர் ப.பா.மோகன் உள்ளிட்டோர் மிகுந்த பாராட்டுக்குரியவர்கள். சாதிகளை உடைக்க சாதி மறுப்பு திருமணமே பரிகாரம் என்று டாக்டர் அம்பேத்கர் கூறியதையும் தீர்ப்பில் விரிவாகக் குறிப்பிட்டுள்ளார். கொலை செய்தவர்களுக்கும் கோகுல்ராஜூக்கும் ஆழமான முன் விரோதம் இல்லை, ஒரு சாதிய அமைப்பின் தவறான கொள்கை மற்றும் சித்தாந்தத்தின் அடிப்படையிலேயே இக்குற்றம் நடந்துள்ளது எனவும் நீதியரசர் குறிப்பிடுகிறார்.
இந்தச் சூழலில் சாதி ஆணவக் குற்றங்களைத் தடுக்கும் சட்டத்தை தமிழக அரசு உடனடியாகக் கொண்டு வர வேண்டும் என்கிற நீண்ட கால கோரிக்கையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மீண்டும் வலியுறுத்துகிறது. சாதியம், மதவெறி, பெண்ணடிமைத்தனம் போன்றவை அரசியல் சாசனம் உறுதிப்படுத்தி இருக்கும் சமத்துவ விழுமியங்களுக்கு எதிரானவை. இவற்றை எதிர்த்த வலுவான பிரச்சாரத்தை முன்னெடுக்க வேண்டுமென தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம். என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது,