எங்கும் தமிழ், எதிலும் தமிழ்… விருது விழாவில் அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ஸ்டாலின்!

தமிழ் வளர்ச்சித் துறை சார்பிலே தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று தமிழறிஞர்களுக்கு விருதுகளை வழங்கி சிறப்பித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக பொறுப்பேற்ற பிறகு தமிழுக்காக என்னவெல்லாம் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன என பட்டியலிட்டு தெரிவித்துள்ளார்.

முதல்வர் உரையில் பேசியதாவது: ஐந்து முறை ஆட்சியில் இருந்த போது – எத்தனையோ சாதனைகளைச் செய்திருந்தாலும், கடந்த பத்து மாத காலத்தில் பைந்தமிழுக்கு பல்வேறு சாதனைகளைச் செய்த அரசு தான் கழக அரசு என்பதை உங்களுக்கு மீண்டும் நான் நினைவூட்டுகிறேன்.

  • தமிழ்நாட்டு அரசுத் துறை பணியிடங்களில் நுழைபவர்களுக்கு தமிழ் மொழி அறிவு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
  • ஆசிரியர் தேர்வு வாரியம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் உள்ளிட்ட மாநிலத்தில் உள்ள அனைத்து தெரிவு முகமைகளைப் பொறுத்தவரையில் கட்டாயத் தமிழ்மொழித் தகுதித் தேர்வு நடத்தப்படும்.
  • ஆலயங்களில் அன்னைத் தமிழ் ஒலிக்கத் தொடங்கி இருக்கிறது.
  • மனோன்மணீயம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் மாநிலப் பாடலாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • மதுரையில் கலைஞர் நினைவு நூலகம்
  • தமிழ் அறிஞர்கள் நூல்கள் நாட்டுடமை
  • எழுத்தாளர்கள் பிறந்தநாளில் கூட்டங்கள்
  • குறைந்த விலையில் சங்க இலக்கிய நூல்கள் வெளியீடு
  • திராவிடக் களஞ்சியம் உருவாக்கம்
  • இதழியலாளர்க்கு கலைஞர் எழுதுகோல் விருது
  • உலகப் பல்கலைக் கழகங்களில் செம்மொழித் தமிழ் இருக்கைகள்
  • நூலகங்களுக்கு சிற்றிதழ்கள்
  • இலக்கியமாமணி விருதுகள்
  • திசைதோறும் திராவிடம்
  • முத்தமிழறிஞர் மொழிபெயர்ப்புத் திட்டம் – இப்படி தமிழாட்சி நடந்து வருகிறது.
  • 2010-ஆம்ஆண்டு முதல் வழங்கப்படாமலிருந்த முத்தமிழறிஞர் கலைஞர் செம்மொழித் தமிழ் விருதுகள் 22.01.2022-ஆம் நாளன்று வழங்கப்பட்டன. இனி ஒவ்வோர்ஆண்டும் முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்த நாளாம், ஜூன் மாதம் 3-ஆம் நாள் ரூ.10.00 இலட்சம் பரிசுத்தொகையுடன் வழங்கப்படும்.
  • பாரதி ஆய்வாளர்கள் ஐவருக்கு தலா 3 லட்சம் வழங்கி பெருமைப்படுத்தி இருக்கிறோம்.
  • தமிழக எல்லைப் போராட்ட வீரர்கள் 110 பேருக்கு தலா 1 லட்சம் வழங்கி சிறப்புச் செய்திருக்கிறோம்.

கொரோனா காலத்தில் பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் அதிகம் பாதிக்கப்பட்டிருந்தார்கள். ஏற்கனவே ஜனவரி மாதம் தொடங்க இருந்த புத்தகக்கண்காட்சி தள்ளிப்போன காரணத்தால், அவர்களுக்கு இழப்பும் அதிகமாக ஏற்பட்டது. இதனை அரசாங்கம் கவனத்தில் கொண்டு, எங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். ஒரு கோடி ரூபாய் வரைக்கும் இழப்பு ஏற்பட்டிருக்கும் என்று அவர்கள் சொன்னார்கள். அதனை மனதில் வைத்துக்கொண்டு ஐம்பது லட்சம் ரூபாயை தமிழக அரசு வழங்கி இருக்கிறது.

இந்த வகையில் இந்த ஆண்டு மட்டும் ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் பதிப்பாளர்- விற்பனையாளர்களுக்கு கிடைத்திருக்கிறது.

புத்தகக் கண்காட்சியைத் தொடங்கி வைக்க நான் சென்றபோது ஒரு அறிவிப்பைச் செய்யலாம் என்று நினைத்தேன். ஆனால், அது தேர்தல் காலம். உள்ளாட்சி அமைப்புனுடைய தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரம். அதனை அந்த நேரத்தில் சொல்ல முடியவில்லை. தேர்தல் நடத்தை விதிகள் அதற்கு இடம் தரவில்லை. தேர்தல் முடிந்துவிட்ட காரணத்தால் இந்த நிகழ்ச்சியின் மூலமாக அந்த அறிவிப்பைச் செய்கிறேன்.

அனைத்து நூல்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக மாபெரும் புத்தகப் பூங்கா அமைக்கலாம் என்றும் – அதற்கான நிலத்தை அரசு வழங்கும் என்றும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஒருமுறை சொன்னார். அதற்கு புத்தகப் பூங்கா என்றும் அவரே பெயர் சூட்டினார்.

பாபசி அமைப்பைச் சார்ந்திருக்கக்கூடிய அவர்களுடைய ஆலோசனைகளைப் பெற்று அதற்கான நிலத்தைத் தேர்வு செய்து, அரசு வழங்கும் என்று இந்த நிகழ்ச்சியின் வாயிலாக நான் உறுதி அளிக்கிறேன். இந்த புத்தகப் பூங்கா உருவானால், அனைத்து புத்தகங்களையும் ஒரே இடத்தில் வாங்கலாம், அனைத்துப் பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் ஒரே இடத்தில் சந்திக்கக்கூடிய சூழல் நிச்சயம் உருவாகும். அதனை உருவாக்கித் தர அரசு தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் உறுதியாகச் செய்யும் எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.