11 கிலோ தங்கம், 118 கிலோ வெள்ளி, கிரிப்டோ கரன்சியில் முதலீடு… எஸ்.பி.வேலுமணியின் பகீர் பக்கங்கள்!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் நடந்த சோதனையில் 11 கிலோ தங்கம், 118 கிலோ வெள்ளி மற்றும் ரூ.84 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பலதரப்பட்ட கிரிப்டோ கரன்ஸிகளில் ரூ.34 லட்சம் அளவுக்கு முதலீடு செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்தவர் எஸ்.பி.வேலுமணி. தற்போது தொண்டாமுத்தூர் தொகுதி எம்எல்ஏவாகவும், சட்டப்பேரவையில் அதிமுக கொறடாவாகவும் உள்ளார். அமைச்சராக இருந்த சமயத்தில் முறைகேடாக டெண்டர் வழங்கியதாகவும், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் எஸ்.பி.வேலுமணி மீது புகார்கள் எழுந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் மட்டுமல்லாது அவருக்கு நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் டெண்டர் வழங்கிய நிறுவனங்கள் என மொத்தம் 60க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
அந்த சோதனையில் 13 லட்சம் ரொக்கம், 2 கோடி வைப்புத்தொகை, டெண்டர் ஆவணங்கள் ஆகியன கைப்பற்றபப்ட்டன. இந்நிலையில் மீண்டும் இன்று காலை முதலே எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான வீடு உள்ளிட்ட 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.
கோவை மைல்கல் பகுதியில் உள்ள வேலுமணியின் வீடு, அவரது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது. கோவை, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் டிஎஸ்பி தலைமையிலான அதிகாரிகள் குழு சுமார் 13 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் 11.153 கிலோ தங்கம், 118.506 கிலோ வெள்ளி மற்றும் ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கணக்கில் வராத பணம் என்ற அடிப்படையில் ரூ.84 லட்சம், சான்றுப் பொருட்களான அலைபேசிகள், பல வங்கிகளில் உள்ள லாக்கர் சாவிகள், மடிக்கணினி, கணினி ஹார்டு டிஸ்க்குகள் மற்றும் வழக்குக்கு தொடர்புடைய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும், ரூ.34 லட்சம் அளவுக்கு பலதரப்பட்ட கிரிப்டோ கரன்சிகளில் முதலீடு செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட் டுள்ளது. தொடர் விசாரணை நடை பெற்று வருகிறது’ என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.