வெறும் மாயை; கண் துடைப்பு… வேளாண் பட்ஜெட்டை விளாசிய எடப்பாடி!

வேளாண் பட்ஜெட் வெறும் கண் துடைப்பு என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக சாடியுள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி: இது வேளாண் பட்ஜெட் இல்லை எனவும் வேளாண் மானியக் கோரிக்கையின் போது தரக்கூடிய கொள்கை விளக்கக் குறிப்பு தான் எனத் தெரிவித்தார். அனைத்துத் துறைகளின் நிதியையும் சேர்த்து வேளாண் பட்ஜெட் என்ற மாயையை ஏற்படுத்தியுள்ளதாக குற்றம் சாட்டினார். இந்த பட்ஜெட் எந்தத் திட்டங்களும் இல்லாத வெறும் கண்துடைப்பு என விமர்சனம் செய்தார்.
அதேபோல தாலிக்கு தங்கம், ஏழை, எளிய குடும்ப பெண்களுக்கான திருமண உதவித்தொகை, அம்மா இருசக்கர வாகன திட்டம் போன்றவை வேண்டுமென்றே கைவிடப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம், வறட்சி நிவாரணம், அதிக இழப்பீட்டுத் தொகை என பல்வேறு திட்டங்களைக் கொண்டுவந்தது அதிமுக அரசு எனத் தெரிவித்த அவர் அதிமுக ஆட்சிக் காலம்தான் தான் விவசாயிகளின் பொற்கால ஆட்சி எனக்கூறினார். மேலும், திமுக ஆட்சியில் விவசாயிகள் அலைக்கழிக்கப்படுவதாகவும் தேர்தல் அறிக்கையில் கூறிய எதையும் திமுக நிறைவேற்றவில்லை எனவும் எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார்.