துபாயில் முதல்வர்… UAE அமைச்சர்களுக்கு வைத்த கோரிக்கை!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் பன்னாட்டு நிதி மையத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதாரத் துறை அமைச்சர் அப்துல்லா பின் டூக் அல் மர்ரி மற்றும் வெளிநாட்டு வர்த்தகத் துறை அமைச்சர் டாக்டர் தானி பின் அகமது அல் சியோதி ஆகியோரை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது பல்வேறு துறைகளில் தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டார். தமிழ்நாட்டிற்கும், ஐக்கிய அரபு நாடுகளுக்கும் இடையே உள்ள பொருளாதாரம் மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது குறித்தும் ஆலோசனை நடைபெற்றது.
அப்போது, தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு நிலவும் சாதகமான சூழ்நிலையை எடுத்துக் கூறிய முதலமைச்சர், ஐக்கிய அரபு அமீரகத்தின் அமைச்சர்களையும் தமிழ்நாடு வருமாறு அழைப்பு விடுத்தார். மேலும், தமிழ்நாட்டில் தொழில் தொடங்கும் வகையில் முதலீட்டாளர்கள் குழுவினை அனுப்பி வைக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
இந்த சந்திப்பின்போது Karunanidhi A Life என்ற புத்தகத்தையும், யானை சிற்பம் ஒன்றையும் ஐக்கிய அமீரக அமைச்சர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசளித்தார். ஐக்கிய அமீரக அமைச்சர்கள் சார்பாக, பாய் மரக்கப்பல் சிற்பம் முதலமைச்சருக்கு பரிசாக வழங்கப்பட்டது.