4 நாள் துபாய் பயணம்… முதல்வர் மு.க.ஸ்டாலின் அள்ளிய முதலீடுகள் என்னென்ன?

தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் முதல் வெளிநாட்டு பயணமாக கடந்த 24ம் தேதி சென்னையிலிருந்து துபாய் சென்ற ஸ்டாலினுக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக மேற்கொண்ட இந்த பயணத்தில் 25ம் தேதி துபாய் பன்னாட்டு நிதி மையத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதார அமைச்சர் அப்துல்லா பின் டூக் அல் மர்ரி, ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளிநாட்டு வர்த்தகத் துறை அமைச்சர் டாக்டர் தானி பின் அகமது அல் சியோதி ஆகியோரை சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின், தமிழகம் வருமாறு அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

மேலும், தமிழகத்தில் தொழில் தொடங்கிட, முதலீட்டாளர்கள் குழுவினையும் தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார் அதனைத்தொடர்ந்து, துபாயில் நடைபெற்ற ஐக்கிய அரபு நாடுகளின் முதலீட்டாளர்கள் சந்திப்பில் ஸ்டாலின் உரையாற்றினார்.

இதில்2600 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 9,700 நபர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் விதமாக ஐக்கிய அரபு நாடுகளின் 5 முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது

ஃபராபி பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி முகம்மது அல் வாதே (Mr. Mohammed Al-Wadaey), எம்மார் பிராப்பர்டீஸ் (EMAAR Properties) நிறுவன தலைமை செயல் அதிகாரி ஹாதி பத்ரி ஆகியோரை சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாட்டில் உள்கட்டமைப்பு திட்டங்களில் முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுத்தார்.

துபாய் பயணத்தை நிறைவு செய்து அபுதாபி சென்ற ஸ்டாலின், அங்கு முன்னணி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளைச் சந்தித்தார்.

முபாதாலா நிறுவனம் மற்றும் தமிழ்நாடு உள்கட்டமைப்பு நிதி மேலாண்மைக் கழகம் (TNIFMC) நிறுவனங்களுக்கிடையே ஒரு பணிக்குழுவை அமைத்து, தமிழ்நாட்டில் உள்ள பசுமை எரிசக்தி, சாலை திட்டங்கள், தொழிற் பூங்காக்கள் மற்றும் உடனடியாக துவங்கும் திட்டங்கள், தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கான விடுதிகள் மற்றும் தகவல் தரவு மையங்கள் போன்ற மிகப் பெரிய உள்கட்டமைப்பு திட்டங்களில் முதலீடுகள் மேற்கொள்வதற்கான திட்டங்கள் வகுத்திடவும் முதலமைச்சர் ஸ்டாலின், முபாதாலா நிறுவன அதிகாரிகளை சந்தித்து அழைப்பு விடுத்தார்.

அபுதாபி வர்த்தக சபை தலைவரும், ஐக்கிய அரபு நாடுகளின் வர்த்தக சபை மற்றும் அரபு வர்த்தகக் கூட்டமைப்பு தலைவருமான H.E அப்துல்லா முகமது அல் மஸ்ரோயியை சந்தித்தபோது, அபுதாபி நிறுவனங்கள் தமிழகத்தில் உணவு பதப்படுத்துதல், உணவுப் பூங்காக்கள், குளிர்பதனக் கிடங்குகள், சரக்கு மற்றும் சேவைகள் போன்றவற்றில் முதலீடுகள் மேற்கொள்ள வேண்டுமென்று ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.

ADQ நிறுனத்தின் தலைமை செயல் அதிகாரி, H.E முகம்மது அல் சுவைதி (H.E Mohammed Al Suwaidi) உடனான சந்திப்பின்போது, முதலமைச்சர் ஸ்டாலின், தமிழகத்தில் மருத்துவ சுகாதார திட்டங்கள், உணவு பதப்படுத்துதல் போன்ற திட்டங்களில், முதலீடுகள் மேற்கொள்ளுமாறு, இந்நிறுவனத்திற்கு அழைப்பு விடுத்தார்.

லுலு குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் யூசுஃப் அலியை அவரது அபுதாபி இல்லத்தில் ஸ்டாலின் சந்தித்துப் பேசினார். அப்போது, முதலமைச்சர் முன்னிலையில் லுலு நிறுவனத்துடன் ரூ, 3500 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 5000 நபர்களுக்கு வேலை வாய்ப்பு என்ற வகையில், 3 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது.

புலம்பெயர் தமிழர் நல வாரியம் அமைத்ததற்காக அபுதாபி வாழ் தமிழ்ச்சங்கங்கங்கள் சார்பாக நடைபெற்ற பாராட்டு விழாவிலும் கலந்து கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், செவ்வாய்கிழமை அதிகாலை தமிழ்நாடு திரும்ப பயணமானார்.

Leave a Reply

Your email address will not be published.