கொந்தளித்த ஓபிஎஸ்… கொதித்துப்போன இபிஎஸ்… சொத்து வரிக்கு எதிராக வெடித்த போராட்டம்!

திருச்சி ரயில் நிலையம் முன்பு, சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, கொரோனா பேரிடரால் கடந்த 2 ஆண்டுகளாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், திமுக அரசு சொத்துவரியை உயர்த்தியது கண்டனத்திற்குரியது என தெரிவித்தார். மத்திய அரசின் மீது வீண் பழியைப் போட்டு மக்களை திமுக ஏமாற்ற நினைப்பதாக குற்றம்சாட்டிய எடப்பாடி பழனிசாமி, கடந்த 10 மாதங்களில் அதிமுக ஆட்சியில் கொண்டுவந்த திட்டத்தை தொடங்கிவைத்ததைத் தவிர வேறு எந்த திட்டத்தையும் திமுக அரசு நிறைவேற்றவில்லை என விமர்சித்தார்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய ஓ.பன்னீர்செல்வம், நிறைவேற்ற முடியாத, பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து திமுக ஆட்சியை பிடித்துள்ளதாக கூறினார். திமுக தேர்தல் அறிக்கையில் சொத்து வரி உயர்த்தப்படாது என கூறப்பட்டிருந்த நிலையில், தற்போது வரி உயர்த்தப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், தமிழ்நாட்டிற்கு எந்த விடியலும் வரவில்லை. அதற்கு பதிலாக வரி தான் வந்துள்ளது என விமர்சித்தார்.