மேல்முறையீடு செய்யும் பாகிஸ்தான் அரசு.. புது திட்டம் வகுக்கும் இம்ரான் கான்..

உச்சநீதிமன்றத்தின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்த்து பாகிஸ்தான் அரசு மேல்முறையீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளது. பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கான் அரசு ஆட்சி செய்து வந்த நிலையில் நாட்டின் பொருளாதார நெருக்கடி மற்றும் பணவீக்கம் காரணமாக எதிர்க்கட்சிகள் பல ஒன்றுகூடி இம்ரான் கான் அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தது.
ஆனால், அதிபர் ஆரிப் ஆல்வி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் பரிந்துரையை ஏற்று நாடாளுமன்றத்தை கலைத்து அடுத்த மூன்று மாதத்தில் தேர்தல் நடத்த உத்தரவிட்டார். இதை ஏற்க மறுத்த எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம், பிரதமர் இம்ரான் கானின் பரிந்துரையை ஏற்று நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது செல்லாது என்றும் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தவும் உத்தரவிட்டது.
அதன்படி இன்று(ஏப்ரல் 9) பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்நிலையில் இம்ரான் கான் மற்றும் அவரது கட்சி எம்பிக்கள் யாரும் நாடாளுமன்றத்திற்கு வராமல் புறக்கணித்தனர். யாரும் வராததால் சபாநாயகர் நாடாளுமன்றத்தை இரவு 8 மணிக்கு ஒத்திவைத்துள்ளார்.
ஆனால் இம்ரான் கான் அரசு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிராகரித்த துணை பேரவைத் தலைவரின் உத்தரவை ரத்து செய்த நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக பாகிஸ்தான் அரசு மேல்முறையீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளனர்.