ஓபிஎஸ் – ஈபிஎஸுக்கு சவால் விட்ட சசிகலா…. அதிர்ந்துபோன அதிமுக!

2016ஆம் ஆண்டு பிப்ரவரி 29ஆம் தேதி அதிமுக பொதுச்செயலாளராக வி.கே.சசிகலா தேர்வு செய்யப்பட்டார். சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு, 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கம் செய்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்தனர்.

பொதுக்குழுவின் முடிவு செல்லாது என அறிவிக்கக் கோரியும், தன்னை கட்சியை விட்டு நீக்கிய தீர்மானத்தை ரத்து செய்யக் கோரியும் சென்னை மாவட்ட 4வது கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தில் சசிகலா வழக்கு தொடர்ந்தார். அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கியது சட்டவிரோதம் எனவும் அறிவிக்க வேண்டும் எனவும் சசிகலா கூடுதல் மனு தாக்கல் செய்திருந்தார். சசிகலா தொடர்ந்த வழக்கை நிராகரிக்கக் கோரி ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக நிர்வாகிகள் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

சசிகலாவை கட்சியிலிருந்தே நீக்கம் செய்யப்பட்டதை உச்சநீதிமன்றமும், டெல்லி உயர்நீதிமன்றம், இந்திய தேர்தல் ஆணையமும் ஏற்றுக் கொண்ட நிலையிலும் சசிகலா தவறான தகவல்களை நீதிமன்றத்தில் தெரிவிப்பதாக மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, ஓபிஎஸ், இபிஎஸ் தாக்கல் செய்த மனுகளை ஏற்பதாக தெரிவித்த சென்னை மாவட்ட 4வது கூடுதல் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ஜெ.ஸ்ரீதேவி, சசிகலா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். சென்னை உரிமையியல் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக வி.கே. சசிகலா தெரிவித்துள்ளார்.

மூன்றாம் கட்டமாக ஆன்மிக பயணம் மேற்கொண்டுள்ள அவர், நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் இதனைத் தெரிவித்தார். இதனையடுத்து, சேலம் மாவட்ட எல்லையான சங்ககிரியில், தீரன் சின்னமலை நினைவிடத்தில் உள்ள தீரன் சின்னமலை திருஉருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவிற்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்பது தொண்டர்களின் விருப்பம் என்றும், அது விரைவில் நிறைவேறும் என்றும் குறிப்பிட்டார். அதிமுக பொதுச்செயலாளர் பதவியை யாரோ நாலு பேர் முடிவு செய்ய முடியாது என்று தெரிவித்த சசிகலா, பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்கவும், நீக்கவுமான அதிகாரம் கட்சியின் அடிமட்டத் தொண்டர்களிடம்தான் உள்ளது என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.