பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷாபாஸ் ஷெரீப் தேர்வு..!

பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷாபாஸ் ஷெரீப் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷாபாஸ் ஷெரீப் போட்டியின்றி பாகிஸ்தான் பிரதமராகியுள்ளார்.
பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான் கான் இரு தினங்களுக்கு முன் நடந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் பதவி இழந்த நிலையில், இன்று பிற்பகல் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் புதிய பிரதமருக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த போட்டியில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் ஷாபாஸ் ஷெரீப் வேட்புமனு தாக்கல் செய்தார். இவரை எதிர்த்து இம்ரான் கானின் பிடிஐ கட்சியில் 65 வயதான முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷியை புதிய பிரதமர் வேட்பாளராக இம்ரான் கான் அறிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நடந்த இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் இம்ரான்கான் கட்சியை சேர்த்த குரேஷி உட்பட பிடிஐ கட்சி உறுப்பினர்கள் அனைவரும் சபையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். இதனால் எதிர் கட்சியின் ஷாபாஸ் ஷெரீப் பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வாக்கெடுப்பில் ஷாபாஸ் ஷெரீப்க்கு 174 வாக்குகள் கிடைத்தன. இம்ரான் கானின் பிடிஐ கட்சி முன்மொழிந்த பிரதமர் வேட்பாளரான முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷிக்கு ஒரு வாக்கு கூட கிடைக்கவில்லை என தெரியவந்துள்ளது.