ஆளுநர் நிகழ்ச்சியை புறக்கணித்த இரு முக்கிய உயர் அதிகாரிகள்… யார் தெரியுமா?

தமிழ் புத்தாண்டையொட்டி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை வளாகத்தில் பாரதியார் சிலை திறப்பு விழா மற்றும் தேநீர் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆளுநர் ஆர்.என். ரவி முதலாவதாக பாரதியார் சிலையை திறந்து வைத்தார். பின்னர் பாரதியார் பிறந்தநாளை முன்னிட்டு கல்லூரி,பள்ளி அளவில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரையும் ஆளுநர் தனித்தனியாக சந்தித்து தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

தொடர்ந்து தேநீர் விருந்து நடைபெற்றது. ஆளுநர் நீட் உள்ளிட்ட அரசின் சட்ட மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் காலம் தாழ்த்துவதாக கூறி ஆளும் கட்சியான திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் நிகழ்ச்சியை புறக்கணித்த நிலையில் மத்திய இணையமைச்சர் எல் .முருகன், அதிமுக, பாஜக, பாமக, தமாகா கட்சியை சேர்ந்தவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கமணி,வேலுமணி,விஜயபாஸ்கர்,தளவாய் சுந்தரம் ஆகியோரும் பாஜக சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை , நடிகைகள் குஷ்பு, காயத்ரி ரகுராம் உள்ளிட்டோரும் பாமக சார்பில் சட்டமன்ற உறுப்பினர்கள் சதாசிவம், வெங்கடேஸ்வரன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் ஜி.கே வாசன் பல்கலைக்கழக துணை வேந்தர்கள், உயர்நீதிமன்ற நீதிபதிகள், பாரதியார் குடும்பத்தினர் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

ஆளுநர் மாளிகை நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர் இறையன்பு, டி.ஜி.பி சைலேந்திரபாபு உள்ளிட்டோரும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.