இதற்கு தீர்வு தான் என்ன?… அன்புமணி ராமதாஸ் அரசுக்கு அதிரடி கேள்வி!

Anbumani

மழையில் நனைந்து 70,000 நெல் மூட்டைகள் நாசம்: நிரந்தரத் தீர்வு எப்போது? என்று தமிழக அரசுக்கு பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அடுத்தடுத்து வெளியிட்டுள்ள பதிவுகளில், “காவிரி பாசன மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் உள்ள 170 மையங்களில் கொள்முதல் செய்து வைக்கப்பட்டிருந்த 70 ஆயிரம் நெல் மூட்டைகள் நனைந்து நாசமாகிவிட்டன. அதனால், அரசுக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. நெல் கொள்முதல் நிலையங்களில் வாங்கப்பட்ட நெல் மூட்டைகள் அரசின் கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்படாதது தான் இதற்கு காரணமாகும். எப்போது மழை பெய்தாலும் அதனால் விவசாயிகள் கொண்டு வந்த நெல்லோ, அரசு கொள்முதல் செய்த நெல்லோ சேதமடைவது வாடிக்கையாகி விட்டது.

நெல் கொள்முதல் நிலையங்களில் குறைந்தது 5000 மூட்டைகள் இருப்பு வைக்க வசதி தேவை. கொள்முதல் செய்யப்படும் மூட்டைகள் இரு நாட்களுக்கு ஒருமுறை கிடங்குகளுக்கோ, அரவை ஆலைக்கோ கொண்டு செல்லப்பட வேண்டும். அதற்கான கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட வேண்டும். உயிரைக் குடிக்கும் டாஸ்மாக் கடைகளின் மதுப்புட்டிகளை பாதுகாப்பதில் காட்டப்படும் அக்கறை, உயிரைக் காக்கும் உணவான நெல் மூட்டைகளை காப்பதில் காட்டப்படுவதில்லை. இந்த நிலையை மாற்ற வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களின் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.