காங்கிரஸ் கட்சியில் இணையும் பிரசாந்த் கிஷோர்… அல்லுகிளம்பும் பாஜக!

Prasanth Kishore

தேசத்தின் விடுதலைக்கும், விடுதலைக்கு பிறகான நாட்டின் கட்டமைப்பிலும் மிக முக்கிய பங்காற்றிய கட்சி காங்கிரஸ். அத்தகைய மாபெரும் கட்சி இன்று மோசமான சூழலில் சிக்கி தவிக்கிறது. சுதந்திர இந்தியாவில் கால் நூற்றாண்டிற்கு மேலாக ஆட்சி செய்த கட்சி இன்று 2 மாநிலங்களில் மட்டுமே நேரடியாக ஆட்சியில் உள்ளது.

2014ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தொடங்கிய காங்கிரஸ் கட்சியின் தோல்வி முகம், நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவை முடிவுகள் வரை தொடர்ந்து வருகிறது. ஒருபுறம் பாஜக மாபெரும் சக்தியாக வளர்ந்து வரும் சூழலில் காங்கிரஸ் கட்சி தன்னை மீட்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

கட்சியை பலப்படுத்துவதற்காக தலைவர்கள் பல்வேறு திட்டங்களை வகுத்து வருகின்றனர்.அதில் முக்கிய ஆயுதமாக பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், காங்கிரசுடன் கை கோர்க்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேசிய, மாநில கட்சிகளுக்கு தேர்தல் வியூகங்களை அமைத்து தருபவர் பிரசாந்த் கிஷோர். 2014ம் ஆண்டு மோடி தலைமையிலான பாஜக ஆட்சியை பிடிப்பதற்கு இவரது பங்கு முக்கியமானது. அதை தொடர்ந்து ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டிக்கும், டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுத்து ,அவர்கள் ஆட்சி அமைய பெரும் பங்காற்றினார். நடந்து முடித்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் இணைந்து பணியாற்றினார்.

தொடக்கத்தில் மோடியுடன் நெருக்கமாக இருந்த இவர், தற்போது பாஜகவை தோற்கடிப்பதையே தனது குறிக்கோளாக கொண்டிருப்பதாக தெரிவிக்கிறார். 2021 மேற்குவங்க சட்டமன்ற தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க மம்தா பானர்ஜியுடன் இணைந்து பணியாற்றி அதில் வெற்றியும் கண்டார்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மோடிக்கு எதிராக எதிர்கட்சிகளை ஒன்று திரட்டும் முக்கிய பணியில் பிரசாந்த் கிஷோர் ஈடுபடுவார் என்று அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். 2024 பாராளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்கான திட்டங்களை வகுக்கும் பிரசாந்த் கிஷோர், காங்கிரஸ் கட்சியில் விரைவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கு வலு சேர்க்கும் விதமாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, எம்.பி ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரை பிரசாந்த் கிஷோர் சந்தித்து பேசியுள்ளார்.. அதே நேரத்தில், காங்கிரஸ் கட்சியில் பிரசாந்த் கிஷோரை கட்சியில் இணைக்க மூத்த தலைவர்கள் பலர் எதிர்ப்பு காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. தேசத்தையே கட்டி ஆண்ட பாரம்பரிய மிக்க காங்கிரஸ், தனது வெற்றிக்கு ஒரு தனி மனிதரை சார்ந்திருப்பதா என்ற கேள்விகளும் காங்கிரஸ் கட்சிக்குள் எழுந்து வருகிறது.

அதனால், காங்கிரஸ் கட்சியில் பிரசாந்த் கிஷோர் இணைவாரா? அல்லது அக்கட்சிக்காக தேர்தல் வியூக வகுப்பாளராக மட்டுமே செயல்படுவாரா? என்பது விரைவில் தெரியவரும்.

Leave a Reply

Your email address will not be published.

கடலூரில் கொட்டி தீர்த்த கன மழையால் வாழை மரங்கள் சேதம்: இழப்பீடு வழங்க வேல்முருகன் கோரிக்கை !!

தமிழகத்தில் நெல் சாகுபடிக்கு அடுத்தப்படியாக அதிகமாக பயிரிடப்படுவது வாழையாகும். இந்தியாவிலேயே அதிகப்படியாக வாழை…