மதமாற்ற தடை சட்டம் கண்டிக்கத்தக்கது – கர்நாடக எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா..!

கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து மத மாற்று சர்ச்சை ஏற்பட்டு வருவது வேதனை அளிக்கிறது என கர்நாடக எதிர்க்கட்சி காங்கிரஸ் தலைவர் சித்தராமையா தெரிவித்துள்ளார். நேற்று பெங்களூரில் உள்ள விதான சவுதாவில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மதமாற்றத் தடை சட்டம் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் சிறப்பு ஆணை பிறப்பிக்கப்படும் என கர்நாடக அமைச்சர் ஜே.சி மாது சாமி தெரிவித்தார். இதற்குக் கர்நாடக எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக கர்நாடக எதிர்க்கட்சி காங்கிரஸ் தலைவர் சித்தராமையா பேசும்போது தற்போது கொண்டு வரும் இந்த மதமாற்றத் தடை சட்டம் கண்டிக்கத்தக்கது.

நம் நாட்டில் உண்மையான இந்துக்கள் நல்லிணக்கத்தையும் உலகளாவிய சகோதரத்துவத்தையும் கடைப்பிடிக்கின்றனர் என கருத்து தெரிவித்துள்ளார். பா.ஜ.க ஆட்சிக்கு வரும்போதெல்லாம் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை நாம் பார்த்து வருகிறோம். இந்த அரசால் கர்நாடக மக்கள் வெட்கப்படுகிறார்கள். மேலும் இந்த அவசர சட்டத்தில் கையெழுத்திட வேண்டாம் என்று ஆளுநரை நான் வலியுறுத்துகிறேன்.
ஊழல் மற்றும் நிர்வாக குறைபாடு ஆகியவற்றிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப வே பா.ஜ.க அரசு மதமாற்றத் தடைச் சட்டத்தை அவசரச் சட்டம் மூலம் மக்கள் மீது திணிக்க முயற்சிக்கிறது. கட்டாய மத மாற்றத்தை தடுக்க கர்நாடகாவிற்கு புதிய சட்டம் தேவையில்லை. ஏற்கனவே நம்மிடம் இருக்கும் சட்டம் மூலமும் மதம் மாற்றுவதை தடுக்கக்கூடியது என்றார்.

மதமாற்றத் தடைச் சட்டத்தை தவறாக பயன்படுத்துவதைக் காங்கிரஸ் ஒருபோதும் அனுமதிக்காது. அரசால் அச்சுறுத்தப்படும் அனைவருக்கும் நாங்கள் உறுதியாக துணை நிற்போம் என சித்தராமையா தெரிவித்துள்ளார்.