சீனாவுக்கு செக் வைக்க ‘குவாட்’ உருவாக்கிய புதிய அமைப்பு !

india china

குவாட் அமைப்பின் 3-வது உச்சிமாநாடு ஜப்பான், டோக்கியோவில் கடந்த 23-ம் தேதி நடைபெற்றது. இந்நிகழ்வில் இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் பிரதமர்களும் அதிபர்களும் கலந்து கொண்டனர்.

இந்திய மற்றும் பசிபிக் பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த 2007-ம் ஆண்டு இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய 4 நாடுகள் இணைந்து “குவாட்” என்ற அமைப்பை உருவாக்கின.

இந்த அமைப்பின் 3-வது உச்சி மாநாடு, ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் கடந்த 23-ம் தேதி தொடங்கியது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், அமெரிக்க அதிபர் ஜோ பைடன ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாநாட்டில் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, புருணே, இந்தோனேசியா, தென்கொரியா, மலேசியா, நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய 13 நாடுகள் இணைந்து “இந்தோ-பசிபிக் பொருளாதார வளர்ச்சி கூட்டமைப்பை’ உருவாக்கியுள்ளன. சீனாவின் வளர்ச்சி, ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் இந்த புதிய அமைப்பு தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது .

இம்மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் மோடி பேசியதாவது:

“கொரோனா வைரஸ் நெருக்கடி காலத்தில் குவாட் கூட்டமைப்பு உறுப்பினர் நாடுகள் ஒன்றுக்கொன்று தடுப்பூசிகளையும் மருத்துவ உபகரணங்களையும் பகிர்ந்து உறுதுணையாக இருந்துள்ளன. காலநிலை மாற்றம், உணவு விநியோகச் சங்கிலி, பேரிடர் மேலாண்மை, பொருளாதார ஒத்துழைப்பு என பல வகையில் குவாட் நாடுகள் ஒற்றுமையுடன் திகழ்வது எனக்கு பெருமகிழ்ச்சி அளிக்கிறது.

இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, வளம் மற்றும் ஸ்திரத்தன்மையை இது உறுதி செய்கிறது. குவாட் கூட்டமைப்பு ஸ்திரமான கொள்கையுடன் முன்னேறிச் செல்கிறது. இது இன்னும் வலுவான கூட்டமைப்பாக உருவாகும்.

இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் அமைதிக்கு வித்திடும் அமைப்பாகவும் சக்தி வாய்ந்த அதிகாரம் மிக்க அமைப்பாகவும் குவாட் உருவெடுத்துள்ளது. உலக அரங்கில் குறுகிய காலத்தில் முக்கியத்துவமான இடத்தை குவாட் பெற்றுள்ளது.” இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேசுகையில், ‘‘உலக பொருளாதாரத்தில் சுமார் 60 சதவீதத்தை கூட்டமைப்பு நாடுகள் கொண்டுள்ளன. இதில் இடம்பெற்றுள்ள அனைத்து நாடுகளின் பொருளாதாரமும் அதிவேகமாக வளர்ச்சி அடையும்’’ என்று தெரிவித்தார்.

அடுத்த 5 ஆண்டுகளில் இந்தோ – பசுபிக் பிராந்தியத்தில் 50 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் உள்கட்டமைப்பை மேம்படுத்த குவாட் அமைப்பு முடிவு செய்துள்ளது. மேலும், உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான கட்டமைப்பை மேம்படுத்த குவாட் அமைப்பில் உள்ள உறுப்பினர் நாடுகளின் தலைவர்கள் உறுதிபூண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *