சூரியனும் சந்திரனும் ஒரே நேரத்தில் தெரிந்த இடம் …

சர்வதேச சுற்றுலா தலங்களில் ஒன்றாக கன்னியாகுமரி விளங்குகிறது. நாள்தோறும் உள்ளூர், வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்துசெல்கின்றனர்.
பல்வேறு இடங்களை சுற்றிபார்க்கும் அவர்கள் கடலில் குளித்து மகிழ்வர். இந்த நிலையில் அங்கு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நிகழும் அதிசய நிகழ்வை ஏராளமானோர் ஆர்வமுடன் நேற்று கண்டுவியந்தனர்.
கன்னியாகுமரியில் சித்ரா பவுர்ணமியன்று ஒரே நேரத்தில் சூரியன் மறைவு, சந்திரன் உதயமாகும் காட்சி தெரிவது வழக்கம். அதன்படி இந்த அபூர்வ காட்சியை பார்க்க நேற்று மாலையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரியில் திரண்டனர்.
மாலை 6 மணிக்கு சூரியன் மேற்கு பக்கம் உள்ள அரபிக்கடல் பகுதியில் சூரியன் மஞ்சள் நிறத்தில் பந்து போன்ற வட்ட வடிவத்தில் கடலுக்குள் கொஞ்சம், கொஞ்சமாக மறைந்தது. அதே சமயத்தில் வங்க கடல் பகுதியை ஒட்டியபடி சந்திரன் வான் மேக கூட்டங்களில் இருந்து வெளியே வந்தது.
இந்த அரிய நிகழ்வான கண்கொள்ளா காட்சியை முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம், சன்செட் பாயிண்ட் கடற்கரை உள்ளிட்ட பகுதியில் நின்றபடி சுற்றுலா பயணிகள் கண்டுகளித்தனர். அப்போது ஏராளமான சுற்றுலா பயணிகள் அந்த காட்சியை செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.
இதற்கிடையே கூட்டம் அதிகமாக கடற்கரையில் திரண்டதால் அங்கு அசம்பாவித சம்பவம் நடக்காமல் இருப்பதற்காக கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.