இறந்த பறவைகளை தேடி- சுடுகாடான பறவைகள் சரணாலயம் : கிருபா நந்தினி

Thumb_Article

எப்பவும் போலதாங்க செய்தித்தாள்ல சூறாவளி காரணமாக கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தில் 68 செங்கால் நாரைகள் இறந்தன என்று படித்தோம். உடனடியாக அன்றைய இரவே பேருந்து பதிவு செய்து கிளம்பினோம்.  

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ளது கூந்தன்குளம் கிராமம். திருநெல்வேலியில் இருந்து 33 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் சைபீரியா, ஐரோப்பிய நாடுகள், மியான்மர், இலங்கை, பாகிஸ்தான் நாடுகளிலிருந்து ஏராளமான வெளிநாட்டுப் பறவைகள் ஆண்டுதோறும் வந்து தங்கி முட்டையிட்டுக் குஞ்சு பொரித்து செல்கிறது. இந்த கூந்தன்குளம் 1994ஆம் ஆண்டு பறவைகள் சரணாலயமாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம்  129.33 ஏக்கர் நிலப்பரப்பில் காடன் குளம் கன்னங்குளம், சிலையம் ஆகிய பகுதி குளங்களை இணைத்து சரணாலயம் அமைக்கப்பட்டது.  

ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் மற்றும் ஜனவரி மாதத்தில் 43 இனங்களைச் சேர்ந்த 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் பறவைகள் வந்து கூடு கட்ட துவங்கும். முட்டையிட்டு குஞ்சு பொரித்து குஞ்சு ஓரளவு வளர்ந்ததும் மார்ச் – ஏப்ரல் மாதங்களில் இங்கு இருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி செல்கிறது. முட்டையிட்டு குஞ்சு பொரித்து செல்வதற்கு தேவையான காலநிலை, மணிமுத்தாறு அணையிலிருந்து திறக்கப்படும் நீர் கூந்தன் குளத்தில் உள்ள குளங்களில் உள்ள மீன்கள் ஆகியவை பறவைகள் வர காரணமாக அமைகின்றது. 

சைபீரியா நாட்டில் இருந்து பட்டைத்தலை வாத்து, ஊசிவால் வாத்து, தட்டை வாயன் செண்டு வாத்து முக்குளிப்பான் போன்ற நாரை வகைகளும் ரஷ்யா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலிருந்து வெள்ளை அரிவாள் மூக்கன், டால் மிஷன் பெலிக்கன் பறவைகள், பாம்பு தாரா செங்கால் நாரை, மூக்கு நாரை, கரண்டிவாயன் என 43 வகையான பறவைகள் இங்கு வந்து செல்வதாக ஆய்வுகள் கூறுகிறது. வனத்துறையினரின் பாதுகாப்பும் உள்ளூர் மக்கள் இந்த பறவைகளுக்கு எவ்வித இடையூறும் செய்யாததும் இங்கு ஆண்டுதோறும் பறவைகள் வருவது அதிகரிக்க காரணமாக அமைகிறது.

ஒரு இறக்கையும் இரு கால்களும் உடைந்த நிலையில் உள்ள கூழைக்கடா குஞ்சு

கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் சென்றடைந்ததும் வனத்துறையினர் தங்கும் விடுதியில் செங்கால் நாரையின் குஞ்சுகளை பாதுகாவலர் பால்பாண்டி அண்ணாவும், ஒரு வனகாப்பாளரும் கவனித்துக்கொண்டிருந்தார். அவரிடம் விசாரித்ததில் செய்தித்தாளில் வந்த அதே 68 பறவைகளை தவிர வேறு ஏதும் இறக்கவில்லை என்று சொன்னதில் ஆறுதலைடைந்தோம். பின்பு சரணாலயத்துக்குள் சென்று பறவைகளை பார்க்க கேட்டோம். கண்காணிப்பு கோபுரம் வரை தான் அனுமதி என்று எச்சரித்து அனுப்பிய போது எங்களுக்கு சந்தேகம் வந்தது ஆனால் பறவைகளை பார்க்கும் ஆர்வத்தில் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. 

கீழே விழுந்திருந்த மரத்தில் சிக்கி உயிரழந்த செங்கால் நாரைக் குஞ்சு

 ஆர்வத்தில் வேகமாக நடந்து கண்காணிப்பு கோபுரத்தின் மேல் ஏறி பறவைகளை ரசித்தோம். இயல்பாகவே தெரிந்தது. சிறிது நேரம் கழித்து யோசிக்க ஆரம்பிச்சோம். ஏன் உள்ள போக கூடாதுனு சொன்னாங்கனு. ஏனெனில் எங்கள் விஞ்ஞானியை நன்றாகவே அறிமுகமானவர். எங்கள் ஆய்வகத்திலிருந்து எனக்கு முன்னாள் ஆய்வு செய்த முனைவர் ஜெயக்குமார் அவர்கள் மூன்று வருடங்கள் கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தில் ஆய்வு செய்ததோடு மட்டுமல்லாமல், தற்போதும் இருவரும் தொடர்பில் இருப்பதால் அங்கு சென்றதும் உறவினர்களை போலவே என்னிடம் நலம் விசாரித்தனர். இந்த அளவிற்கு பரிச்சயமானவர் ஏன் எங்களை உள்ள செல்ல வேண்டாம் என கட்டளையிட்டார் என்று சந்தேகம் வலுத்தது. 

மதிய உணவிற்கு அருகிலிருந்த கிராமத்துக்கு செல்ல வேண்டியிருந்தது. சாப்பிட்டு திரும்பி யாருக்கும் தெரியாமல் சரணாலயத்துக்குள் சென்றோம். நாங்கள் செல்லும் போது ஆடு மாடு மேய்துக்கொண்டு அதே கிராம மக்களும் உள்ளே இருந்தனர். 

நாங்கள் உள்ளே நீரை கடந்து உள்ளே செல்ல செல்ல அதிர்ச்சியாகவே இருந்தது. முதலில் ஒரு சில பறவைகள் மரத்தில் இறந்து தொங்கிக்கொண்டிருந்தது. அந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் அடுத்தடுத்த காட்சிகள் தூக்கி வாரி போட்டது. ஆமாங்க நாங்கள் சந்தேகப்பட்டது சரி தான்.  இதனால் தான் எங்களை உள்ள செல்ல வேண்டாம் என கட்டளையிட்டனர் என உறுதியானது. 

நீர் கருவேல மரங்கள் வேருடன் பிடுங்கபட்டு கிடுந்தன, அதிலிருந்த கூடை கடா (Spot- billed Pelican), சென்னாரை (Painted Stork) போன்ற  பறவைக் கூடுகள் கீழே விழுந்து கிடந்தன. அருகில் சென்று பார்த்த பொழுது அந்த கூட்டிலிருந்த ஓரிரு மாதங்களான பறவைக் குஞ்சுகளும் மரத்தினடியில் நசுங்கி இறந்து கிடந்தன. சில குஞ்சுகள் இறக்கைகளும், கால்களும், ஒடிந்த நிலையில் தவித்துக் கொண்டிருந்தன. இன்னும் சில குஞ்சுகள், இந்த சூரைகாற்றுக்கு பயந்து உயிர் பிழைக்க தப்பிச்சென்ற பெற்றோர்களை எதிர்நோக்கி உணவில்லாமல் காத்துக்கிடந்தன. 

பறவை மனிதன் திரு. பால்பாண்டி 2040 சென்னாரை (Painted Stork) கூடுககளை  கணக்கிட்டுள்ளார், மகிழ்ச்சியாக சுற்றிதிரிந்த பறவைகள் தற்போதிருக்கும் நிலை கண்டு வருத்தப்பட்டுக்கொண்டே பாதிக்கபட்ட பறவைகளுக்கு உணவளித்துக்கொண்டிருந்தார். 

இவைப்பற்றி ஊர் பொது மக்களிடம் விசாரித்த பொழுது, இது தான் முதன்முறை இப்படி ஒரு சூறாவளிக்காற்று வீசீயிருப்பதாக சொல்கிறார்கள். இத்தனை காலங்கள் வளர்த்த தனது குழந்தைகள் விபத்தில் இறந்த விட்டதாக வருத்தபடுகிறார்கள். ஒரு சில வீடுகளிலும், ஓடுகளும், ஓலை கூரைகளும் தூக்கியேரியப்படடுகிடந்தன. அவர்களின் வீட்டைகாட்டிலும் பறவைகளைப்பார்த்தே வருத்தப்பட்டனர்.

இப்படி பல்வேறு இடங்களில் அவ்வப்போது நிகழும் இயற்கை சீற்றல்களுக்கு பலியாகும் உயிரணங்களின் இழப்பை எப்படி தடுக்க போகிறோம், எப்படி ஈடுசெய்ய போகிறோம் என்பது கேள்விக்குறி. 

சரணாலயம் என்றாலே பாதுகாக்கபட்ட இடம் என்று பொருள். பறவைகள், விலங்குகள் மனிதர்களின் தொல்லையின்றி சுதந்திரமாக சுற்றித்திறியும் இடம். ஆனால் முதன் முறையாக சுடுகாடு போன்ற தோற்றம் இங்கு பார்த்த அதிர்ச்சியிலிருந்து மீள பல மாதங்கள் ஆனாலும் தீர்வை நிறைவேற்ற வேண்டிய வனத்துறையே ஏன் ஆராய்ச்சியாளர்களைக் கூட உள்ளே அனுமதிக்காமல் இருந்தனர் என்ற கேள்வியும் குழப்பமும் இன்று வரை நீடிக்கிறது. 

பயணமும் காட்சியும் தொடரும்……….

முனைவர். வெ. கிருபாநந்தினி, பறவைகள் ஆராய்ச்சியாளர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *