தமிழ்நாட்டின் டிசைன் அப்படி – எந்தப் பக்கம் போனாலும் கேட் போடுறாங்களே!

ரம்ஜான், பக்ரீத் என்றால் “பிரியாணி இன்னும் வரலை” என முஸ்லிம் நண்பர்களை tag செய்து ஸ்டேட்டஸ் போடுகிறார்கள் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள்.

தீபாவளி நெருங்கும்போது, “முறுக்கு-அதிரசம்-ஸ்வீட்ஸ் எப்ப வரும்?” என்று கேட்டு tag செய்கிறார்கள் முஸ்லிம் நண்பர்கள். தீபாவளி வாழ்த்துப் போஸ்டர்களை அச்சடித்து ஒட்டுகிறார்கள்.

இதெல்லாம் தமிழ்நாட்டின் தனித்துவமாக இருக்கிறது. இந்தியாவின் பல மாநிலங்களிலும்கூட இத்தகையப் பண்பு உண்டு. அதைக் கொஞ்சம் கொஞ்சமாக சிதைத்து, “முஸ்லிம் என்றால் பாகிஸ்தானுக்குப் போ“ என்று இந்திய அணிக்காக விளையாடிய கிரிக்கெட் வீரரைக்கூட விட்டு வைக்காமல் விமர்சிக்கும் வெறித்தனத்தை வளர்த்து வைத்திருக்கிறார்கள் ஒன்றியத்தை ஆள்பவர்களும் அவர்களின் பரிவாரங்களும்.

அந்தப் பரிவாரங்களால் சிதைக்க முடியாமல் மிச்சமிருக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு முதன்மையானது. காரணம், பரிவாரங்கள் முன்னிறுத்துவது, பிறப்பினால் உருவாக்கப்படும் ஏற்றத்தாழ்வையும் மதரீதியான பிரிவினையையும்.

தமிழ்நாட்டின் பண்பு என்பது, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதே. எல்லா உயிர் என்கிறபோது அதில் மத வேறுபாடுகள் இல்லை. சாதி வேறுபாடுகள் இல்லை. ஆண்-பெண் என்ற பாலின வேறுபாடு இல்லை. மனிதப் பிறவிகள் அனைத்தும் சமம் என்கிற பண்புதான் வள்ளுவர் தொடங்கி வள்ளலார் வரையிலும் அதன் பிறகும் இந்த மண்ணில் நிலைத்திருக்கிறது.

அந்தப் பண்பாட்டுத் தளத்தில் அரசியலைக் கட்டமைத்த வரலாறு திராவிட இயக்கத்திற்கு உண்டு. நூற்றாண்டு கடந்த திராவிட இயக்கம் தனது சமூக நீதிப் பாதையில் சந்தித்த சவால்கள் ஏராளம். போராட்டத்தின் மூலமாகவும் ஆட்சியதிகாரத்தின் மூலமாகவும் சமூகநீதிப் பயணத்தை ஒவ்வொரு மைல்கற்களாக கடந்து வருகிறது.

கோயில் சொத்துகளை ஒரு சிலரே தங்கள் சொந்த சொத்து போல அனுபவித்து வந்த நிலையை மாற்றி, அதனை அறநிலையச் சட்டம் வாயிலாக அரசாங்கத்தின் நேரடிக் கண்காணிப்பில் கொண்டு வந்தது திராவிட இயக்கமான நீதிக்கட்சி. அதன் தொடர்ச்சியாகப் பல பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கோயில்களை மீண்டும் தங்கள் கைகளில் எடுத்து, கொள்ளையடிக்க பரிவாரங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. ஆனால், அந்த ஆசை நிறைவேறவில்லை. அதனால், திராவிட இயக்கத்தை இந்துக்களின் எதிரி என்று மக்கள் முன் பிரச்சாரம் செய்து பார்த்தனர். இந்து மக்களில் பெரும்பாலானவர்கள் அதை நம்பவில்லை. அவர்கள், தங்கள் ஓட்டுகளை ‘சூரிய’ பகவானுக்கு அளித்தார்கள். பரிவாரத்தினர், ‘வெற்றிவேல்.. வீரவேல்’ என்றார்கள். ஆனால், தமிழ்நாட்டில் வாழும் மக்கள் இந்து-முஸ்லிம்-கிறிஸ்தவர் என்ற மதபேதமின்றி முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினை ஆதரித்து வாக்களித்து முதலமைச்சராக்கிவிட்டனர்.

அறநிலையத்துறை வலிமையாக்கப்பட்டு, அனைத்து சாதியினரும் அர்ச்சகராக்கப்பட்டுள்ளனர். தமிழில் அர்ச்சனை செய்யப்படுகிறது. அன்னதானத் திட்டம் விரிவாக்கப்படுகிறது. அந்த அன்னதானத்தில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த அஸ்வினி என்ற பெண்ணுக்கு சோறு போடாமல் அங்கிருந்தவர்கள் விரட்டி விட்டது பற்றி அவர் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். அது காணொலியாகப் பரவியது.

இதைவைத்து ஏதாவது அரசியல் செய்யலாமா என பரிவாரங்கள் யோசித்திருந்த வேளையில், அறநிலையத்துறை அமைச்சர் அந்தப் பெண்மணியை கோயிலுக்கு அழைத்து, மரியாதை செய்து, அவருடன் சேர்ந்து சமபந்தி விருந்து சாப்பிட்டார். ஓர் அஸ்வினி மட்டுமல்ல, அவரது நரிக்குறவர் சமுதாயத்தைச் சார்ந்த பலருடைய ஆதங்கக் குரல்களும் அரசுக்கு எட்டியது.

தீபாவளி நாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாமல்லபுரம் அருகேயுள்ள பூஞ்சேரி என்ற கிராமத்தில் வாழும் அஸ்வினி உள்ளிட்ட நரிக்குறவ சமுதாயத்தவர்களுக்கும் இருளர் சமுதாய மக்களுக்கும் வீட்டுமனைப் பட்டா, சாதிச் சான்றிதழ், நலத்திட்ட உதவிகளை வழங்கி அவர்கள் மனதை மத்தாப்பூ போல சிரிக்க வைத்தார்.

அவருக்கு அஸ்வினி அணிவித்த பாசிமணி மாலை என்பது, முதல்வரின் சமூக நீதி சாதனை மகுடத்தில் மின்னுகிற வைரமாக ஒளிர்கிறது. அஸ்வினி உள்ளிட்டவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று, பார்வையிட்டு அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலினின் செயல்பாடு ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் திரும்பிப் பார்க்க வைத்தது.

தீபாவளிக்கு இரண்டு நாட்கள் முன்பு, வேலூர் அருகேயுள்ள மேலமொணவூர் என்ற இடத்தில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ள வீடுகளுக்கு நேரில் சென்று அவர்களின் நிலையைக் கண்டறிந்தார். தமிழ்நாடு முழுவதும் உள்ள முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் 317 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.

விளிம்பு நிலையில் உள்ள மக்களைத் தேடித் தேடிச் சென்று அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுகிறார் முதல்வர். இதுதான் சமூக நீதிப் பயணம்.

இந்தப் பயணத்திற்கு முடிவு கிடையாது. யாருக்கு என்ன தேவைப்படுகிறது, அது கிடைக்காத வகையில் எப்படி தடுக்கப்படுகிறார்கள். எதன் காரணமாகத் தடுக்கப்படுகிறார்கள் என்பதைத் தொடர்ச்சியாகக் கண்காணித்து செயல்படுத்த வேண்டிய பெரும்பணியே சமூக நீதிப் பயணத்தின் இலக்காகும்.

அந்தப் பயணத்தைத் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். கேப் விடாமல் இப்படி செயல்பட்டால், பரிவாரங்களால் என்ன செய்ய முடியும்?

தீபாவளிக்கு முதல்வர் வாழ்த்துச் சொல்லவில்லை, புண்படுத்திவிட்டார் என்று புலம்ப மட்டுமே அவர்களால் முடியும். முதல்வர் புண்படுத்தவில்லை. அப்படி சொல்பவர்களின் சாதி-மத அரசியலைத் தகர்த்து, தமிழ் நிலத்தை மேலும் பண்படுத்தி வருகிறார். மக்களுக்கு வாழ்த்துச் சொல்வதைவிட அவர்களின் வாழ்வை மேம்படுத்துவதற்கான செயல்பாடுகளை மேற்கொள்கிறார்.

பரிவாரத்தினர் எந்தப் பக்கம் போனாலும் அங்கே கேட் போட்டு விடுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். புலம்பாமல் என்ன செய்வார்கள்?.

-கோவி.லெனின்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *