திராவிட இயக்க கொள்கை பெட்டகம் பேராசிரியர் க.அன்பழகன் நூற்றாண்டு சிறப்பு தொகுப்பு

தி.மு.க-வை தோற்றுவித்த அண்ணாவின் – பலமே மாணவர்களும் தம்பிகளும் தான். அதில் தம்பிகளில் மூத்த தம்பியாக தளபதியாக கருணாநிதி நிற்க, மாணவனாக, பின் பேராசியராக அண்ணாவின் தளபதியாக நின்றவர்தான் க.அன்பழகன்.

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில், காட்டூர் எனும் கிராமத்தில், கல்யாணசுந்தரம் – சுவர்ணாம்பாள் தம்பதிக்கு மகனாக,1922-ம் ஆண்டு டிசம்பர் 19-ம் தேதி, பிறந்தவர் இராமையா. சின்னஞ்சிறிய வயதிலேயே, சுயமரியாதைக் கொள்கைகள் தாங்கிய அந்தச் சிறுவன் வளர்ந்தபிறகு துடிப்புமிக்க சுயமரியாதைக் கொள்கை பிரசாரகராக மாறுகிறார். தன் பெயரையும் தனித் தமிழில் அன்பழகன் என மாற்றிக் கொண்டார். வசீகர மொழியாலும் துல்லியமான தரவுகளாலும், தன் பேச்சை கேட்போர் அனைவரையும் கட்டிப் போடும் திறமையாளனாக திகழ்ந்தார். எல்லோரும் அண்ணாவின் பேச்சுக்காக காத்திருக்க, அண்ணாவையே தன் பேச்சால் கலங்கடித்தவர் தான் அன்பழகன். 

1942-ம் ஆண்டு திருவாரூர், விஜயபுரத்தில் இஸ்லாமிய இளைஞர்கள் நடத்திய சிக்கந்தர் விழாவில் அன்பழகனுக்கும் கருணாநிதிக்கும் அறிமுகம் கிட்டுகிறது. தன் ஊரில் நடக்கும் கூட்டங்களுக்கு அன்பழகனை, கருணாநிதி பேச அழைக்க இருவரும் நெருங்கிய நண்பர்களாயினர். அந்த நட்பு கருணாநிதி மறையும் வரையிலும் கிட்டத்தட்ட 74 ஆண்டுகள் நீடித்தது.அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில், தான் படிக்கும் காலத்தில் தன் நண்பர்களுடன் இணைந்து சுயமரியாதை இயக்கக் கொள்கைகளைப் பரப்பினார் அன்பழகன். அறிஞர் அண்ணாவையும் தன் பல்கலைக்கழகத்தில் பேச வைத்து மாணவர்களின் மனங்களில் திராவிட இயக்கக் கொள்கைகளை விதைத்தார்.

கல்லூரிப் படிப்பு முடிந்து, இயக்கத்துக்காக பணியாற்றத் துடித்த அன்பழகனை தந்தை பெரியாரும் அறிஞர் அண்ணாவும்தான், “படித்த இளைஞன் நீ ஆசிரியனாக இரு” என்று அறிவுரை சொல்லி அனுப்பி வைத்தார்கள். அதன்படி பச்சையப்பன் கல்லூரியில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றிக்கொண்டே தான் நடத்தி வந்த, `புதுவாழ்வு’ இதழின் மூலம் சுயமரியாதை இயக்கக் கொள்கைகளைப் பரப்பி வந்தார் அன்பழகன். 

பின்னர் பெரியாரிடமிருந்து பிரிந்து அண்ணா, தி.மு.கழகத்தை தோற்றுவிக்க அதில் இணைந்து அண்ணாவின் தளபதியானார். 1957-ல் தி.மு.க பங்கேற்ற முதல் தேர்தலில் எழும்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார் அன்பழகன். தொடர்ந்து சட்டமன்ற மேலவை உறுப்பினராக ஒருமுறை, நாடாளுமன்ற உறுப்பினராக ஒருமுறை, சட்டமன்ற உறுப்பினராக எட்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். சுகாதாரத்துறை, கல்வித்துறை, நிதித்துறை அமைச்சராகவும் மக்கள் பணியாற்றிருக்கிறார். சுகாதாரத்துரையிலும் கல்வித்துறையிலும் இந்தியாவின் பல மாநிலங்களுக்கு தமிழகம் முன்மாதிரியாக இருப்பதில் அன்பழகனின் பணி அளப்பரியது. 

அண்ணாவின் மறைவுக்குப் பிறகு அடுத்த யார் முதல்வராக வருவது என்பதில் தி.மு.க.வில் இருவேறு கருத்துகள் நிலவின. கருணாநிதி தலைமையிலும் நாவலர் நெடுஞ்செழியன் தலைமையிலும் இருவேறு அணிகள் பிரிந்தன. அதில் தன் கல்லூரி நண்பர், தன், தமிழ் இலக்கிய மன்றத் தோழர் நெடுஞ்செழியனின் பக்கம் செல்லாமல் கருணாநிதியின் பக்கம் நின்றார் அன்பழகன். அண்ணாவுக்குப் பிறகு இயக்கத்தை வழிநடத்த, தன்னைவிட, நெடுஞ்செழியனை விட, மற்ற எல்லோரையும்விட கருணாநிதிதான் சரி என்பதை அப்போதே அறிந்திருந்தார் அன்பழகன். அதைப் பின்னாளில் தான் கலந்துகொண்ட பல கூட்டங்களில் வெளிப்படுத்தவும் செய்திருக்கிறார் அவர். எம்.ஜி.ஆர் தி.மு.க கழகத்தை உடைத்து தனிக்கட்சி ஆரம்பித்தபோது, நம்பிக்கைக்குரிய பலர் அவருடன் செல்ல கருணாநிதியின் கரம் பற்றி உற்றத்தோழனாய் உடன்நின்றார் அன்பழகன்.அதனால்தான், தன்னைப் பற்றி அறிமுகப்படுத்திக்கொள்ளச் சொன்னால்,

‘மனிதன்,அன்பழகன்,சுயமரியாதைக்காரன்,அண்ணாவின் தம்பி,கலைஞரின் தோழன்’இப்படித்தான் அறிமுகப்படுத்திக்கொள்வேன் எனக் கூறி, தன் வாழ்நாள் முழுவதும் அதன்படி வாழ்ந்தும் காட்டினார் அன்பழகன்.

கருணாநிதியும் அன்பழகனின் மீது மிகுந்த மதிப்பு வைத்திருந்தார். கட்சியின் பொதுச்செயலாளர், எம்.எல்.ஏ சீட், அமைச்சர் பதவி என்பதையெல்லாம் தாண்டி, “திராவிட இயக்க ஆரம்ப காலத்தில் எங்களைப் போன்ற மாணவர்களை எல்லாம் வழிநடத்திய பேராசியர் அன்பழகன்” என ஒரு பொதுக்கூட்டத்தில் பேசினார் கருணாநிதி. “தி.மு.க, திராவிட இயக்கக் கொள்கைகளைப் பற்றி பேசுவதை விட்டு, அப்போதைய அரசியல் சூழல்களைப் பற்றி மட்டும் பேசி, அதன் போக்கிலேயே கட்சி வளைந்தபோதெல்லாம் கட்சியை கொள்கையின் பக்கம் திருப்பி, இப்போதும் எங்களுக்கெல்லாம் ஒரு ஆசிரியராகச் செயல்படுவர் அன்பழகன்” என அதே மேடையில் சொல்லிப் பெருமைப்பட்டார் கருணாநிதி. “நாங்கள் உங்களுக்காகப் பேசுகிறோம்… பேராசிரியர் எங்களுக்காகப் பேசுகிறார்… அதன் அர்த்தம் என்னவென்றால்… நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் எங்கள் உரையில் இருக்கும். நாங்கள் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் பேராசிரியரின் உரையில் இருக்கும்” என பல மேடைகளில் பேசியிருக்கிறார் கருணாநிதி. 

கருணாநிதிக்கு அப்போதிருந்த பேருக்கும் புகழுக்கும் அவர் அப்படிப் பேசவேண்டிய அவசியமே இல்லை. வேறு எந்தத் தலைவரும் இப்படிப் பேசுவார்களா எனவும் தெரியவில்லை. ஆனால், அன்பழகனுடனான நட்பு அவரை அப்படிப் பேச வைத்தது. கருணாநிதி, அன்பழகன் நட்பென்பது தனிப்பட்ட இரு மனிதர்களின் நட்பாக மட்டுமல்லாமல், திராவிட இயக்கக்கொள்கையைக் காத்திடும் நட்பாக, தி.மு.கழகத்தை காத்திடும் நட்பாக, தமிழக மக்களின் நலனை மேம்படுத்தும் நட்பாகவே கடைசி வரையிலும் இருந்தது. அன்பழகன் எனும் சுயமரியாதைக்காரனின் வாழ்வில் கருணாநிதியுடனான நட்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *