கலகலப்பு கஃபே – பாலிடிக்ஸ் கார்னர்

Kala_Cafe_TheNEWSLite

“என்னடா மொசக்குட்டி… இன்னைக்கு என்ன இம்புட்டு லேட்டா வந்திருக்க? வீட்டுல பொங்கல் வைக்க லேட்டாயிடுச்சா?”

“பொங்கலெல்லாம் லேட்டாகல சித்தப்பு… அவனவன் வீட்டு வாசலையே வளைச்சுப் போட்டு பொங்கல் கோலமா போட்டு வச்சிருக்காய்ங்களா… அதை மிதிக்காம கடந்து வர்றதுக்கு ரொம்பவே லேட்டாயிடுச்சு சித்தப்பு!”

“ஆக, ஒவ்வொரு வீட்டுலயும் கோலம் போடுற பொண்ணுங்கள ரசிச்சுக்கிட்டே வந்திருக்கன்னு சொல்லு… அதான் இம்புட்டு லேட்டா?!”

“யோவ்… கடுப்பக் கெளப்பாதைய்யா! உன்னோட காலத்துல தான் பொண்ணுங்க கோலம் போட்டிருப்பாங்க… இப்பல்லாம் ஆண்ட்டிங்களும் பாட்டிகளும் தான்யா கோலம் போடுறாங்க… அதாவது, உன்னோட காலத்துல பொண்ணுங்களா இருந்தவங்க தான் சித்தப்பு!”

“சரிசரி… எதிர்க்கட்சிங்க மாதிரி இந்த சின்ன விசயத்துக்கெல்லாம் டென்ஷனாகாத!”

“எதிர்க்கட்சிங்க எதுக்கு சித்தப்பு டெனஷனாம்? என்ன மேட்டர்?”

“தமிழ்நாடு கவர்மெண்ட் கொடுத்த பொங்கல் தொகுப்புல பணம் எதும் குடுக்கலைன்னு டென்ஷனாகி, அரசியலாக்குனாங்க… ஆனா, தேர்தல்ல ஓட்டு வாங்கணும்கறதுக்காக தான நீங்க பணம் குடுத்தீங்க… அதுக்கு முன்ன வெறும் பொங்கல் பரிசு மட்டும் தான குடுத்தீங்கன்னு ஆளுங்கட்சி மடக்கிடுச்சிடா மொசக்குட்டி!”

“அதும் சரிதான… இப்டி மடக்குனா இன்னும் கடுப்பாவாரே எடப்பாடி?”

“ஆமாடா மொசக்குட்டி… உடனே, பொங்கல் தொகுப்புல குடுத்த வெல்லமெல்லாம் உருகிடுச்சுன்னு அடுத்த பிரச்சனைய கெளப்புனாங்கடா!”

இதெல்லாம் ஓவரா இருக்கே சித்தப்பு… எங்க வீட்டுல குடுத்ததெல்லாம் நல்லா கெட்டியாத்தான இருந்துச்சு… விட்டால் கவர்மெண்ட் குடுத்த கரும்பு கருப்பா இருந்துச்சு… கோடு கோடா இருந்துச்சு… எண்ணெய் தண்ணியா இருந்துச்சுன்னு கூட புகார் சொல்வாங்க போலயே!”

“சொன்னாலும் சொல்வாய்ங்கடா மொசக்குட்டி… இந்த பிஜேபி பஞ்சாப் விவகாரத்த வச்சு அரசியல் பண்ற மாதிரியே தான்டா இதும் இருக்கு! நாட்டுக்கே பாதுகாப்பு தர்றதா சொன்ன பிரதமரு… இப்ப தனக்கே பாதுகாப்பில்லைன்னு புலம்புறாரே!”

“அதான சித்தப்பு… போன பார்லிமெண்ட் எலக்சன்ல ‘ராணுவ வீரர்களைக் கொன்னுட்டாங்க, ராணுவ வீரர்களுக்கு பாதுகாப்பு தர, தேச பக்தியோட எங்களுக்கு ஓட்டு போடுங்க’ன்னு கேட்டாரு… இந்த முறை, ‘எனக்கே பஞ்சாப்ல பாதுகாப்பில்ல… எனக்கு ஓட்டு போடுங்க, பஞ்சாப்ப காப்பாத்துவோம்’னு ஓட்டு கேக்குற ஐடியாவுல இருக்காராம்!”

“அடப்பாவத்த… இந்த அளவுக்கு இறங்கிட்டாராடா மொசக்குட்டி… இப்போ உத்தரப்பிரதேசத்துல யோகி நிலவரமே கலவரமாமேடா?!”

“ஆமா சித்தப்பு… அவரு வழக்கம்போல பசு…புனிதம்… அப்டின்னு சீன் போட நினைச்சாரு… ஆனா எதிர்தரப்புல அகிலேஷ் யாதவ் சமூகத்தோட குடும்பத்துல பசுவும் ஒரு உறுப்பினராவே இருக்குறதால, யோகியோட பசு… புனிதம்… சீனெல்லாம் பலிக்கல! ராமரை வைத்து அரசியல் பண்ண யோகி நினைச்சாப்ல… கிருஷ்ணரை வச்சும் அரசியல் பண்ணப் பார்த்தாப்ல… ஆனா கிருஷ்ணர் தான் யாதவர்களோட செல்லப்பிள்ளை! அதனால அந்த திட்டமும் எடுபடல!”

“அதானேடா… அப்போ யோகிக்கு சிக்கல் தானே!”

“ஆமா சித்தப்பு! அதோட இப்போ ஓ.பி.சி…. சமூக மக்களும்… யாதவ மக்களும்… தலித் மக்களும்… எங்களுக்கு யோகி கவர்மெண்ட் எந்த நல்லதுமே பண்ணலைன்னு கொதிச்சுட்டாங்க சித்தப்பு!”

“ஏண்டா, இதைச் சரிக்கட்டத்தான இந்த தேர்தல 20% முஸ்லிம்களுக்கும், 80% இந்துக்களுக்குமான போர்னெல்லாம் யோகி கிளப்பிவிட்டாரு!”

“க்கும்… அவரு கிளப்பி விட்டதுல இப்போ அவரோட கட்சி அமைச்சருங்க… எம்.எல்.ஏக்கள் தான் மொத்தமா ராஜினமா பண்ணத் தொடங்கிட்டாங்க சித்தப்பு! இதுவரைக்கும் 3 அமைச்சருங்க… 8 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா பண்ணி அகிலேஷ் யாதவோட கட்சியில சேர்ந்துட்டாங்க சித்தப்பு! இதுல ஒரு அமைச்சர், அம்மாநில துணை முதல்வரோட பங்காளி வேற! அதான் யோகி… மோடி… அமித்ஷா செம்ம கடுப்புல இருக்காங்க சித்தப்பு!”

“ஏண்டா மொசக்குட்டி… அமித்சான்னு சொன்னதும் தான் நினைவுக்கு வருது, அமித்சா நம்ம தமிழ்நாடு எம்.பி.க்களை சந்திக்கவே முடியாதுன்னு வம்பு பண்றாரே… ஏன்டா?”

“க்கும்… கங்கனா ரனாவத் மாதிரி வி.ஐ.பி.ங்கன்னா பாப்பாரு… தமிழ்நாட்டு எம்.பி.க்கள் கங்கனா அளவுக்கு வொர்த் இல்ல போல!!”

“அதவிடுடா… இந்த கீர்த்தி சுரேஷ் புள்ளைக்கு கொரோனாவாமே…தனிமைப்படுத்துக்கிச்சேடா!”

“ரசிகர்கள் இப்டில்லாம் வருந்தக்கூடாதேன்னு தான் சண்டைக்கோழி 2, அண்ணாத்தேன்னு கீர்த்தி சுரேஷோட படமா டிவியில போட்டாங்க! ஹஹஹ!”

– புத்தன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *