தமிழ் சினிமா வரலாறு பாகம் இரண்டு (1947-1977) : சாதனையில் சரித்திரம் கண்ட பராசக்தி.

Shivaji_Special Article _TheNEWSLite

கலைத்துறையில் வளரும் நிலையில் அதீத திறமையே கூட ஒருவகையில் ஆபத்துதான். அதுவே வளர்ச்சிக்குத் தடை உண்டாக்கும். கணேசனாக இருந்த அன்றைய சிவாஜி இதை நேரடியாக அனுபவித்தார்.“சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்” வெற்றி பெற்றாலும் அந்த வெற்றி கே.ஆர்.ராமசாமிக்கு திருப்தியை தரவில்லை. காரணம் கதையின் முதன்மை பாத்திரமான  சந்திரமோகன் பாத்திரத்தில் நடித்தும்  துணை பாத்திரமான சிவாஜிக்கு ஒட்டுமொத்த பெயரும் போனதில் ராமசாமிக்கு கூடுதல் வருத்தம், இதனால் அந்த சிவாஜி கண்ட இந்து ராஜ்யத்தை  முதல்  மேடையோடு நிறுத்திக்கொண்டதோடு அல்லாமல் கணேசனையும்  கழட்டி விட்டார். அவரை தனியாக விட்டு மொத்த குழுவும் திண்டுக்கலுக்கு  அண்ணாவின் ஓர் இரவு நாடகம் போட புறப்பட்டு சென்றது .

அனாதையாக தனித்து நின்ற சிவாஜியை அறிந்த அண்ணாதுரை அவர்கள் ஆறுதல் சொல்லி  கணேசனை தன்னோடு அழைத்துக்கொண்டு காஞ்சிபுரம் வந்துவிட்டார் . உலகில் ஒரு சிலருக்குத்தான் பெயர் அப்படி பொருந்தும் அண்ணாவும் அதுபோல ஒருவர் பாருங்கள். அவர் வளர்த்த தம்பிகள் எம்.ஜி.ஆர், கலைஞர், சிவாஜி மூன்று பேருமே அடுத்த ஐம்பது வருடம் தமிழ் நாட்டின் முடிசூடா மன்னர்களாக திகழ்ந்தார்கள்.

அண்ணாவின் அரவணைப்பில் கொஞ்ச நாள் காஞ்சிபுரத்தில் காலம் கழித்த கணேசனுக்கு  வாய்ப்பு சக்தி நாடக சபா மூலம் வந்தது.  வீரபாண்டிய கட்டபொம்மன்,  படகோட்டி, எங்க வீட்டுப் பிள்ளை என பின்னாளில் பல வெற்றி படங்களுக்கு வசனம் எழுதிய சக்தி கிருஷ்ணசாமி தான் இந்த சக்தி நாடகசபாவை நடத்தி வந்தார். அதுவரை அந்த குழுவில் நடித்து வந்த எம்.என்.நம்பியார் என்ற நடிகருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வரவே அவர் குழுவை விட்டு போக, அந்த இடத்துக்கு ஒரு சரியான நடிகன் தேவை என்ற நிலையில் தான் பலரும் கணேசனை பரிந்துரைத்தனர்.  உடனே சக்தி கிருஷ்ணசாமி அண்ணாவிடம் கணேசனை தங்கள் குழுவுக்கு அனுப்பும் படி கேட்க அண்ணாவும் உடனே அனுப்பி வைத்தார் .

“விதி” எனும் நாடகத்தில் சிவாஜிக்கு வில்லன் வேடம் பெங்களூரில் நாடகம் நடந்து கொண்டிருக்கும் போது, அப்போதுதான் முன் வரிசையில் பெரியார் அமர்ந்திருப்பதை பார்த்து கணேசனுக்கு பதட்டம். விதியின் உணர்ச்சி மிகுந்த கிளைமாக்ஸ் காட்சியில் பெரியார் தேம்பி தேம்பி குழந்தை போல அழத் தொடங்கிவிட்டார் . இறுதிக்காட்சியில் கணேசன்  ஹீரோவை துப்பாக்கியால் சுட்டுவிட்டு பின் ஹீரோயின் வந்த உடன் அவளிடம் நல்லவன் போல நடிக்க வேண்டும். அப்போது ஹீரோயின் கணேசனை எதிர்பாராவிதமாக சுட கணேசன் சாகவேண்டும் . அது போலவே ஹீரோயின் சுட்டுவிட அப்போது கணேசனாக நடித்துக்கொண்டிருந்த நம் சிவாஜி உடனே விழாமல் கொஞ்சம் உணர்ச்சிகளை வெளிக்காட்டி நிதானித்து பின் ஒரு கூட்டிகரணம் போட்டு கைதட்டலுடன் விழுவார் . அவர் இப்படி செய்யும் போதே, அதுவரை பதட்டத்துடன் பார்த்துக்கொண்டிருந்த பெரியார் டேய் கணேச சுட்டாச்சு விழுடா விழுடா என கத்த அது நடித்துக்கொண்டிருந்த சிவாஜிக்கு தொந்தரவாக சட்டென விழவேண்டியதாகிப்போனது .

பிற்பாடு மேடைக்கு வந்த பெரியார் இந்த கணேசனுக்கு நான் சிவாஜி பட்டம் குடுத்துருக்கேன் ஏன் யாரும் அதை பயன்படுத்தமாட்டேங்குறீங்க திட்டி பின் அனைவரையும் பாராட்டி பேசினார் .

ஒரு பக்கம் கணேசனாக சிவாஜி சக்தி  நாடக சபாவில் ஊர் ஊராக முகாமிட்டு கலக்க இன்னொரு பக்கம் பராசக்தி என்ற நாடகத்தை பார்த்த வேலூர் நேஷனல் பிக்சர்ஸ் எஸ்.ஏ.பெருமாள் அவர்கள்  தயாரிப்பாளர் ஏ.வி.மெய்யப்ப செட்டியாரோடு சென்று நாடகத்தை  பார்த்து கதை உரிமை வாங்கிக்கொண்டார்

அதன் பிறகு முதலில் எஸ்.ஏ.சாமி இயக்குனராக ஒப்பந்தம் செய்து திருவாரூர் தங்கராசுவை வசனம் எழுத பணித்திருந்தார். எம்ஜிரை உருவாக்கிய இந்த எஸ்.ஏ.சாமி தான் முதன் முதலாக சிவாஜியை திருச்சிக்கு சென்று பார்த்து அவரை தயாரிப்பாளர் மெய்யப்பனிடம் ஓகே செய்தார் .

அதன்பின் மறுநாளே ஒரு டாட்டா விமானத்தில் சிவாஜியை திருச்சியிலிருந்து ஏவி.எம்.மெய்யப்பன் வரவழைத்து மேக் அப்  டெஸ்ட்  போட ஏற்பாடு செய்தனர் ஏவி.எம்.மெய்யப்பன் அவர்கள் பிற்பாடு  சாமிக்கும், மெய்யப்பன் ஆகியோருக்கும் உண்டான கருத்து  மோதல் காரணமாக கிருஷ்ணன் பஞ்சு இரட்டையர்களை இயக்குனராக ஒப்பந்தம் செய்ய  உடன்  வசன கர்த்தாவாக கருணாநிதி ஒப்பந்தமானார். ஏவி.எம்.மெய்யப்பன் அவர்கள் வாழ்க்கையில் இது ஒரு ஆச்சரியமான பொருத்தப்பாடு, இதை சினிமா பாசையில் செண்டிமண்ட் என்றும் சொல்வார்கள்  பராசக்தியில் எப்படி முதலில் ஒரு இயக்குனரை போட்டு பின் மாற்றி அது வெற்றி படம் ஆனதோ அது போல, பிற்பாடு களத்தூர் கண்ணம்மாவில் செய்தார் அதுவும் சரித்திர வெற்றி  முதல் அந்த படத்துக்கு ஒப்பந்தமானவர் கே எஸ். பிரகாஷ். சிவாஜி இரட்டை வேடத்தில் நடித்த உத்தமபுத்திரன் போன்ற படங்களை எடுத்தவர் பிற்பாடு, அவருக்கும் மெய்யப்பன் பிரச்சனை உண்டாக பிற்பாடுதான் பீம் சிங் இயக்கினார் இப்படி அவரால்  திணிக்கப்பட்ட கிருஷ்ணன் பஞ்சு, பீம் சிங் இருவருமே தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த இயக்குனர்களாக கோலேச்சியவர்கள் என்பது கவனிக்கதக்கது.

அப்படிப்பட்ட துணிச்சலும் மதி நுட்பமும் நிறைந்த தயாரிப்பாளர் ஏவி.எம்.மெய்யப்பன் முடிவுக்கே மாற்று முடிவு செய்யும் வல்லமை கொண்டிருந்தார்கள் ஸ்டுடியோவின் ஒலிப்பதிவு செய்பவர்கள்.

அன்றைய நாளில் ஒலிப்பதிவு பொறியியல் செய்பவர்களின் கெடுபிடி அதிகம் அவர்கள் தயாரிப்பாளர்  இயக்குனரையே பயமுறுத்தி தங்களை அதிகாரமிக்கவர்களாக தக்க வைத்துக் கொண்டார்கள்.முதல் நாள் சிவாஜி சொல்ல வேண்டிய முதல் வசனம் சக்ஸஸ். சிவாஜி இதை சொல்ல  டேக் ஓகே ஆனது. ஆனால் ஒலிப்பதிவு செய்தவருக்கோ அது சக்தக் சத்கத் என்பதாக சொல்லி நிராகரித்தனர்.

அடுத்ததாக சிவாஜி வய மீன் போல குவிப்பதாகவும் அது சரியில்லை என்று தயாரிப்பாளரிடம்  ஹீரோவை மாற்ற சொல்லி பரிந்துரைத்தனர். உண்மையில் சிவாஜி அக்காலங்களில் பல வறுமைகளை சந்தித்து போராடி வந்ததால் உண்மையில் அவர் முகம் படு இறுக்கமாகவும்  இருந்தது.

இதனால் செட்டியார் எதற்கு ரிஸ்க் நம் கே.ஆர்.ராமசாமியை ஹீரோவாக போடலாம். ஏற்கனவே அவர் நடித்த ஓர் இரவு, வேலைக்காரி ஆகியவை வெற்றிப்படங்களாக இருந்ததால் இதை மெய்யப்பன் பெருமாளிடம் சொல்ல பெருமாள் அவர்களோ பிடிவாதமாகவே மறுத்து. சிவாஜிதான் நாயகன் இரண்டு மாதம் டைம் கொடுங்கள் நான் மாற்றிக்காட்டுகிறேன் என சொல்லி சிவாஜியை சொல்லியபடி வேலூரில் ஒரு வீட்டில் தங்க வைத்து தினசரி போஷக்கு உணவுகளை கொடுத்து சொன்னது போல சிவாஜி முகத்தை பளபளவென ஆக்கி அழைத்துவந்தார், இடைப்பட்ட காலத்தில் எஸ்.எஸ்.ராஜேந்திரன் உள்ளிட்ட அன்றைய நாளின் பல நடிகர்களுக்கு இந்த படத்துக்கான மேக் அப் டெஸ்ட் எடுக்கப்பட்டது. ஆனாலும் பெருமாள் பிடிவாதமாக கணேசன் தான் நாயகன் என்பதில் பிடிவாதமாக இருந்தார். இறுதியில் கணேசனே முடிவு செய்யப்பட்டு படப்பிடிப்பு வேலைகளும் துவங்கப்பட்டன .

நாடக வடிவில் அக்காலத்தில் புகழ்பெற்ற பராசக்தியின் கதையை எழுதியவர் பாவலர் பாலசுந்தரம். கோவை சென்ட்ரல் ஸ்டூடியோஸ் தான் முதலில் இதை படமாக்க முடிவு செய்தனர். அப்போது டி. எஸ்.நடராஜன் குழு நடத்தி வந்த “என் தங்கை” என்ற நாடகமும் சிவாஜி நடித்து அதிகமாக பேசப்பட்டு வந்தது. இரண்டையும் சேர்த்து சினிமாவுக்கு திரைக்கதை எழுதலாம் என அவர்கள் முடிவு செய்த போது அதற்கு டி.எஸ்.நடராஜன் சம்மதிக்கவில்லை. அதனால் திட்டம் அதோடு கைவிடப்பட்டது.

பிற்பாடு தான் பெருமாள் அவர்கள் பராசக்தியை பார்த்து சினிமாவாக்க முன் வந்து தான் டிஸ்ட்ரிபூஷன் செய்து வந்த ஏவி.எம் நிறுவனத்திடம் படத்தை எடுத்து தர  கோரிக்கை வைத்ததும் ஏவி.எம் ஒத்துக்கொண்டதும் கடந்த பகுதிகளில் பார்த்தோம்.

இப்படி பல பிரச்சனைகளுடன் துவங்கிய பராசக்தியின் பிற்பாடு தமிழ் சினிமா வரலாற்றின் மிகப்பெரிய திருப்புமுனையை உருவாக்கி  இன்றுவரையும் அது மகத்தான தமிழ் சினிமாக்களில் முதலிடத்தில் இருக்கிறது என்றால் அதன் சிறப்புக்கு காரணம் ?

(தொடரும்)

– எழுத்தாளர். அஜயன் பாலா.

பின் குறிப்பு : ஆசிரியரின் தமிழ் சினிமா வரலாறு பாகம் ஒன்று 1916-1947 நாதன் பதிப்பகம் வெளியீடாக நூலாக வெளி வந்துள்ளது. அதனைத்தொடர்ந்து  இரண்டாம் பாகமாக இத்தொடர் 1948 துவங்கி தமிழ் சினிமாவின் முக்கிய வரலாற்றுத்தடங்களை விவரிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *