தமிழ்நாட்டின் டிசைன் அப்படி – இதெல்லாம் நம்புற மாதிரியாங்க இருக்கு?

Election Spl Article_The News Lite

மக்களாட்சி எனப்படும் ஜனநாயகத்தின் ஆணிவேர் உள்ளாட்சி அமைப்புகளில்தான் இருக்கிறது. ஒன்றிய அரசு, மாநில அரசுகள், உள்ளாட்சி அமைப்புகள் என்ற மூன்று நிலைகளில் மக்களுக்கான ஆட்சி நிர்வாகம் இந்தியாவில் உள்ளது. ஒன்றிய அரசு, மாநிலங்களை அடக்கி வைத்திருக்கவே விரும்புகிறது. மாநில அரசுகள், உள்ளாட்சி அமைப்புகளைத் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க விரும்புகின்றன.

தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகள் படாதபாடு படுவது வழக்கம். மூன்று முறை முதல்வரான எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் ஒரே ஒரு முறைதான் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அப்போதும்கூட, சென்னை மாநகராட்சிக்குத் தேர்தல் நடைபெறவில்லை.

ஜெயலலிதாவின் 1991-96 ஆட்சிக்காலத்திலும் தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறவில்லை. 1996ல் கலைஞர் தலைமையில் தி.மு.க ஆட்சி அமைந்தபோது, பெண்களுக்கு 33% இடஒதுக்கீட்டுடன் அப்போது இருந்த 6 மாநகராட்சிகள் உள்பட தமிழ்நாட்டின் நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி அமைப்புகளுக்கான உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற்றன. 2001ல் அ.தி.மு.க ஆட்சியிலும், 2006ல் தி.மு.க ஆட்சியிலும், 2011ல் அ.தி.மு.க. ஆட்சியிலும் உள்ளாட்சித் தேர்தல்கள் தமிழ்நாட்டில் நடைபெற்றன.

ஆளுங்கட்சியாக எந்தக் கட்சி இருக்கிறதோ அந்தக் கட்சியே உள்ளாட்சி அமைப்புகளில் இடம்பெறுவது வாடிக்கையாக இருந்தது. தேர்தலை நடத்துவது, மாநில தேர்தல் ஆணையம் என்பதால், அது ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவது பற்றி எதிர்க்கட்சி தரப்பில் குற்றச்சாட்டு வைப்பதும் வழக்கமானது.

2001 உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மாநகராட்சிக்கான வாக்குகள் எண்ணப்பட்ட மையங்களில் அப்போதைய ஆளுங்கட்சியான அ.தி.மு.க, எதிர்க்கட்சி தி.மு.க வேட்பாளர்கள், முகவர்கள் நடத்திய கொலைவெறித் தாக்குதல் மரண பயத்தை உண்டாக்கியது. 2006ல் சென்னை மாநகராட்சித் தேர்தல் வாக்குப்பதிவின் போது, அப்போதைய ஆளுங்கட்சியான தி.மு.க.வின் நிர்வாகிகள் பல பூத்களைக் கைப்பற்றி, வாக்காளர்களை விரட்டிவிட்டு அவர்களே மொத்த வாக்குகளையும் பதிவு செய்தது, நீதிமன்றத்தின் கண்டனத்திற்குள்ளாகி, மறுதேர்தல் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இரண்டு தேர்தல்களிலும் மாநில தேர்தல் ஆணையம்-அதிகாரிகளின் போக்கு ஆளுங்கட்சிக்கு ஆதரவாகவே இருந்தது.

2001 தேர்தல் கலவரம்

அ.தி.மு.க ஆட்சியில் இருந்த 2011 தேர்தலிலும் அதே நிலை நீடித்தது. 2011ல் நடத்தப்பட வேண்டிய உள்ளாட்சித் தேர்தலில், பழங்குடி மக்களுக்கான ஒதுக்கீடு சரி வர இல்லாததால், அது தொடர்பான வழக்கை காரணம் காட்டி, ஆளுங்கட்சியினர் தேர்தலை நடத்தாமல் காலந்தாழ்த்தினர். வழக்குப் போட்ட எதிர்க்கட்சி பழியைப் போட்டனர். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, 2020ல் கிராமப்புற (ஊரக) உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் தேர்தலை நடத்தியது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசு.

குடம், குத்துவிளக்கு, பணம், காமாட்சி விளக்கு, அரிசி மூட்டை, மளிகை சாமான்களுக்கான டோக்கன் என வாக்காளர்களுக்கு ஆளுங்கட்சி தரப்பு அள்ளி வழங்கியது. பொன் வைக்க வேண்டிய இடத்தில் பூ வைத்தன எதிர்க்கட்சிகள். மாநிலத் தேர்தல் ஆணையம் வழக்கம்போல ஆளுங்கட்சிக்கு சாதகமாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. வாக்கு எண்ணிக்கையின்போது சில பல இடங்களில் எதிர்க்கட்சியினரை விரட்டி அடித்தனர். அப்படி இருந்தும், ஆளுங்கட்சியைவிட எதிர்க்கட்சி வேட்பாளர்களே அதிக இடங்களில் வெற்றி பெற்றனர். ஊரக உள்ளாட்சித் தேர்தலில் எதிர்க்கட்சியின் வெற்றி என்பது தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் ஆச்சரியமானதாப் பார்க்கப்பட்டது. ஆனாலும், கவுன்சிலர்களால் தேர்ந்தெடுக்கப்படும், ஊராட்சி மன்றத் தலைவர், ஊராட்சி ஒன்றியத் தலைவர், மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவிகளின்போது எதிர்க்கட்சி உறுப்பினர்களை விலை பேசி, ஆளுங்கட்சி தனது ஆட்களை தலைவராக்கிய ஜனநாயக ஏலம் அமோகமாக நடந்தது.

தற்போது மாநகராட்சி-நகராட்சிகளுக்கானத் தேர்தல் பிப்ரவரி 19ந் தேதி நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 22ந் தேதி வாக்கு எண்ணிக்கை. அதில் வெற்றி பெறும் கவுன்சிலர்களைக் கொண்டு, மார்ச் 4 அன்று மேயர்களையும் சேர்மன்களையும் தேர்ந்தெடுக்கும் மறைமுகத் தேர்தல் நடைபெறும். வாக்குக்குப் பணம், வென்றவர்களிடம் பேரம், தலைவர் பதவி ஏலம் என உள்ளாட்சித் தேர்தலுக்கான குணாம்சங்கள் அத்தனை எளிதாக மாறப்போவதில்லை.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் எவ்வளவு பணம் செலவிடலாம் என மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி,

பேரூராட்சி வார்டு உறுப்பினர்- ரூ.17 ஆயிரம்.

நகராட்சி வார்டு உறுப்பினர் (1 மற்றும் 2ஆம் நிலை) ரூ. 34 ஆயிரம்.

நகராட்சி வார்டு உறுப்பினர்(தேர்வு மற்றும் சிறப்பு நிலை) ரூ.85 ஆயிரம்

மாநகராட்சி வார்டு உறுப்பினர் (சென்னை நீங்கலாக) ரூ.85 ஆயிரம்.

சென்னை மாநகராட்சி வார்டு உறுப்பினர் ரூ.90 ஆயிரம்

இந்த அளவை மீறக்கூடாது என்றும், தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டதிலிருந்து 30 நாட்களுக்குள் செலவு கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், தவறினால் ஆணையத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டு, 3 ஆண்டுகளுக்கு போட்டியிட இயலாதவாறு தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதெல்லாம் நம்புற மாதிரியாங்க இருக்கு?

அனுமதிக்கப்பட்ட செலவுத் தொகை என்பது டீ செலவுக்கே போதாது என்பது தேர்தல் ஆணையத்திற்கும் தெரியும். ஒவ்வொரு கட்சியிலும் வேட்பாளரைத் தேர்வு செய்யும்போதே அவருடைய சாதி, செல்வாக்கு, பணபலம் ஆகியவையே அடிப்படைத் தகுதியாகின்றன. எவ்வளவு செலவு செய்ய முடியும் என்ற கேள்வியே, வேட்பாளர் தேர்வுக்கான இறுதி மதிப்பீடாக அமைகிறது.

அண்மையில் பா.ஜ.க.வில் நடந்த நேர்காணலின்போது, ஒருவர் 20 லட்ச ரூபாய் ஹாட்கேஷை, நிர்வாகிகளின் முன்பிருந்த மேசையில் கொட்டி, தன்னுடைய தகுதியை நிரூபித்தார். ‘கறுப்புப் பணத்தை’ ஒழிப்பதற்காகவே ரூபாய் நோட்டுகளை ஒழித்துக்கட்டிய ஆட்சியினரின் கட்சியை சார்ந்தவரே இப்படி என்றால், மாநிலத்தை ஆளும் தி.மு.க.விலும், 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆட்சி செய்த அ.தி.மு.க.விலும் கேட்க வேண்டியதே இல்லை.

தற்போதைய நிலவரப்படி சென்னையில் வார்டு கவுன்சிலர் சீட் கேட்பதற்கான அடிப்படைத் தகுதி, 50 எல் முதல் 1சி வரை. மற்ற மாநகராட்சிகளிலும் 40-50எல் வரை போகிறது. நகராட்சி-பேரூராட்சிகளிலும் விரலுக்கேத்த வீக்கம் இருந்தால்தான் வாய்ப்பு கிடைக்கும்.

அன்றாடம் பூத் கமிட்டிக்கான செலவு, வாக்கு சேகரிக்கச் செல்வதற்கான செலவு, பிரச்சாரம் செய்ய வரும் தலைகளுக்கான செலவு, போஸ்டர், பிட் நோட்டீஸ், லோக்கல் டி.வி. விளம்பரம், சோஷியல் மீடியா புரமோஷன், டாஸ்மாக் சரக்கு, பிரியாணி இவற்றைக் கடந்து, போட்டி நிலவரத்துக்கேற்ப வாக்காளர்களுக்கான அன்பளிப்பு எல்லாவற்றையும் கணக்கிட்டால், காந்தியே வந்து தற்போதைய கவுன்சிலர் தேர்தலில் நின்றால்கூட தேர்தல் ஆணையத்தின் வரம்பிற்குள் செலவு செய்ய முடியாது.

– கோவி.லெனின்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *