தமிழ்நாட்டின் டிசைன் அப்படி – இனிக்கும் தமிழ்.. கசக்கும் திட்டங்கள்

குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது நாடாளுமன்றக் கூட்டத் தொடர். உடனே மீடியாக்களில் பிரேக்கிங் நியூஸ் வெளியானது. ‘ஜனாதிபதி உரையில் திருக்குறள் மேற்கோள் காட்டப்பட்டது’. அப்துல்கலாம் காலத்திலிருந்தே திருக்குறள், பாரதியார் பாடல்கள் போன்றவை தொடர்ச்சியாக மேற்கோள் காட்டப்பட்டு வருகின்றன. அதற்கு முன்பும் ஒரு சில நேரங்களில் நாடாளுமன்றத்தில் தமிழ் செய்யுள்கள் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.

இந்த முறை, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோயங்கா தனது உரையில், ‘கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக’ என்ற பலரும் அறிந்த திருக்குறளை மேற்கோள் காட்டினார். ‘சொல்லுதல் யாருக்கும் எளியவாம், அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்’ என்றும் அதே திருவள்ளுவர் அதே திருக்குறளில் எழுதியுள்ளார். அந்தக் குறள் இந்த முறை மேற்கோள் காட்டப்படவில்லை என்றாலும், குடியரசுத் தலைவர் உரைக்கு மறுநாள், ஒன்றிய நிதியமைச்சர் தாக்கல் செய்த நிதி நிலை அறிக்கை அந்தக் குறள் போலத்தான் இருந்தது.

பொதுவாகவே, ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாட்டிற்கானத் திட்டங்களைப் போராடித்தான் பெற வேண்டியிருக்கிறது. அதனால்தான், ‘வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது’ என்றார் பேரறிஞர் அண்ணா. (இன்று பிப்ரவரி 3 அவரது நினைவு நாளாகும்). அண்ணாவின் குரல் தமிழ்நாட்டில் மட்டுமின்றி, நாடாளுமன்றத்திலும் ஒலித்தது. அவரது குரலில் உள்ள உண்மையைப் பெருந்தலைவர் காமராஜர் உணர்ந்திருந்தார். அப்போதைய பிரதமர் நேருவிடம் வலியுறுத்தி, தமிழ்நாட்டிற்கானப் புதிய திட்டங்களை நிறைவேற்ற நிதி ஒதுக்கி, செயல்பாட்டுக்கு கொண்டு வருவதில் காமராஜர் பெரும் அக்கறை காட்டினார். ஆனாலும், வடமாநிலங்களோடு ஒப்பிடும்போது தமிழ்நாட்டிற்கான நிதி ஒதுக்கீடும் திட்டங்களும் மிகவும் குறைவுதான்.

பிரதமரும் ஒன்றிய அமைச்சர்களும் தமிழ்நாட்டுக்கு வரும்போது இது பற்றி கேட்கவேண்டும் என்ற எண்ணம் தமிழ்நாட்டின் எதிர்க்கட்சிகளிடம் மட்டுமல்ல, மக்களிடமும் இருக்கும். ஆனால், டெல்லியிலிருந்து வருபவர்கள் இங்கே மேடையேறிப் பேசும்போது, ‘வண்க்கோம்..தமில் மொளியை நேஷிக்கிறேன்’ என்று ஆரம்பித்ததும், கூட்டம் மொத்தமும் கைத்தட்டி ஆரவாரம் செய்யும். “ஆஹா.. இவர் நம் மொழி மீது இத்தனை ஆர்வம் காட்டுகிறாரே” என்று நம் மனது மயங்கிவிடும். கோபம் கரைந்துவிடும். அதன்பிறகு, அவர்கள் ஆங்கிலத்திலோ, இந்தியிலோ  தொடர்ந்து பேசுவார்கள். மொழிபெயர்ப்பவர் நம் முழி பிதுங்கும் வகையில் அதைத் தமிழ்ப்‘படுத்து’வார். வழக்கம்போல அதில் பல வாக்குறுதிகள் நிறைந்திருக்கும். லவுடு ஸ்பீக்கர் வழியாக அவை காற்றோடு காற்றாகப் பறக்கும்.

நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும்போதும்கூட அதே நிலைதான். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு அமைவதற்கு முன்பாக, ரயில்வே துறைக்கு மட்டும் தனியாக நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வந்தது. அதில் ஒவ்வொரு முறையும் தமிழ்நாட்டுக்கு என்னென்ன திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன, எத்தனை புதிய ரயில்கள் விடப்படுகின்றன என்ற ஆர்வம் மக்களிடம் இருக்கும். நாடாளுமன்றத்தில் உள்ள தமிழ்நாட்டு எம்.பி.க்களிடமும் அதே ஆர்வத்தைக் காண முடியும்.

ரயில்வே துறை அமைச்சர் ஒவ்வொரு திட்டமாக அறிவித்துக் கொண்டே வருவார். தமிழ்நாட்டுக்கானத் திட்டங்கள் வரும்போது, “வண்க்கோம்” என்று சொல்வார். உடனே, நம் மாநிலத்து எம்.பி.க்கள் மேசையைத் தட்டி ஆரவாரம் செய்வார்கள். அவர்கள் தட்டி முடிப்பதற்குள், அடுத்த மாநிலத்திற்கானத் திட்டங்களை அறிவித்துக் கொண்டிருப்பார் ரயில்வே அமைச்சர். ஸ்டேஷனில் நிற்காத ரயில் போல, தமிழ்நாட்டுக்கான அறிவிப்புகளை வேகமாகக் கடந்து சென்றிருப்பார் அமைச்சர். அதனால்தான் இன்றுவரை, தமிழ்நாட்டில் மீட்டர்கேஜ் பாதைகளை மாற்றி அகல ரயில்பாதையாக மாற்றும் திட்டம் முழுமை பெறவில்லை. மோடி அரசில் ரயில்வேதுறைக்கான தனி பட்ஜெட்டும் இல்லை. ஒட்டுமொத்தமாக விற்கப்போகிற துறைக்கு எதற்கு தனியாக பட்ஜெட் போடவேண்டும்? அதையும் நிர்மலா சீதாராமனின் பொது பட்ஜெட்டிலேயே சேர்த்து நாலு வார்த்தைகள் சொல்லிக் கடந்து விடலாம் என முடிவு செய்துவிட்டார்கள்.

பொது பட்ஜெட்டிலாவது, தமிழ்நாட்டிற்கானத் திட்டங்கள் எந்தளவில் அறிவிக்கப்பட்டிருக்கின்றன என்று தேடினால், கண்ணாமூச்சி ஆட்டம் ஆடியிருக்கிறது ஒன்றிய அரசு. கங்கை-காவிரி இணைப்பு என நேரு காலத்திலிருந்து பேசிக்கொண்டே இருந்தார்கள். இப்போது கோதாவரி-காவிரி ஆறுகள் இணைப்பு என ஒவ்வொரு பட்ஜெட்டிலும் அறிவிக்கப்படுகிறது. தமிழ்நாட்டிற்குள் உள்ள ஆறுகளை இணைக்கும் குண்டாறு-காவிரி திட்டம் பல ஆண்டுகளாகக் கிடப்பில் உள்ளது. அதை நிறைவேற்றத் தேவையான நிதியை ஒதுக்கி உதவி செய்ய வேண்டிய ஒன்றிய அரசிடமிருந்து தமிழ்நாட்டுக்குப் போதுமான ஒத்துழைப்பு கிடைக்கவில்லை.

ஜி.எஸ்.டி. வரி அடிப்படையில் தமிழ்நாட்டிற்குத் தர வேண்டிய வரி வருவாய் பாக்கி உள்ளது. இயற்கைப் பேரிடர் நிவாரணத்திற்கான நிதி அளிப்பதிலும் பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநிலங்களுக்கு ஓர் அளவுகோலும் தமிழ்நாட்டுக்கு இன்னொரு அளவுகோலும் பின்பற்றப்படுகிறது. தமிழ்நாட்டில் நெடுங்காலமாக நடைமுறையில் உள்ள விவசாயிகளுக்கான இலவச மின்சாரத் திட்டத்திற்கு வேட்டு வைக்கிறது மோடி அரசு.

ஒன்றிய அரசே அறிவித்த பல திட்டங்களும் போதிய நிதியின்றித் தவிக்கிறது. மதுரையில் அடிக்கல் நாட்டிய எய்ம்ஸ் மருத்துவமனையின் நிலையை எல்லாரும் அறிவோம்.

இது பற்றியெல்லாம் கேள்வி கேட்டால், ஐ.நா.சபையில் மோடி தமிழில் பேசினார், நாடாளுமன்றத்தில் திருக்குறளை சொன்னார், தமிழ்நாட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் எம்.ஜி.ஆர். நடித்த மதுரை வீரன் பற்றிப் பேசினார் என்று மிகப் பெரும் சாதனைகளை அவரது கட்சியினர் சொல்வார்கள். யார் பேசினாலும் தமிழ் இனிக்கும். தமிழ்நாட்டுக்கு மோடி அரசு அறிவிக்கும் திட்டங்களின் நிலையோ கசக்கும்.

– கோவி.லெனின்.

Leave a Reply

Your email address will not be published.