கலகலப்பு கஃபே – பாலிடிக்ஸ் கார்னர்

Newslite_Spl_Article

“என்னடா மொசக்குட்டி… ஒரே குழப்பத்தோட இருக்க மாதிரி தெரியுதே!”

“ஆமா… சித்தப்பு… அவசரப்பட்டுட்டேனோன்னு தோணுது!”

“அவசரப்பட்டுட்டியா? உனக்கு தான் இன்னும் கல்யாணமே ஆகலையேடா, பின்ன என்னத்த அவசரப்பட்டுட்ட? எதாவது ஏடாகூடமா பண்ணிட்டியா?”

“சேச்சே! நீ நினைக்கிற மாதிரி இல்ல சித்தப்பு… என்னைய ஒரு கட்சி சார்பா உள்ளாட்சித் தேர்தல்ல கவுன்சிலர் போஸ்ட்டுக்கு வேட்பாளரா நிக்கச் சொன்னாங்க!”

“என்னது? உன்னைய அரசியல்ல குதிக்கச் சொன்னாங்களா? உனக்குத்தான் பேப்பர்ல அரசியல வாசிக்கிறது தவிர அரசியலே தெரியாதே! அதுமட்டுமில்லாம, தேர்தல்ல நிக்கணும்னா லட்சம் லட்சமா செலவழிக்கணுமேடா மொசக்குட்டி!”

“எனக்கும் அப்டி தான் டவுட்டு வந்து வேணாம்னு சொல்லிட்டேன். ஆனா, செலவப் பத்தி கவலப்படாதிங்க, நாங்களே செலவழிக்கிறோம்னு சொன்னதால…”

“சொன்னதால?”

“நான் கவுன்சிலரா நிக்கிறதுக்கு ஒத்துக்கிட்டேன் சித்தப்பு! நான் ஓகே சொன்னதுமே எனக்கு ஒரு லட்ச ரூபாய கையில குடுத்துட்டாங்க!”

“அட்ரா சக்க! ஆமா, உன்னைய யாருக்கு தெரியும்? உனக்கு யாரு ஓட்டு போடுவாங்கன்னு உன்னைய வேட்பாளரா நிறுத்துனாங்க?”

“அதான் உன்னைய தெரியும்ல சித்தப்பு! அவங்ககிட்ட நானும் இதத்தான் சொன்னேன்… எனக்குன்னு ஓட்டு போடுறதுக்கு என்னோட சித்தப்பு ஒருத்தர்தான் இருக்காருன்னு சொன்னேன்… ஒருத்தர் ஓட்டு போடுவாரா, அப்போ பெரிய விஷயமாச்சே… நீங்க தான் எங்க கட்சி வேட்பாளர்னு சொல்லிட்டாங்க!”

“அடக்கொடுமையே, ஒரேயொரு ஓட்டுக்கே உன்னைய வேட்பாளராக்கிட்டாங்களா? அதுசரி, இதெல்லாம் சந்தோசமான விஷயம் தான? பிறகு ஏன் முகத்த குழப்பமா வச்சிருந்த?”

“அதில்ல சித்தப்பு… இவனுங்க என்னைய புக் பண்ணுன பெறகுதான் எனக்கு மத்த கட்சிகள்ல இருந்து அடுத்தடுத்து ஆஃபரா வந்துட்டு இருக்கு! 2 லட்சம் தர்றோம், 4 லட்சம் தர்றோம்… எங்க கட்சி வேட்பாளரா நின்னுக்கோங்கன்னு பெட்டிகளோட ஆளாளுக்கு வந்துட்டாங்க… அவசரப்பட்டு 1 லட்சத்துக்கு ஒத்துக்கிட்டோமோன்னு குழப்பமா இருக்கு சித்தப்பா!”

“இதுல எதுக்கு குழப்பம் மொசக்குட்டி… எல்லார் கிட்டயும் பொட்டிய வாங்கிட்டு, வெவ்வேறு தொகுதியில போட்டி போட்டுட வேண்டியது தான!”

“யோவ், பணப்பெட்டியோட மட்டும் சுத்துறாய்ங்கன்னு நினச்சியா? கையில அரிவாளோடயும் சுத்துறாய்ங்க சித்தப்பு! ஏடாகூடம் பண்ணுனா செதச்சிடுவாய்ங்க! அதுசரி, நீ என்னவோ ஒரு தேசிய கட்சிக்கு ஆள் புடிக்கிற வேலைல இருக்கியாமே?”

“ஆமாடா மொசக்குட்டி… அவங்களோட கூட்டணி பிரேக் அப் ஆயிடுச்சுடா… அதான் இப்ப அவங்களுக்கு தமிழ்நாடு முழுக்க போட்டி போடுறதுக்கு ஆளுங்க பற்றாக்குறையா இருக்கு… அதான் ஆள் புடிச்சுக் குடுத்தா பத்தாயிரம் ரூபா தர்றதா சொன்னாங்க… நல்ல பிசினஸா இருக்கேன்னு இதுல இறங்கிட்டேன்!”

“இதுவரைக்கும் எத்தனை பேரை புடிச்சிருக்க சித்தப்பு?”

“ஏழெட்டு பேரை புடிச்சுட்டேன்டா மொசக்குட்டி!”

“அட, ஆச்சர்யமா இருக்கே சித்தப்பு! எப்டி அவ்ளோ பேரை புடிச்ச?”

“இதுல ஒரு டெக்னிக் இருக்குடா… இங்கருக்குற முக்கிய கட்சிகள்ல சீட்டு கிடைக்காம புலம்பிட்டு பல பேரு இருப்பாங்க… அவங்களத் தேடிப் புடிக்கணும். புடிச்சி, உங்களுக்கு நல்ல ஆஃபர் வாங்கித் தர்றேன்… நம்ம கட்சி சார்பா நின்னு செயிச்சா ஃப்யூச்சர் செமயா இருக்கும்னும், நம்ம கட்சியில ரூபாயும் தருவோம்னும் பேசிப்பேசியெ அவங்கள கரெக்ட் பண்ணி தள்ளிட்டு வந்துடுவேன்டா…”

“யோவ் சித்தப்பு! கில்லாடியா நீ! எம்புட்டு நேக்கா அரசியல் பண்ற! இவ்ளோ நாளா உன்னோட அருமை தெரியாம போச்சு பாரு!”

“அததுக்கு நேரம் வரணும்லடா மொசக்குட்டி! இந்த உள்ளாட்சித் தேர்தல்ல அப்பா அம்மா, பொண்ணுன்னு குடும்பமாவே ஏகப்பட்ட பேர் போட்டி போடுறாங்கடா…. ஒருத்தர் இல்லாட்டாலும் இன்னொருத்தர் ஜெயிச்சுடுவாருன்னு ஒரு நம்பிக்கைலதான் போட்டி போடுறதே!”

“இப்பவும் கூட இவ்ளோ போட்டிக்கு இடையில எப்டி சித்தப்பு சுயேட்சையா நம்பிக்கையா நிக்கிறாங்க?”

“அடேய்… சுயேட்சையெல்லாம் தேர்தல்ல வெற்றி பெறணும்னு நிக்கிறதில்ல… எல்லாம் ஒரு கெத்து தான்டா மேட்டரே!”

“ஓஹோ…. சித்தப்பு… ஒவ்வொரு சூதாட்டமா ஆன்லைன்ல அனுமதி கிடைச்சது… இப்ப என்னடான்னா கிரிப்டோகரன்ஸிக்கே அனுமதி குடுத்துடுச்சே மத்திய அரசு…”

“சும்மாவா அனுமதி குடுத்திருக்காங்க? அதுல வர்ற வருமானத்துக்கு 30% வரி போடப்போறதால்ல சொல்லியிருக்கு!”

“அதான் சித்தப்பு ஆச்சர்யமா இருக்கு! போற போக்கப் பார்த்தால், எவனாவது பேங்க்கையோ வீட்டையோ கொள்ளையடிச்சுட்டு அந்த வெவரத்த கவர்மென்டுகிட்ட கொடுத்து அதுக்கான வரி எத்தனை பெர்சன்டேஜோ, அதை மட்டும் கட்டிட்டா போதும் போலயே! அதெல்லாம் கொள்ளையே கிடையாதுன்னு சொல்லிடுவாங்க போல!”

“அடேய் மொசக்குட்டி நீயே சென்ட்ரல் கவர்மென்டுக்கு ரூட்டு போட்டு குடுப்ப போலயே! ஹஹஹஹ!”

புத்தன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *