போரால் தீர்வு காணும் ரஷ்யா : தாக்குபிடிக்குமா உக்ரைன்

பண்டைய காலத்திலிருந்தே மனிதர்களின் அதிகார பசியை தீர்த்து கொள்ள போர் ஒரு சிறந்த ஆயுதமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக சொல்ல போனால் தனி நபர்களின் ஆசைக்காக லட்ச கணக்கான மக்கள் போரில் பரிதமாக இறந்துள்ளனர். கால சக்கரத்தால் இவை அனைத்தும் மாறிவிடும் என்று பார்த்தால், போர் செய்யும் முறை மாறியுள்ளதே தவிர மனிதர்களின் அதிகார பசி தீர்ந்த பாடில்லை. தற்போதுள்ள நவீன உலகத்தில் மனிதர்கள் எத்தனையோ துறைகளில் அபார வளர்ச்சி அடைந்து விட்டார்கள். ஆனாலும் மற்ற நாடுகளை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க வேண்டும் என்கிற ஆசை மட்டும் முடிந்தபாடில்லை. இதற்கு தக்க உதாரணம் தற்போது ரஷ்யா- உக்ரைனுக்கு இடையே ஏற்பட்டிருக்கும் போர் சூழல் தான்.

இரு நாடுகளுக்கும் என்ன பிரச்சனை

1990-ம் ஆண்டு வரை உக்ரைன் சோவியத் ஒன்றியத்துடன் தான் இருந்தது. பின்னர் சோவியத் யூனியன் உடைந்த போது உக்ரைன் தங்களுக்கு என  அரசாங்கத்தை உருவாக்கி ஆட்சி செய்ய ஆரம்பித்தது.தற்போதும் உக்ரைன் தன் எல்லைகளை ரஷ்யாவோடும், ஐரோப்பிய நாடுகளுடன் பங்கீடு கொண்டு தான் இருக்கிறது. மேலும் மொழி ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும் உக்ரைன் மக்கள் ரஷ்ய மக்களோடு ஒன்றுபட்டு தான் இருக்கிறார்கள். மேலும் ரஷ்ய மொழியை பேசும் கணிசமான மக்கள் உக்ரைனிலும் இருக்கிறார்கள். 

கடந்த 2014-ம் ஆண்டு ரஷ்யாவுக்கு ஆதரவாக இருந்த உக்ரைன் பிரதமர் விக்டர் யானுகோவிச் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இதற்கு ரஷ்யாவிடமிருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. உக்ரைனுக்கு தக்க பதிலடி கொடுக்க உக்ரைனின்  தெற்கு பகுதியில் அமைந்திருக்கும் கிரிமியா தீபகற்பத்தை கைப்பற்றியது ரஷ்யா. மேலும் உக்ரைன் கிழக்கு பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருந்த பிரிவினைவாதிகளுக்கு ஆதரவு அளித்தது. இதுவே இரு நாடுகளிடையே பிரச்சனை உருவாக முதல் காரணமானது.  இப்பிரிவினைவாதிகளுக்கும், உக்ரைன் இராணுவத்திற்கும் நடந்த தாக்குதலில் இதுவரை 15,000 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது ஒருபுறமிருக்க ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போரில், மிக அதிகமாக பயன்படுத்தப்படும் வார்த்தை நேட்டோ. நேட்டோ என்றால் என்ன?. அதற்கும் இந்த போருக்கும் என்ன தொடர்பு என்று விரிவாகக் காணலாம்.

The North Atlantic Treaty Organization என்பதன் சுருக்கம்தான் NATO. அதாவது வடக்கு அட்லான்டிக் ஒப்பந்த அமைப்பு என்பது தான், இதன் தமிழாக்கம். அமெரிக்கா, பிரிட்டன், பெல்ஜியம், கனடா, டென்மார்க், பிரான்ஸ், ஐஸ்லாந்து, இத்தாலி, லக்சம்பர்க், நெதர்லாந்து, நார்வே, போர்ச்சுக்கல் ஆகிய 12 நாடுகள், 1949-ல், உலகப் போருக்குப் பின்பு மேற்கொள்ளப்பட்ட, ஒப்பந்தங்களின் அடிப்படையில் உருவாக்கிய ராணுவ கூட்டமைப்பு தான் இந்த நேட்டோ.

இந்த 12 நாடுகளைத் தவிர, அல்பேனியா, பெலாரஸ், ஜெர்மனி, செக் குடியரசு, போலந்து உள்ளிட்ட 30 நாடுகள், இந்த நேட்டோவில் உறுப்பு நாடுகளாக உள்ளது. இதில் உக்ரைனை சேர்க்க வேண்டும் அல்லது சேர்க்கக் கூடாது என்பதற்காகத்தான், தற்போது ரஷ்யா அந்நாட்டின் மீது போர் செய்து வருகிறது.

இந்த அமைப்பின் ஒப்பந்தத்தின்படி, நேட்டோ அமைப்பில் உள்ள ஒரு நாட்டின் மீது, பிற நாடுகள் போர் தொடுக்கும் பட்சத்தில், பிற நாடுகளும் உதவிக்கு வர வேண்டும் என்பதுதான் அடிப்படையான சாராம்சம். எனவே, தனக்கு அண்டை நாடான வல்லாதிக்கம் கொண்ட ரஷ்யா, எப்பொழுது வேண்டுமானாலும் தங்கள் மீது போர் தொடுக்கலாம் என்பதால், தனது பாதுகாப்பை உறுதிப்படுத்த, இந்த அமைப்பில் சேர விரும்புகிறது உக்ரைன்.

அதே நேரத்தில் பிற நாடுகள் வந்து உட்கார்ந்து கொண்டு, அதன்மூலம் தங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம், என்பதால், அதனை தடுக்க வேண்டுமென முனைப்பில் இருக்கிறது ரஷ்யா. இதில், ரஷ்யாவிற்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய கோபம் என்னவென்றால், கடந்த 1991-ம் ஆண்டு சோவியத் யூனியன் பிளவுபட்டபோது, நேட்டோவுக்கு எதிராக ரஷ்யா அமைத்திருந்த வார்சா ஒப்பந்த நாடுகளில், பலவும் நேட்டோ படைகளில் இணைந்திருந்தது தான்.

கடந்த 1950-களில் இருந்தே நேட்டோவிற்கும், ரஷ்யாவிற்கும் ஏழாம் பொருத்தம் தான். ஏற்கனவே, அதனை தனது பாதுகாப்பு அச்சுறுத்தலாக பார்க்கும் ரஷ்யா, அதில் கூடுதல் பலத்தை சேர்க்கும் வகையில், ஐரோப்பிய கண்டத்தின் இரண்டாவது மிகப்பெரிய நாடான உக்ரைனை, நேட்டோ அமைப்பில் சேர்ப்பதை கொஞ்சம்கூட விரும்பவில்லை.

எனவே, உக்ரைன் நாடு நேட்டோ அமைப்பில் எப்பொழுதும் சேர்க்கப்படாது என்ற உறுதிப்பாட்டை தங்களுக்கு வழங்க வேண்டும் என மேற்குலக நாடுகளை ரஷ்யா தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. ஆனால். அது கைகூடாததன் எதிரொலியாக தான், தற்பொழுது உக்ரைன் மீது தாக்குதல் தொடங்கியுள்ளது ரஷ்யா.

இரு நாடுகளுக்கும் ஏற்பட்ட முதல் ஒப்பந்தம் – மின்ஸ்க் ஒப்பந்தம் 

 இந்நிலையில் 2015-ம் ஆண்டு உக்ரைன் அதிபராக இருந்த  பெட்ரோ பொரொஷென்கோ-க்கும் , ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்-க்கும் இடையே புதிதாக ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. அது மின்ஸ்க் ஒப்பந்தம்  என்று அழைக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி உக்ரைன் மற்றும் ரஷ்ய ஆதரவோடு கிழக்கு உக்ரைனில் இருக்கும் பிரிவினைவாதப் படைகளுக்கு இடையிலான பிரச்சனையைத் தீர்ப்பது இந்த ஒப்பந்தத்தின் நோக்கம்.அதன் பிறகு 20க்கும் மேற்பட்ட முறை போர் நிறுத்தத்தைக் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, ஆனால் அனைத்து முயற்சிகளும் பயனற்றுப் போயின. தொடர்ந்து எல்லையில் இரு தரப்பு படையினரும் கொல்லப்பட்டு வருகின்றனர்.

ரஷ்யா, உக்ரைன் இருநாடுகளுமே கிழக்கு உக்ரைன் பிரதேசத்தைக் குறித்து தங்களுக்கென தனித்தனிப் பார்வையைக் கொண்டுள்ளன. அது ஒன்றோடொன்று ஒத்துப் போகாமல் இருப்பதே இப்போருக்கு காரணம்.

1 லட்சம் ராணுவ வீரர்களை குவித்த ரஷ்யா

இந்நிலையில் தற்போது மீண்டும் ரஷ்யா – உக்ரைனுக்கு இடையே மீண்டும் போர் சூழல் உருவாகியுள்ளது. கடந்த 4 மாதங்களுக்கு முன்பு உக்ரைன் எல்லையில் ரஷ்யா 1 லட்சம் இராணுவ வீரர்கள் மற்றும் நவீன் போர் கருவிகளை குவித்தது. அப்போது முதலே இரு நாடுகளுமிடையே போர் பதற்றம் ஏற்பட தொடங்கியது. அதனை தொடர்ந்து கடந்த உக்ரைன் மீது ரஷ்ய படைகள் பல்முனை தாக்குதல் நடத்தி வருகின்றன. ரஷ்யாவின் நட்பு நாடான பெலாரஸ் எல்லை வழியாக ரஷ்யாவின் போர் டாங்குகள் உக்ரைனுக்குள் நுழைந்தன. வான்வழி, கடல் வழி, தரை வழியாக உக்கிரமாக தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

ஒருபுறம் இரு நாட்டு ராணுவங்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டிருக்கும் நிலையில், உக்ரைன் மீது சைபர் தாக்குதல்களையும் ரஷ்யா தொடங்கி உள்ளது. ஆயிரக்கணக்கிலான உக்ரைன் கணினிகள் மீது தீங்கிழைக்கும் மென்பொருள்கள் நிறுவப்பட்டதாகக் கூறப்படுகிறது.இன்னும் சில மணி நேரங்களில் ரஷ்ய படைகள் கீவ் நகரை கைப்பற்றும் நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உக்ரைன் அரசின் இணையதளங்கள் ரஷ்ய சைபர் படையால் முடக்கப்பட்டு இணையதள தகவல்களும் அழிக்கப்பட்டுள்ளது.போரின் முதல் நாள் நிலவரப்படி, ரஷ்யா 203 தாக்குதல்களை நடத்தியுள்ளதாக உக்ரைன் தெரிவித்தது. ராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் உட்பட குறைந்தது 68 பேர் கொல்லப்பட்டனர் என்று உக்ரைன் கூறுகிறது.உக்ரைனில் 11 விமான நிலையங்கள் உட்பட 74 தரைக்கு மேல் உள்ள இராணுவ உள்கட்டமைப்பு வசதிகளை அழித்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.உக்ரைனுக்கு எதிராக முழு அளவிலான இராணுவ நடவடிக்கையைத் தொடங்கிய  ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்,  அண்டை நாடுகளின் எல்லைகளை “ஆக்கிரமிப்பதை” தவிர வேறு வழியில்லை என்று சூசகமாக போரை தொடங்கினர்.

 இவ்வுலம் ஏற்கனவே நிறைய போர்களை சந்தித்துவிட்டது. போரால் ஏற்படும் உயிரிழப்புகளும், பொருளாதார பாதிப்பும் சாமானிய மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். எப்போது அனைத்து நாடுகளும் போர் கருவிகளை உருவாக்குவது நிறுத்திக்கிறதோ அப்போது தான் மனிதர்களுக்கு வழமையான எதிர்காலம் உருவாகும்.  

Leave a Reply

Your email address will not be published.