விடியல் தந்ததா இந்த “திராவிட மாடல்” பட்ஜெட்! – தெளிவான அலசல்

அரசியல் விடுதலை  கேட்ட காங்கிரஸ் இயக்கத்தில் எப்படி மிதவாதிகள்(Moderates), தீவிரவாதிகள் (Radicals) என்று இரண்டு குழுக்கள் இருந்ததோ, அது போல சமூக விடுதலை கேட்ட திராவிட இயக்கத்திலும் தொடக்க காலத்தில்  இப்படி இரண்டு பிரிவுகள் இருந்தது. நீதிக்கட்சி மிதவாத திராவிட இயக்கமாகவும். பெரியாரின் சுயமரியாதை  இயக்கம் தீவிர தன்மை கொண்ட திராவிட இயக்கமாகவும் செயல்பட்டது. இங்கு தீவிரத்தன்மை என்பது கருத்தியல் (ideology) அளவை குறிக்கும் சொல்லாடல். பெண்களுக்கு வாக்குரிமையை அரசு அதிகாரத்தின்  மூலம் வழங்கிய நீதிக்கட்சி மிதவாத தன்மை கொண்டது எனலாம் . பெண்களுக்கு சொத்துரிமை, விதவை மறுமணம், சாதி மறுப்புத்  திருமணம், என்ற சமூக சீர்திருத்த நடவடிக்கைகளின் தீவிர தன்மையை சுயமரியாதை இயக்கம் கடைப்பிடித்தது எனலாம். 

வெளியாகி இருக்கும் திமுக அரசின் நிதி நிலை அறிக்கையில் இரண்டு அம்சங்களையும் பார்க்க முடிந்தது. ஒரு புறம் அரசு பள்ளியில் படித்து உயர் கல்வி தொடரும்  மாணவிகளுக்கு  மாதம் ரூ.1000 ரூபாய் ஊக்கத்தொகை என்ற அறிவிப்பும். மற்றொரு புறம் பெரியாரின் சிந்தனைகள் 21 மொழிகளில் வெளியிடப்படும் என்ற அறிவிப்பும். மிதவாத மற்றும் புரட்சிகர நடவடிக்கைகளின் சான்றாகவே நான் புரிந்து கொள்கிறேன்.

 பத்தாண்டுகளாக பராமரிப்பின்றி கிடக்கும் சமத்துவபுரங்களை புதுப்பிக்க நிதி ஒதுக்கீடு என்பது புரட்சிகர திட்டம். இந்தியா முழுக்க இந்துத்துவம் தனது கொள்கைகளுக்கு செயல் வடிவம் கொடுத்து வரும் நிலையில் இங்கு கிறிஸ்தவ ஆலயங்களையும், இஸ்லாமிய பள்ளிவாசல்களையும் சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது புரட்சிகர திட்டம். இப்படி சுயமரியாதை இயக்க பணிகளையும், நீதி கட்சியின் பணிகளையும் சேர்த்து செய்யும் வாக்கரசியல் இயக்கமாக திமுக இருக்கும் என்ற செய்தி இன்றைய நிதி நிலை அறிக்கை மூலம் தீர்க்கமாக  வெளிப்பட்டுள்ளது.

சமூக சீர்திருத்தம்(social reform), அரசியல் நிலைத்தன்மை(Political stability), பொருளாதார வளர்ச்சி(Economic growth) இவை மூன்றும் தான் ஒரு சமூகத்தின் முன்னேற்றத்தை தீர்மானிக்கும் அம்சங்கள். நேற்று  வெளியான நிதிநிலை அறிக்கையில் இவை மூன்றையும் மெருகேற்றும் வகையிலான திட்டங்கள் இடம்பெற்றிருந்தன.  

மாநில சுயாட்சி , ஒன்றிய -மாநில அரசுகள் இடையிலான  நிதி உறவுகள், பாசிச எதிர்ப்பு, போன்ற வார்த்தைகள் நிதி அமைச்சர் வாசித்த  உரையில் இடம்பெற்றிருந்த சுவாரஸ்யமான அம்சங்கள். வெறும் பொருளாதார கருத்துக்களோடு சுருங்கி விடாமல், திராவிட இயக்க கொள்கைகள் நிறைந்த நிதிநிலை அறிக்கையாக இந்த அறிக்கை அமைந்திருந்தது. 

ஒரு சமூகத்தில் நடக்கும் பெண்களின் முன்னேற்றம்  என்பது இயல்பிலேயே நீடித்த ஒன்றாகவும் நிலைத்தன்மை கொண்ட ஒன்றாகவும் இருக்கிறது. இந்த நிலைத்தன்மை தான் எதிர்காலத்திற்கான சமூக-பொருளாதார முதலீடாகவும்(Socio-economic Investment) இருக்கிறது. பெண்களுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம் என்ற திட்டத்தின் மூலம் பேருந்து பயணம் செய்யும் பெண்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக நிதிநிலை அறிக்கை கூறுகிறது. இதன் மூலம் நடைபெறும் பொருளாதார நுகர்வு நடவடிக்கைகளின் வழியாக அரசின் வரி வருவாயும் அதிகரிக்கும், தனிநபர் வருமானத்தில் வியக்கதகு  முன்னேற்றங்களும் ஏற்படும். 

தொலைநோக்கில் அணுகும்போது இத்திட்டத்தோடு உயர்கல்வி பயிலும் அரசு பள்ளி மாணவிகளுக்கு மாதம் 1000  ரூபாய் ஊக்கத்தொகை வழங்கும் திட்டமும் குறிப்பிடத்தகுந்த மாற்றத்தை உண்டாக்கும். ஏற்கனவே பெண்களின் திருமண வயது 18 இல் இருந்து 21 ஆக உயர்த்தப்பட்டிற்கும் நிலையில் இந்த திட்டம் பெண்களை மேலும் கல்வி பெற ஊக்குவிக்கும். சாதியத்தின் வேரை அசைத்துப் பார்க்கப்போகும் அறிவிப்பாக இதை கூறலாம்.  

பெரியாரின் கருத்துக்களை இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு பரவ செய்வது காலத்தின் கட்டாயம் என்பதை கருதி, ஒரு அரசே இத்தகைய நடவடிக்கைகளில் இறங்குவது இதுவே முதல்முறை. கொள்கை உறுதிக்கான அளவுகோலாக இந்த அறிவிப்பை எடுத்துக்கொள்ளலாம். அது போலவே மற்றொருபுறம்  “பெண்கள் கையில் கரண்டியை பிடுங்கிவிட்டு புத்தகங்களை கொடுக்க சொன்ன” பெரியாரின் கொள்கை நடைமுறைக்கு வருவதை கோட்பாட்டுக்கும்- நடைமுறைக்குமான (Theory and practice) நெருக்கத்தை பறைசாற்றும் நிகழ்வாக அமைந்துள்ளது. 

பண்பாட்டு ரீதியாக அணுகும்போது இந்த நிதிநிலை அறிக்கையில் 

  • தமிழ் மொழிக்கும் இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பத்திற்கு இடையிலான உறவை வெளிக்கொணரும் அகரமுதலி உருவாக்கும் சிறப்புத் திட்டத்திற்கு ரூ.2 கோடி. 
  • 7 இடங்களில் அகழாய்வுப் பணிகள், 2 இடங்களில் கள ஆய்வு மற்றும் கொற்கையில் முன் கள ஆய்வு பணிகள் மேற்கொள்ள  5 கோடி ரூபாய் ஒதுக்கீடு. 
  • தமிழ் வளர்ச்சித் துறைக்கு 82.86 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு 

ஆகியவற்றை குறிப்பிட்டு சொல்லலாம்.

வாசிப்பின் மூலமாக தான் ஒரு சமூகம் பக்குவமடையும் என்பதை அடிக்கடி தன் உரையில் குறிப்பிடும் முதலமைச்சர். அதற்கான அறிவிப்புகளையும் இந்த நிதிநிலை அறிக்கை வாயிலாக வெளியிட்டுள்ளார். 

  • ஆண்டுக்கு நான்கு இலக்கியத் திருவிழாக்கள்.
  • புதிதாக தோற்றுவிக்கப்பட்ட 6 மாவட்டங்களில், அடுத்த இரண்டு ஆண்டுகளில் உயர்தர வசதிகளுடன் கூடிய மாவட்ட மத்திய நூலகங்கள். 
  • மாவட்டம் தோறும் புத்தக கண்காட்சிகள், என சமூக மேம்பாட்டுக்கான அறிவிப்புகளாக இவற்றை குறிப்பிடலாம். 

உயர்கல்வி துறையில் மாற்றங்களை கொண்டு வரும் முனைப்பில் அரசு இருப்பது இந்த நிதிநிலை அறிக்கை மூலம் வெளிப்படுகிறது. அறிவுசார் நகரம்(Knowledge city) அமைப்பதும் SIPCOT, TIDCO, TANSIDCO நிறுவனங்கள்  மூலம் திறன் மேம்பாட்டுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதும் , “நான் முதல்வன்” என்ற திட்டத்தின் இலக்கு, எதிர்கால தமிழ் நாட்டின் மனித வளத்தை சர்வதேச தரத்திற்கு உயர்த்தும். 

சர்வதேச முதலீடுகளை ஈர்ப்பதிலும், உள்நாட்டு சிறு மற்றும் குறு நிறுவனங்களை ஊக்குவிப்பதிலும் சம அளவில் அரசு அக்கறை கொண்டுள்ளது என்பதை நிதி அமைச்சர் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார், கடைசியாக அவர் ஆங்கிலத்தில் பேசியதும் முதலீட்டாளர்களுக்கான செய்தி என்று அவர் கூறினார். 

இந்த இக்கட்டான நிதி நெருக்கடி சூழலிலும் 8000 கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறையை குறைத்ததன் வாயிலாக நிர்வாக சீர்திருத்தங்கள் மூலம் நிதியை திறமையாக கையாளலாம் என்று நிரூபித்துள்ளார் நிதி அமைச்சர். முதலீட்டாளர்களிடையே இத்தகைய பொறுப்பான நடவடிக்கை நம்பிக்கையை ஏற்படுத்தி முதலீடுகளை ஈர்க்க உதவும். 10 ஆண்டு கால மந்தநிலைக்கு பின் முதலீடுகளை அதிகம் ஈர்க்கும் மாநிலம் என்ற நிலையை  தமிழகம் தக்கவைத்து கொள்ளும்.  

மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் விலங்குகளுக்கும் பிற கால்நடை உயிர்களுக்கும் தாவரங்களுக்கும் இந்த நிதிநிலை அறிக்கை மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள், சென்னைக்கு அருகில் ரூபாய் 300 கோடி மதிப்பீட்டில் தாவரவியல் பூங்கா, வரையாடு பாதுகாப்புத் திட்டம் போன்ற பிற உயிர்கள் பாதுகாப்புக்கான நிதியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. 

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் பொருட்டு அரசு பல்வேறு புதிய திட்டங்களை தொடங்கியுள்ளது. “இல்லம் தேடி கல்வி” என்ற வெற்றி திட்டத்தை தொடர்ந்து. “நம்ம பள்ளி நம்ம பெருமை” என்ற தலைப்பில் பள்ளி மேலாண்மை குழுவின் செயலியும் வெளியிடப்பட்டது . பள்ளிகளை நவீனப்படுத்தும் தொலைநோக்கு பார்வையின் விளைவாக “பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம்” என்ற ஒரு புதிய திட்டம் இன்றைய நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றிருந்தது. இனி வரும் நிதி ஆண்டுகளில்  7000 கோடி வரை இந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டு பள்ளி கல்வி நவீனமாக்கப்படும் என்று அறிவித்தார் நிதி அமைச்சர்.  

ஒருபுறம் 6 -12 வகுப்பு மாணவிகள் உயர்கல்வியை பயிலும் பட்சத்தில் மாதம் 1000 ரூபாய், அரசு பள்ளி மாணவர்களுக்கு பொறியியல் மற்றும் மருத்துவம் போன்ற  உயர்கல்வி படிப்புகளில்  7.5 %  இடஒதுக்கீடு, தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை, ஆசிரியர் திறன் மேம்பாட்டு திட்டம் போன்றவை மூலம் இழந்த பொலிவை மீட்டுக்கும் முயற்சியில் பள்ளி கல்வி துறை இறங்கியுள்ளது. 

இதன் மூலம் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்கும் போக்கு அதிகரிக்கும். கொரோனாவுக்கு பிறகு பள்ளி கல்வி துறை இத்தகைய நடவடிக்கைகளில் இறங்கி இருப்பது பாராட்டுக்குரிய ஒன்று.

சுகாதாரத்தில் அரசு போதிய கவனம் செலுத்தி வருகிறது, மக்களை தேடி மருத்துவம், நம்மை காக்கும் 48 போன்ற சமீபத்திய திட்டங்கள் மூலம் தமிழ்நாட்டின்  மருத்துவ கட்டமைப்பு மேலும் மேம்படும்.

 நகர்ப்புறங்களில்  தகவல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சி மற்றும் COVID-19 பெருந்தொற்று இரண்டும் இணைந்து அனைவரையும் வீட்டிலேயே முடங்கியுள்ளது. வீட்டிலிருந்தே வேலை பார்க்க சொல்லி நிறுவனங்கள் நிர்பந்திக்க தொடங்கிவிட்டார்கள். இந்நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அனைவரும் வீட்டில் முடங்கிப்போய் இருப்பதால் உளவியல் மற்றும் மனநலம் சார்ந்த பிரச்சனைகள் அதிகமாகியுள்ளது. வளர்ந்துவரும் பொருளாதாரத்தில் இதுபோன்ற அகம் சார்ந்த பிரச்சனைகள்  ஏற்படும் போக்கு அதிகரிக்கும். அதை சீர் செய்யும் வகையில் 40 கோடி அளவில் “தமிழ்நாடு மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனம் ” என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்த இந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

வளர்ந்து வரும் சந்தை  பொருளாதாரத்தில் ஏற்படும் புதிய உளவியல் சிக்கல்களை களைய தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளுக்கான அறிகுறியாக இதை புரிந்து கொள்ளலாம். 

சிங்கார சென்னை 2.0  திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 6 மாநகராட்சிகளில் கட்டமைப்புகளை மேம்படுத்த ஒவ்வொரு மாநகராட்சிக்கு 10 கோடி சிறப்பு ஒதுக்கீடு, நகர மேம்பாட்டிற்கு  ரூபாய் 1,000 கோடி ஒதுக்கீட்டில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்ட அறிவிப்பு, இவற்றோடு 500 புதிய  நகர்புற பூங்காக்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. நகரமயமாக்கல் நடவடிக்கைகளில் அரசு செலுத்தும் அக்கறையும் முக்கியத்துவம் இத்தகைய அறிவிப்புகள் மூலம் வெளிப்படுகிறது.

“திராவிட மாடல்” பட்ஜெட் எப்படி இருக்க வேண்டுமோ இந்த பட்ஜெட்டும் அப்படியே அமைந்திருக்கிறது. ஒரு புறம் வேலைவாய்ப்பை உருவாக்க முதலீடுகளை ஈர்த்தல், மற்றொருபுறம் மாணவர்களின் திறனை மேம்படுத்துதல். இதன் மூலம் உயர்கல்வியும், தொழில்துறையும் பிணைக்கப்படுகிறது. அதுபோலவே சந்தையிலிருந்து விடுபட்டவர்களாக கருதப்படும் பெண்கள் மற்றும் பட்டியலின பழங்குடி மக்களுக்கான அறிவிப்புகளையும் இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. 

அனைவரையும் அதிகார மையத்திற்கு அழைத்து வருவதே திராவிட இயக்கத்தின் அடிநாதமாக இருந்துள்ளது. அதிகார மையம் ஜனநாயக படும்போது இங்குள்ள அரசியல்-பொருளாதார-சமூக-இயற்கை வளங்களும் சம அளவில் பகிரப்படுகிறது. இதன் மூலம் அனைவருக்குமான வளர்ச்சி உறுதி செய்யப்படுகிறது. சமூக நீதி, சுயமரியாதை, மொழி உரிமை, அதிகார பரவலாக்கம், மாநில சுயாட்சி போன்ற திராவிட இயக்க விழுமியங்கள் எல்லாம் இந்த நிதிநிலை அறிக்கை மூலம் எதிரொலிக்கிறது. 

சீரான நிதி மேலாண்மையின் மூலம் பற்றாக்குறையை 4.61% இருந்து 3.80%ஆக குறைத்து, இந்நிலையை அடைய முடிந்துள்ளது. நிதி அமைச்சரையும், நிதி துறை செயலாளர்களையும் நாம் பாராட்டியாக வேண்டும். 

இனி வரப்போகும் நிதிநிலை அறிக்கைகளுக்கு முன்னோடி அறிக்கையாக இந்த அறிக்கையை சொல்லலாம். மேலும் முதலமைச்சர் தனது அறிக்கையில் குறிப்பிட்டதை போல் அடுத்த 25 ஆண்டுகளுக்கான திட்டமிடலுக்கு இந்த நிதி நிலை அறிக்கை ஒரு அடித்தளமாக அமையும். வளமான தமிழ்நாட்டை உருவாக்க தேவையான அறிவிப்புகள் எல்லாம் இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. நிதி நிலை சீராகும் பட்சத்தில் பெண்களுக்கான  உரிமை தொகை போன்ற  மற்ற நலத்திட்டங்களை “திராவிட மாடல்” அரசிடம் இருந்து  எதிர்பார்க்கலாம்.   

திரு.கௌதம் ராஜ், இளம் திராவிட சிந்தனையாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *