தமிழ்நாட்டின் டிசைன் அப்படி: நானும் ரவுடிதான்.

Spl_Article

ஒற்றைக் காலில் நின்றாலும் தமிழ்நாட்டில் தாமரை தனித்து மலர முடியவில்லை என்பதால் அ.தி.மு.க.வின் தோளில் ஏறி, 4 எம்.எல்.ஏ.க்களைப் பெற்றது பாரதிய ஜனதா கட்சி. அதன் மாநிலத் தலைவராக உள்ள முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை வாய்ப் பந்தல் போடுவதில் ஆர்வமாக செயல்படுகிறார். அ.தி.மு.க.வைவிட தாங்கள்தான் எதிர்க்கட்சி போல செயல்படுகிறோம் என்று காட்டிக் கொள்வதற்காக ஒவ்வொரு நாளும் ஏதாவது ஓர் அரசியல் நாடகம் பா.ஜ.க மேடையில் அரங்கேற்றப்படுகிறது. அண்ணாமலை ஹீரோவாக மேக்கப் போட்டாலும், மக்கள் அவரை காமெடியனாகத்தான் பார்க்கிறார்கள்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் துபாய் பயணம் குறித்து ‘அதிரடி’ பேட்டிகளை அள்ளிவிட்டார் அண்ணாமலை. எதிர்க்கட்சிகள் விமர்சிப்பது ஜனநாயக நடைமுறை. எனினும், அவதூறு கருத்துகள் வெளிப்படும்போது அது சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ளும். அதுபோலத்தான், அண்ணாமலையின் பேச்சுக்காக அவதூறு வழக்கு போடப்படும் என்று தி.மு.க.வின் அமைப்புச் செயலாளரான ஆர்.எஸ்.பாரதி எம்.பி. தெரிவித்தார்.

அண்ணாமலையிடம் இது பற்றி ஊடகங்கள் கேட்டபோது, “சாயங்காலம் ஆறேகால் மணி வரை கட்சி அலுவலகமான கமலாலயத்தில்தான் இருப்பேன். முடிந்தால், தி.மு.க அரசு என்னைக் கைது செய்யட்டும்” என்று சவடால் அடித்தார். ஊடகங்களில் ஒளிபரப்பான அந்தக் க்ளிப்பிங்கை அவரது கட்சியினர் சமூக வலைத்தளங்களில் பரப்பினார்கள்.

ஒருவர் மீது அவதூறு வழக்கு என்பது நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். சிவில் மற்றும் கிரிமினல் என இரு வகைகளிலும் இந்த வழக்கைத் தாக்கல் செய்யலாம். நீதிமன்றத்தில் மனு ஏற்கப்பட்டு, விசாரணை நடைபெற்று, தீர்ப்பளிக்கப்படும். அவதூறாக இருந்தால் தண்டனை வழங்கப்படும் அல்லது மன்னிப்புக் கோர வேண்டும். அவதூறு இல்லையென்றால் ஜனநாயக உரிமைப்படிதான் செயல்பட்டிருக்கிறார் என தீர்ப்பு அமையும். கிரிமினல் புகார் கொடுத்தாலும், அதற்குரிய சட்ட நடவடிக்கைகள் அடிப்படையிலேயே நீதியின் பயணம் இருக்கும்.

போலீஸ் ஸ்டேஷனில் உள்ள ஒரு ரைட்டருக்குக்கூட இந்த நடைமுறை தெரியும். ஐ.பி.எஸ். அதிகாரியாக இருந்த அண்ணாமலைக்கு இந்த விவரம்கூடத் தெரியவில்லையா என அவரது சவடாலைப் பார்த்து சாதாரண மக்களும் கேட்கிறார்கள்.

ஊடகத்தினர் ஏன் இந்தக் கேள்வியை அண்ணாமலையிடம் கேட்கவில்லை என்று யாரும் கேட்கக்கூடாது. அவர்களுக்கு 24 மணிநேரத்துக்குத் தேவையான ‘பைட்’ கிடைத்தால் போதும். இந்திய ஒன்றியத்தில் ஆட்சி செய்யும் கட்சியின் மாநிலத் தலைவரான அண்ணாமலை, பரமசிவன் கழுத்து ‘பாம்பு’ போல படம் எடுத்து நெளிவதால் அவர் ‘பைட்’ போதுமானது.

தினமும் ஒரு ‘பைட்’டாவது, பரமசிவன் கழுத்துப் பாம்பிடமிருந்து கிடைத்தால், 24 X 7 பிரச்சினையில்லாமல் ஓடும். இப்படித்தான், அ.தி.மு.க. ஆட்சியில் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்பட எல்லாரையும்விட அதிகமாக ‘பைட்’ தந்தவர் ஜெயக்குமார். ‘மெயின் ரோடு’ விவகாரம் வந்தபோதுகூட அவர் ‘பைட்’ தந்து கொண்டே இருந்தார். ஊடகத்தினர் எந்தக் கேள்வியும் கேட்க மாட்டார்கள். அவர் சொல்வதுதான் நியூஸ் வேதம் என்ற நிலை இருந்தது.

தி.மு.க ஆட்சியில் ஜெயக்குமார் மீது வழக்குகள் தொடரப்பட்டு, தற்போது நிபந்தனை ஜாமீன் கிடைத்து, திருச்சியில் கையெழுத்திட்டு வருகிறார் ஜெயக்குமார். தன்னை தி.மு.க ஆட்சியில் பழிவாங்குவதாக பிரதமருக்கும் உள்துறை அமைச்சருக்கும் கதறல் கடிதம் எழுதுகிறார் அ.தி.மு.க ஆட்சியின் ஆல் இன் ஆல் அழகு ராஜாவாக இருந்த ஜெயக்குமார்.

ஜெயக்குமாருக்குப் பதில் அண்ணாமலை இப்போது மீடியாக்களின் டார்லிங் ஆகியிருக்கிறார். “நானும் ரவுடின்னு ஃபார்ம் ஆயிட்டேன்யா.. என்னையும் அரெஸ்ட் பண்ணி வண்டியில ஏத்துங்கய்யா” என்கிற வடிவேலு காமெடிபோல அமைந்திருக்கின்றன அண்ணாமலையின் செயல்பாடுகள். ஆலை இல்லாத ஊரில் அண்ணாமலைகள்தான் சர்க்கரை.

கோவி.லெனின்.

Leave a Reply

Your email address will not be published.