“வன்னியர் இட ஒதுக்கீடு ரத்து” என்னும் தீர்ப்பு – தமிழ்நாடு சமூக நீதி பாதையில் ஏற்பட்டுள்ள இடரா?

Vanniyar_Reservation

“In India, the politicization of caste enabled the democratization of politics” – Radha Kumar

  தமிழ்நாட்டில் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் 69 % இடஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது என்பது இங்கு அனைவரும் அறிந்த ஒன்றே. நீதிக்கட்சி காலத்து Communal G.O முதல் தற்போது வெளியாகி இருக்கும் 10.5 % வன்னியர் இட ஒதுக்கீடு தீர்ப்பு வரை, இட ஒதுக்கீட்டுக்கு இந்த மண் கொடுக்கும் முக்கியத்துவதையே உணர்த்துகிறது. 1990களில் மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்டு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு(OBC) இட ஒதுக்கீடு வழங்கப்பட்டபோது இந்தியா முழுக்க எதிர்ப்புகள் கிளம்பியது. ஆனால் அந்த இட ஒதுக்கீட்டை வரவேற்று மாநாடுகளும், கூட்டங்களும் நடத்திய ஒரே மாநிலம் தமிழ்நாடு. 

தமிழ்நாட்டில் நடந்த சாதி ரீதியிலான அணி திரட்சிகள் கூட இடஒதுக்கீடு வேண்டியே நிகழ்ந்துள்ளன. 1930களில்  ‘நாடார் மகாஜன சபை’ இத்தகைய கோரிக்கையை முன்வைத்தது, 1970களில் ‘கொங்கு வெள்ளாளர்கள்’ பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க சொல்லி கோரிக்கை வைத்தார்கள், 1980களில் 20% இட ஒதுக்கீடு வேண்டி வன்னியர் சங்கம் போராட்டத்தில் இறங்கியது. 2006இல்  அருந்ததியர் இட ஒதுக்கீடு போராட்டத்தின் மூலமாக கிடைத்த ஒன்றே. இப்படி இட ஒதுக்கீடு என்பது போராட்டங்களின் முலமே  பரிணமித்து வந்துள்ளது. இங்குள்ள சாதி சங்கங்களின் இட ஒதுக்கீடு பற்றிய புரிதல் நிரம்பவே இருக்கிறது. 

ஆனால் காலப்போக்கில் சரியான தரவுகள் இன்மையால் இட ஒதுக்கீடும் அரசியல் காய்நகர்தலுக்கு இறையாகியுள்ளது. அதன் விளைவு தான் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை செல்லாது என்று சொல்லி நேற்று உச்சநீதிமன்றம் தடை செய்திருக்கும் 10.5 % வன்னியர் இட ஒதுக்கீடு. தேர்தல் அறிவிப்பு வருவதற்கு 4 மணி நேரத்துக்கு முன் அவசர அவசரமாக தாக்கல் செய்யப்பட்ட மசோதா தான் இந்த வன்னியர் உள் இட ஒதுக்கீடு மசோதா. இந்த மசோதாவின் விளைவாக வட தமிழகத்தில் பாமக கணிசமான வாக்குகளையும், 5 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றியும் பெற்றது. தேர்தல் முடிவுகள் வந்து ஓராண்டாவதற்குள் இந்த சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் சரியான தரவுகள் இல்லாமல் போனதே முக்கிய காரணம் என்று சொல்கிறார்கள் சட்ட வல்லுநர்கள். 

 தற்போது நடைமுறையில் இருக்கும் இட ஒதுக்கீடு என்பது 1931 இல் நடத்தப்பட்ட சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தான் வழங்கப்பட்டு வருகிறது. 2011இல்  சமூக பொருளாதார மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒன்று  நடத்தப்பட்டாலும் அதன் முடிவுகள் இன்றளவும் வெளியாகவில்லை .  

இப்படி தரவுகளை உருவாக்காத அரசு, தரவுகள் இல்லை என்று கூறி இட ஒதுக்கீடை ரத்து செய்யும் உச்சநீதிமன்றம். இது போன்ற வினோதம் எல்லாம் இந்திய ஒன்றியத்தில் மட்டுமே நடக்கும். 

தமிழ்நாட்டை பொறுத்தவரை இட ஒதுக்கீட்டு கொள்கையில் தொடர்ந்து மறுசீரமைப்புகள்(Readjustments) நடந்து வருகின்றன. சட்டநாதன் ஆணையமாக இருந்தாலும் சரி, அம்பாசங்கர் ஆணையமாக இருந்தாலும் சரி அந்தந்த ஆணையங்களின் பரிந்துரைகள் எல்லாம் ஏற்கப்பட்டு செயல்வடிவம் பெற்றே வந்துள்ளது. சட்டநாதன் மற்றும் அம்பாசங்கர் ஆகிய இருவரும் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பது இங்கு குறிப்பிட வேண்டிய ஒன்று. வன்னியர்கள் தலைமையில் ஆணையம் மட்டும் அமைத்து  இடஒதுக்கீடு கொடுக்காமல், வன்னியர்களை இரண்டு திராவிட கட்சிகளும் வஞ்சிக்கின்றன என்றார் மருத்துவர் ராமதாஸ். 

1982ஆம் ஆண்டு சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான ஆலோசனையில் அன்றைய முதலமைச்சர் எம்ஜிஆருடன் ஆணையத்தின் தலைவர் அம்பாசங்கர்.

1987இல் அதிமுக ஆட்சியில்  இட ஒதுக்கீட்டுக்காக போராடிய  21 வன்னியர்கள் கொல்லப்பட்டார்கள். அதன் பின் 1989இல் திமுக ஆட்சியில்  வன்னியர்கள் கோரிக்கையை ஏற்றும் அதனோடு சீர்மரபினர்(DNC) மற்றும் இன்னும் சில சாதிகளை இணைத்து, மிகவும் பிற்படுத்தப்பட்டோர்(MBC) என்ற வகுப்பு உருவாக்கப்பட்டது. அவர்களுக்கு 20 % இடஒதுக்கீடை வழங்கினார் அன்றைய முதல்வர் கலைஞர். ‘20% இடஒதுக்கீடு  வன்னியர்களுக்கு மட்டும் தனியாக கேட்டோம். கலைஞர் எங்களுக்கு அழுகிய கனியை கொடுத்து விட்டார்’ என்றார் மருத்துவர் ராமதாஸ். இதன் பின்னர் பெரிதாக போராட்டங்கள் எதுவும் நடக்கவில்லை. 

இடஒதுக்கீட்டின் முக்கியத்துவத்தை வன்னியர் சமூக இளைஞர்களுக்கு உணர்த்தும் விதமாக “சுக்கா மிளகா சமூக நீதி” என்ற தொடரை தனது முகநூல் பக்கத்தில்  எழுதி வந்தார் மருத்துவர் ராமதாஸ். அதை தொடர்ந்து  2020இல் வன்னியர்களுக்கு 10.5 % தனி ஒதுக்கீடு  வேண்டும் என்ற அடிப்படையில் போராட்டமும் சட்டமன்ற தேர்தலை கணக்கில் கொண்டு அரசியல் பேரமும்(Political Bargain) ஒரே நேரத்தில் நடைபெற்றது. பாமக இரண்டிலும் வெற்றி பெற்றது. 

வரலாறு என்ன சொல்கிறது என்பதை கொஞ்சம் பார்த்துவிட்டு வருவோம். நீதிக்கட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட இடஒதுக்கீட்டால் பயனடைந்தவர்கள் பெரும்பாலும், எண்ணிக்கையில் சிறுபான்மையாக இருக்கும் நிலவுடைமை சாதிகளாவே இருந்தார்கள். குறிப்பாக முதலியார், செட்டியார், ரெட்டி, நாயுடு மற்றும் பிற வெள்ளாளர் சாதிகளே அதிகம் பயனடைந்தார்கள். காலம் செல்ல செல்ல சுயமரியாதை இயக்கத்தின் விளைவாகவும், மெட்ராஸ் மாகாணத்தில் நடந்த பிற அரசியல் நடவடிக்கைகள் மூலம் ஏற்பட்ட விழிப்புணர்வால் பார்ப்பனரல்லாத சாதிகளில் பெரும்பான்மை எண்ணிக்கையில் இருக்கும் பிற்படுத்தப்பட்ட சாதிகள் குறிப்பாக வன்னியர், தேவர், நாடார் ஆகியோர்  ஒரு அமைப்பை உருவாக்கி இருந்தார்கள். 

1932இல் Backward Classes League என்ற அமைப்பு  பார்பனரல்லாதாரில் இருக்கும் முற்பட்டோரையும்(Forward) பிற்படுத்தப்பட்டோரையும்(Backward) தனித்தனியே பிறக்க சொல்லி, அதில் பின்தங்கிய வகுப்புகளுக்கு மட்டும்  இடஒதுக்கீடு கேட்டது. இந்த அமைப்பில் M.A மாணிக்கவேலு நாயக்கர், P.K ராமச்சந்திர படையாச்சி, நஞ்சப்பா போன்ற வன்னியர்களே அதிகம் ஈடுபாடு கொண்டிருந்தார்கள். ஆனால் இந்த கோரிக்கை நடைமுறைக்கு வரவில்லை. 

காமராஜர் ஆட்சிக்காலத்தில் மாணிக்கவேலு நாயக்கர் மற்றும் ராமசாமி படையாச்சி போன்ற வன்னியர் தலைவர்கள் வைத்த கோரிக்கைகளின் விளைவாக  மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பு என்ற ஒரு பிரிவு உருவாக்கப்பட்டு கல்விக் கட்டண சலுகை வழங்கப்பட்டது. இடஒதுக்கீடு எதுவும் வழங்கப்படவில்லை என்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும். 

1969இல் தான் முதல் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைக்கப் படுகிறது, அதிலும் வன்னியர்களுக்கு சரியான அளவில் பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை. 1980களில் இதன் விளைவாக 23 வெவ்வேறு வன்னியர் சாதி குழுக்கள் இணைந்து சாதி சங்கம்(வன்னியர் சங்கம்) ஒன்றை தொடங்கினார்கள். மருத்துவராக இருந்த ராமதாஸ் அதன் நிறுவனராக செயல்பட்டார். வன்னியர்களுக்கு 20 % இடஒதுக்கீடு கொடுத்தாக வேண்டும் என்பதே அந்த அமைப்பின் முக்கிய கோரிக்கையாக இருந்தது. இதன் விளைவாக அமைக்கப்பட்டது தான் அம்பாசங்கர் ஆணையம். அது கிட்டத்தட்ட Door-to-door மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒன்றை நடத்தி அறிக்கை வெளியிட்டது. 

1987இல்  இட ஒதுக்கீடு போராட்டத்தை அறிவிக்கிறது வன்னியர் சங்கம் , சமூக அமைதி குலைந்தது என  சொல்லி பல இடங்களில்  துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது, அதில் 21 பேர் உயிரிழந்தார்கள். இதை தொடர்ந்து எம்ஜிஆரின் மறைவு நிகழ்கிறது . அப்போது நிலவிய அரசியல் சூழ்நிலை காரணமாக  ஜனாதிபதி ஆட்சி அமல் படுத்தப்படுகிறது. இறுதியாக 1989இல் தான் 20% இடஒதுக்கீடு கொடுக்கப்படுகிறது. 

1930 முதல் வன்னியர் சமூகத்தின் தலைவர்கள் இட ஒதுக்கீட்டின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்தார்கள். குறிப்பாக 1980களில் கூட சாதிவாரி மக்கள்தொகை(Caste census) கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தே வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம் நடைபெற்றது. 

வன்னியர் சமூகத்தின் பிற்படுத்தப்பட்ட நிலை குறித்து A.N.சட்டநாதன் குழு கூறும் செய்திகளை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். அவை வருமாறு

ஜூன் 1970ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் முதல் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் அறிக்கையை அன்றைய முதலமைச்சர் கலைஞர் மு கருணாநிதிடம் தாக்கல் செய்கிறார் ஆணையத்தின் தலைவர் A.N.சட்டநாதன்.

விவசாயத்தை முக்கிய தொழிலாக கொண்டு தமிழ்நாட்டில் உள்ள சாதிகளில் இது மிக பெரிய ஒன்றாகும். நடைமுறையில் உட்பிரிவுகள் எதுவுமில்லாத ஒரே சாதி இது என்று கூறலாம். ‘வன்னியர்’, ‘வன்னிய குல சத்திரியர்’ என்னும் பெயர்கள் எல்லா மாவட்டங்களிலும் அறிமுகமான பெயர்கள். சுய தேவைகளை தாங்களே பூர்த்தி செய்துகொள்ளும் ஒரு பழங்குடியினருக்கு இருக்க வேண்டிய இயல்புகள் அனைத்தும் அச்சாதிக்கு இருக்கிறன்றன. பெருமளவில் இருக்கும் இந்த சாதியில் உள்ள பெரும் நிலச்சுவான்தார்கள் உடைய எண்ணிக்கை மிக குறைவே. கிராமப்புறங்களில் உள்ளவர்களில் 10 சதவிகிதத்தினர் தான் சிறு சிறு நிலச்சுவான்தார்களாகவும் , குத்தகை சாகுபடியாளர்களாகவும் இருக்கிறார்கள் என்றும், எஞ்சியவர்கள் அனைவரும் விவசாய கூலிகளாகவே இருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது . 

A.N.சட்டநாதன் ஆணைய அறிக்கையிலிருந்து

ஆண்களும் பெண்களும் உடலுழைப்பு வேளைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். நாட்டுப்புறங்களிலும்,நகர்ப்புறங்களிலும் இச்சாதியை சேர்ந்த வெகு சிலர் தான் வர்த்தக துறையிலும் சில்லறை வியாபாரத்திலும் ஈடுபட்டிருக்கிறார்கள். நகரங்களிலும், தொழிற்சாலைகிலும் ஏராளமானவர்கள் கூலிகளாக வேலை செய்கிறார்கள். இவர்கள் ஈடுபடாத தொழில்களே இல்லை என்றே கூறலாம், வறுமையின் காரணமாக இவர்கள் பல தொழில்களில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

A.N.சட்டநாதன் ஆணைய அறிக்கையிலிருந்து

நெசவு, பாய் முடைதல், கூடை முறம் செய்தல், மீன் பிடித்தல், பன்றி வளர்த்தல் முதலியவை இவர்கள் பரவலாக ஈடுபட்டிருக்கும் தொழில்களில் சிலவாகும். கிணறு தோண்டுதல், மண் வெட்டுதல், கட்டட வேலை போன்ற கடினமான உழைப்பு தேவைப்படும் தொழில்களுக்கும் இச்சாதியிலுருந்து ஆட்கள் வருகிறார்கள்.

A.N.சட்டநாதன் ஆணைய அறிக்கையிலிருந்து

தென் ஆற்காடு மாவட்டத்தில் இன்று நெய்வேலி நிலக்கரி நிறுவனம் அமைந்திருக்கும் பகுதியில் உள்ள கிராமங்களை சேர்ந்த படையாச்சிகள் குற்ற பரம்பரையினர் என்று அறிவிக்கப்பட்டிருந்தனர் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும். குற்றபரம்பரையிலிருந்து இவர்கள் விலக்கப்பட்டதும் மறுவாழ்வு அளிப்பதற்காக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

A.N.சட்டநாதன் ஆணைய அறிக்கையிலிருந்து

ஹரிசனங்களை நீக்கிவிட்டு பார்த்தால் குறைந்தது ஐந்து மாவட்டங்களிலாவது இவர்கள் தனி பெரும் சாதியினராக இருந்தபோதிலும் ஒரு இடத்தில கூட ஆதிக்கம் செலுத்தக்கூடிய நிலையை அடையவில்லை. குத்தகை சாகுபடியாளர்களாகவும், விவசாய தொழிலாளர்களாகவும் இருக்கும் பலர்  ரெட்டியார்கள், நாயுடுகள், முதலியார்கள், பிராமணர்கள் முதலிய ஆதிக்க வகுப்புகளைச் சேர்ந்த நிலப்பிரபுக்களை அண்டி வாழும் நிலையில் தான் இருக்கிறார்கள்.

A.N.சட்டநாதன் ஆணைய அறிக்கையிலிருந்து

கல்வி நிலையில் மிகவும் பின்தங்கி இருக்கும் சாதிகளில் இதுவும் ஒன்றாகும். ஏறக்குறைய அரைக்கோடி மக்கள் தொகையை கொண்ட இவர்களால் பெரிய கல்விக்கூடங்களை தனி முயற்சியால் நடத்த முடியவில்லை. அந்த வகுப்பில் உள்ளவர்கள் நிதி வசதி இல்லை என்பது இதிலிருந்து தெரிய வருகிறது.

A.N.சட்டநாதன் ஆணைய அறிக்கையிலிருந்து

இதில் சிலர் பட்டியல் சாதிகளுக்கு என்னென்னெ சலுகைகள் அளிக்கப்படுகிறதோ அவை அனைத்தும் தங்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று கேட்கிறார்கள். நாட்டுப்புறங்களில் பெயரளவில் சமூக அமைப்பில் அளிக்கப்பட்டிருக்கும் இடத்திலும் தான் தங்கள் வகுப்புக்கும் பட்டியல் சாதியினருக்கும் வேறுபாடு இருக்கிறதே ஒழிய மற்றபடி எவ்வித வேறுபாடும் இல்லை என்று MLA, MP உள்ளிட்ட பலரும் சாட்சியங்கள் கூறுகிறார்கள். இவர்கள் அதிகம் வாழும் தெருக்களில் படுமோசமான வாழ்க்கை நிலையை காணலாம். இத்தகைய ஒரு சூழ்நிலையில் குழந்தைகளின் கல்வி கவனிப்பாரற்று விடப்படுகிறது. பள்ளியில் சேர்ந்து படிக்கும் பிள்ளைகளும் தொடர்ந்து படிக்காமல் நடுவிலேயே நிறுத்திவிடுகிறார்கள்.

A.N.சட்டநாதன் ஆணைய அறிக்கையிலிருந்து

இவை எல்லாம் சட்டநாதன் குழுவில் இடம்பெற்றிக்கும் குறிப்புகளாகும். 10.5 % வன்னியர் இட ஒதுக்கீடு சரியா தவறா என்று சொல்ல நம்மிடம் தரவுகளும் இல்ல அப்படி மதிப்பிட நமக்கு முகாந்திரமும் இல்லை. அனைத்திற்கும் தீர்வு சாதிவாரி கணக்கெடுப்பிலும், ஒரு ஆணையம் அமைத்து அதன் தேவையை/தேவையின்மையை  உறுதிப்படுத்துவதிலுமே இருக்கிறது. 

தமிழக அரசும், பிற அரசியல் கட்சிகளும் இதை அரசியல் சிக்கலாக அணுகாமல் சமூக சிக்கலாக அணுக வேண்டும். வளர்ச்சி குன்றிய வட மாவட்டங்களில் அத்தகைய வளர்ச்சியின்மைக்கான காரணங்களை ஆராய வேண்டும். அங்கு நடக்கும் சாதி பூசலை மட்டுப்படுத்த இடஒதுக்கீடு எவ்வகையில் பயன்படும் என்பதை நுணுக்கமாக அலச வேண்டும். 

கல்வியின் மூலமே சாதி உணர்வை ஓரளவுக்கேனும் கட்டுப்படுத்த இயலும். கல்வியின் வாசம் கமழும் பொது சாதி மதம் போன்ற துர்நாற்றங்கள் எல்லாம் அடங்கிவிடும். அதற்கான நடவடிக்கைகளில் அரசு இறங்கும் என்று நம்புவோமாக.  

திரு.கௌதம் ராஜ், இளம் சமூகநீதி சிந்தனையாளர்.

Leave a Reply

Your email address will not be published.

One Comment

  1. ManikandanRajkumar says:

    அருமையான பதிவு