திசையறியா மக்கள் …. நெருக்கடியிலிருந்து மீளுமா இலங்கை?

மனிதகுலம் தொழில்நுட்பத்திலும், விஞ்ஞானத்திலும் அபார வளர்ச்சி அடைந்திருந்தாலும், எதிர்காலத்தில் இந்த உலகம் என்னவெல்லாம் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை கண்டுபிடிக்கும் அளவிற்கு மனிதகுலம் இன்னும் வளரவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. ஒருவேளை எதிர்காலத்தில் என்ன நடக்க போகிறதோ அதை முன்கூட்டியே தெரிந்து கொண்டால் மனிதர்களின் வாழ்வு அவ்வளவு சுவாரஸ்யமாக இருக்காது. இந்த கூற்று உண்மை தான் என்றாலும், ஒவ்வொரு நூற்றாண்டிலும் தொடர்ந்து லட்சக்கணக்கான மக்கள் இறப்பதை தடுக்க, எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை தெரிந்து வைத்திருப்பது நல்லதே. உதாரணமாக கடந்த 20-ம் நூற்றாண்டில் பிளேக் நோயால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.அதேபோல இந்த நூற்றாண்டில் கொரோனா தொற்று மக்களுக்கு பரவி லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.

மருத்துவ துறையும், தொழில்நுட்பமும் அபார வளர்ச்சி அடைந்திருக்கும் இந்த காலகட்டத்திலும் ஏராளமான மக்கள் மூச்சுத்திணறி இறந்ததை நாம் பார்த்தோம். இனி வரும் காலத்தில் நம் வரலாற்றை சொல்ல வேண்டுமானால் கொரோனாவுக்கு முன், கொரோனாவுக்கு பின் என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு கொரோனா மக்களை துன்புறுத்தி உள்ளது. இது ஒருபுறமிருக்க இந்த கொரோனாவால் பல நாடுகள் பொருளாதார ரீதியாக கடும் சரிவை சந்தித்தது. இந்த தொற்றால் பெரிதும் பாதிக்கப்பட்ட நாடுகளில் இலங்கையும் ஒன்று. ஏற்கனவே கடன் தொல்லையில் சிக்கித் தவித்து கொண்டிருந்த இலங்கை அரசு, கொரோனாவால் மேலும் பாதிக்கப்பட்டது . 2019ஆம் ஆண்டின் 2-ம் காலாண்டில் இலங்கையின் ஜிடிபி மதிப்பு 1.1 சதவீதமாக இருந்த நிலையில் 2020-ம் ஆண்டில் கொரோனா பெருந்தொற்று காரணமாகப் பொருளாதாரம் பாதாளத்துக்குச் சென்று மைனஸ் 16.3 சதவிதம் என வரலாறு காணாத கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது.
சுற்றுலாத்துறை முடக்கம் மற்றும் தேயிலை, ஆடைகள் ஏற்றுமதி சரிவால் அந்நியச் செலாவணி கையிருப்பும் வறண்டது. இலங்கையின் பொருளாதார நசிவைப் பார்த்த பன்னாட்டு நிறுவனங்களும் தங்கள் மூலதனத்தைச் சுருட்டிக் கொண்டு வெளியேறத் தொடங்கின.இது ஒருபுறமிருக்க சீனாவிடம் இலங்கை 500 கோடி டாலர் கடன் வாங்கியுள்ளது. இது தவிர கடந்த ஆண்டு பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க 100 கோடி டாலர் கடனும் இலங்கை வாங்கி அதனை தவணை முறையில் செலுத்த முடிவு செய்துள்ளது.

ஆனால், இலங்கை அரசிடம் இப்போது இருக்கும் அந்நியச் செலாவணி கையிருப்பு தற்போது முற்றிலும் முடிந்துள்ள நிலையில் அடுத்துவரும் செலவுகளைச் சமாளிக்க குறைந்தபட்சம் 43.70 கோடி டாலராவது தேவைப்படும். 2022-ம் ஆண்டு பிப்ரவரி முதல் அக்டோபர் வரையிலான வெளிநாட்டுக் கடன் சேவையில் 480 கோடியை எவ்வாறு சமாளிக்கப் போகிறது என்பது இலங்கைக்கு மிகப்பெரிய பிரச்சினையாகும்.
இலங்கையில் அரிசி, கோதுமை, பருப்பு, சர்க்கரை, வெங்காயம் என அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விலை விண்ணை முட்டும் அளவுக்கு விலை உயர்ந்து வருகிறது.அங்கு மஞ்சள் ரூ.350 , கத்தரிக்காய் 250 கிராம் ரூ.300, உளுந்தம் பருப்பு கிலோ ரூ.2000, தேங்காய் ஒன்று ரூ.150, பெட்ரோல் ஒரு லிட்டர் 303 ரூபாய் என அத்தியாவசிய பொருட்களின் விளையெல்லாம் கடுமையாக அதிகரித்துள்ளது.அங்கு கேஸ் அடுப்பில் சமைத்தவர்கள் மண்ணெண்ணெய் அடுப்புக்கும், மண்ணெண்ணெய் அடுப்பில் சமைத்த மக்கள் விறகு அடுப்புக்கும் மாறிவிட்டார்கள். 3 வேளை சாப்பிட்ட மக்கள் 2 வேளைக்கும், 2 வேளை சாப்பிட்ட மக்கள் ஒருவேளைக்கும் மாறிவருகிறார்கள்.

இலங்கையில் மிகப்பெரிய அளவுக்கு உணவுப்பொருட்கள் பற்றாக்குறை ஏற்பட கோத்தபய ராஜகபக்ச அறிவிப்புதான் காரணம். இலங்கையில் செயற்கை உரத்தைத் தடை செய்து, இயற்கை விவசாயத்துக்கு 100 சதவீதம் மாற வேண்டும் என்ற அறிவிப்பு மோசமான விளைவைப் பொருளாதாரத்தில் ஏற்படுத்தியது.பொருளாதாரப் பேரழிவை மக்களிடம் மறைக்க கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்கை அரசு பொருளாதார அவசர நிலையைப் பிரகடனம் செய்தது.இந்த பொருளாதார நெருக்கடியை எதிர்க்கும் வகையில் இலங்கை அரசை எதிர்த்து நேற்று பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினார்கள்.

மேலும் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று அவரது மாளிகையின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த மாளிகையின் தடுப்பு சுவர்களையும் தாண்டி மாளிகையின் முன்பு வந்த மக்களை அங்கிருந்த போலீசார் புகை குண்டு வீசி தடுத்து நிறுத்தினர்.இந்த போராட்டத்தை குறைக்க கொழும்பில் இன்று முதல் ஊரடங்கு அமலுக்கு கொண்டு வந்தது இலங்கை அரசு.மறு அறிவிப்பு வரும் வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும் என காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து நேற்று இரவு அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலைமையிலிருந்து இலங்கை அரசு வெளியே வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.