தமிழ் சினிமா வரலாறு பாகம் இரண்டு(1954) – ஒரே ஆண்டில் வெளியான 4 உன்னத திரைப்படங்கள் 

1954 தமிழ் சினிமாவுக்கு தங்க வருடம் என்று சொல்லலாம் . தமிழின்  ஆகச்சிறந்த படங்கள் 100 பட்டியலிட்டால் அதில் இடம் பெறக்கூடிய  நான்கு படங்கள் இந்த ஒரே ஆண்டில் வெளியானது .அதில்  இரண்டு  படங்கள் நடிகர் திலகம் சிவாஜி அவர்களுடையது என்பதும், ஒரே ஒரு படம் மட்டும் புரட்சி தலைவர் எம் ஜி ஆருடையது  என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்த 4 படங்கள் :  

  1. அந்த நாள்.
  2. மனோகரா.
  3. ரத்த கண்ணீர்.
  4. மலைக்கள்ளன். 

மேலே குறிப்பிட்ட  நான்கு படங்களின் வெற்றிக்கும் காரணமாக அமைந்தது அதன் அனல் பறக்கும் வசனங்கள் தான். தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில்  பாட்டு இருந்தால் படம் ஓடும் என்ற நிலை தலைகீழாக மாறி வசனம் சிறப்பாக இருந்தால் அந்த படம் நிச்சயம் வெற்றி பெறும் என்ற நிலை பத்தே வருடத்தில் மாறியது  குறிப்பிடத்தக்கது. 

இதில் இரண்டு படங்கள் கலைஞர் கருணாநிதி அவர்களின் வசனக்கூர்மைக்கு சான்று . ஒன்று மலைக்கள்ளன்  இன்னொன்று மனோகர . இரண்டிலுமே முக்கிய நடிகர்களான சிவாஜி மற்றும் எம் ஜி ஆர்  ஆகியோர்க்கு இணையாக என்பதைக் காட்டிலும் கூடுதல் கவனம் பெற்றது கலைஞரின் வசனம் என்றால் அது மிகையில்லை. 

நடிகர் திலகம் சிவாஜி அவர்களுக்கு  பராசக்திக்கு பிறகு மிகப்பெரிய வெற்றி  என்றால் அது மனோகரா தான்.  அது போல எம் ஜி ராமச்சந்திரன் அவர்களுக்கு மந்திரகுமாரிக்கு பிறகு மிகப்பெரிய வெற்றி படம் மலைக்கள்ளன் என்பதும் தான். இந்த படத்தின் வழியாகத்தான்  எம் ஜி ஆர் அவர்களுக்கு புரட்சி நடிகர் பட்டம் வந்து அடைந்ததும் குறிப்பிடத்தக்கது. அது போல முன் சொன்ன இரண்டு படங்களுக்கும் சற்றும் குறைவில்லாத  சரித்திர  பெருமை வாய்ந்தவை மற்ற இரண்டு படங்களான அந்த நாள் ,மற்றும்  ரத்த கண்ணீர் .

இன்னும் சொல்லப்போனால் திரைப்பட வரலாற்றில்  பராசக்திக்கு பிறகு குறிப்பிடத்தக்க படம் என போற்றும் அளவுக்கு ரத்தக்கண்ணீர்  இந்த நான்கு படங்களில் கூடுதல் பெருமையை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது . அது போல  சினிமா எனும் கலையின் பரிணாம வளர்ச்சியில் “அந்த நாள்” படமும் மிகுந்த  தனித்துவம் கொண்ட படம் . சிறந்த ஒளிப்பதிவு என்று பார்த்தால் அதுவரையிலான தமிழ் படங்களில்  “அந்த நாள்” படம் சிறந்த  ஒளிப்பதிவில் முதல் இடம் பெற்றிருக்கிறது. அது போல பாடல்களே இல்லாத படம் என்றும் பன்முக கதையாடல், திரைக்கதை என்பதிலும், எதிர் நாயகனை கதை நாயகனாக கொண்ட முதல் படம் என பல்வேறு நிலைகளில் அந்த நாள் தமிழ் சினிமா வரலாற்றில்  தனித்துவமிக்க  படமாக இன்றும் கொண்டாடப்படுகிறது .

அந்த நாள்: 

கதைக்களம்தான். 1943 அக்டோபர் 11 இரவு அன்று இரண்டாம் உலகப்போரின் ஒரு பகுதியாக ஜப்பான் விமானங்கள் சென்னை மாநகரத்தின் மீது குண்டு வீசியது. அதற்கு மறுநாள் காலை, ரேடியோ இன்ஜினீயரான ராஜன் (சிவாஜி கணேசன்) சுடப்பட்டு இறந்துபோகிறார். போலீஸுக்குத் தகவல் சொல்லப்படுகிறது. சென்னை அன்று மயான அமைதி பூண்டிருந்தது. மக்கள் மறுபடியும் குண்டு வெடிக்குமோ என்ற அச்சத்தில் ஊரை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கும் சமயத்தில் போலீஸ் வாகனம் ராஜன் வீட்டுக்கு விரைகிறது. அங்கே இன்ஸ்பெக்டர் நாயுடு உடன் C.I.D சத்யானந்தம் இணைகிறார். ஷெர்லாக் ஹோம்ஸ் போல ஒரு தொப்பி, ஆங்கிலேய ஆடை பாணி, விசாரணையில் ஒரு புன்னகை நெடி, எதனையும் சிந்தித்து முடிவெடுக்கும் கில்லாடியாக வருகிறார், ஜவகர் சீதாராமன். இவர்தான் படத்துக்கு வசனமும், திரைக்கதையும் எழுதியிருக்கிறார்.

Andha Naal (1954)

ராஜன் இறந்த இடத்தின் அருகில் பெட்டியில் கட்டுக்கட்டாக பணம் கிடக்கிறது. எனவே, திருடன் கொலை செய்திருக்கலாம் என முதலில் சந்தேகம் வருகிறது. துப்பறிவாளர் அதை மறுக்க, பணத்தை விட்டுச் சென்றிருப்பதால் இங்கே வேறு ஏதோ மர்மம் நிகழ்ந்திருக்கிறது எனப் பல்வேறு கோணத்தில் ஆய்வைத் தொடங்குகிறார்.

அப்பாவித் தம்பி பட்டாபி, கோபக்காரத் தம்பி மனைவி, சந்தேகப்படும் படியாக பக்கத்து வீட்டுப் பணக்காரர், ரகசிய காதலி, தேசபக்தி மிகுந்த மனைவி எனப் பலரிடம் விசாரணை நடக்கிறது. அவரவர் தங்கள் பாணியில் என்ன நடந்திருக்கும் என்பதை அனுமானமாகச் சொல்கிறார்கள். அவர்கள் தங்கள் கதையைச் சொல்லும் போது மட்டுமே சிவாஜி திரையில் தோன்றுகிறார்.

ஒரே காட்சி ஆனால் வெவ்வேறு கதாபாத்திரங்களோடு நடிக்க வேண்டும். தனித்தனி ஆளுமைகளுக்கு ஏற்றாற்போல தனது சாயலை மாற்றி ரசிக்க வைக்கிறார், சிவாஜி. கல்லூரிக் காலங்களில் மாணவனாக மிடுக்காக மேடையில் பேசுவதும், இன்ஜினீயர் ஆனதும் ஏளன சைகை செய்து ஆங்கில வார்த்தைகளில் ஜாலம் செய்வதுமென ரசிக்க வைக்கிறார், சிவாஜி. 

யார் இந்தக் கொலையைச் செய்திருப்பார் என மக்களை ஆவலோடு பார்க்க வைப்பதோடு, ஒவ்வொரு நடிகரும் ஸ்கோர் செய்யுமாறு காட்சிப்படுத்தியுள்ளார், இயக்குநர். ஜப்பான் குண்டு தாக்குதலுக்கும், ராஜன் கொலை மர்மத்திற்கும் உள்ள தொடர்பை இறுதியில் அவிழச் செய்கிறார்கள். ராஜன் ஒரு ரகசிய உளவாளி. 50-களில் ஒரு Spy Thriller. மேலும், படத்திற்கு வசனங்கள் எவ்வளவு முக்கியத்துவமாக இருந்துள்ளன என்பது `அந்த நாள்’ பார்த்தால் புரியும். படத்தின் க்ளைமாக்ஸுக்கு முன்பு வரும் தேசத்தைப் பற்றிய வசனங்கள், பெண்களும் அந்த கால அரசியலில் எவ்வளவு ஈடுபாடு காட்டியிருக்கிறார்கள் என்பது புரியும்.

நேர்த்தியான படத்தொகுப்பு, காட்சிப்படுத்திய விதம், விறுவிறுப்பான பின்னணி என எல்லாமே மிளிர்கிறது. படத்தின் இறுதிக் காட்சியில் குற்றவாளியாகச் சந்தேகப்படும் நபர்களின் கையில் ரிவால்வரைக் கொடுத்து கொலை நடந்த அறையில் நிற்க வைத்துத் துப்பறியும் காட்சி அன்றைய ஆங்கிலப் படங்களுக்கு இணையானது என்றே சொல்லலாம். குண்டுவெடிப்புக்குப் பின்னான சென்னை நகரம், அந்தக்கால போலீஸ் வாகனம், ஜப்பானில் தயாரிக்கப்பட்ட டிரான்ஸ்மீட்டர், கைரேகையைப் பதிவெடுத்து பூதக்கண்ணாடி வைத்துக் கண்டுபிடிப்பது என அக்கால சென்னைக்கு அழைத்துச் செல்கிறது, இந்தப் படம். 

“அந்த நாள்” படம் ஒரு கலைப் புரட்சியாக வெற்றிபெற்றாலும், அன்றைய தமிழ் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெறவில்லை. பாடல்கள் இல்லாதது ஒரு காரணம் என்று சொன்னாலும், முக்கியக் காரணமாகக் கருதப்படுவது படத்தில் சிவாஜியின் மரணம்தான். `பராசக்தி’, `மனோகரன்’ படம் வெளியான பின்னர் சிவாஜிக்கு ஒரு ரசிகர் பட்டாளம் உருவாகிய சமயம் அது. முதல் காட்சியிலேயே நாயகன் இறந்துபோனதால், ஏமாற்றம் அடைந்தார்கள் ரசிகர்கள். காலப்போக்கில் விருதுகள் பெற்ற படமாக இருந்தாலும், மக்களிடம் மனதில் பதிவு பெறாத படமாகவே இருந்துவிட்டது `அந்த நாள்’. இப்போது காலம் `அந்த நாள்’ படத்தைக் கொண்டாடுகிறது

தமிழ் சினிமாவில் பல  உடைபான்களை  நிகழ்த்திய திரைப்படம் அந்த நாள் . 50-களில் புராண இதிகாசங்களை மையப்படுத்தியே பெரும்படங்கள் வெளிவந்தன. அந்த விதியை மாற்றி மேற்குலகக் கலைபாணியை தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியது இந்தப் படம்.  பாடல்கள், நடனம், சண்டைக் காட்சிகள் இல்லாத முதல் தமிழ்ப் படமும்  இதுதான். நாயகனை மட்டுமே மையப்படுத்தி கதைகள் உண்டான சமயத்தில் நாயகிக்கும் (பண்டரிபாய்) சரிபங்கு அளித்ததோடு நிறுத்தாமல், அவரை வைத்து உலகப் போரின் ஐரோப்பிய அரசியலை இந்தப் படத்தில் பேசியுள்ளனர். பெண் விடுதலை என்று போராடிக் கொண்டிருந்த சமயத்தில் ‘கொலையும் செய்வாள் பத்தினி’ என்கிற ஒன்லைன் கதையை எடுப்பதெல்லாம் பெரும் துணிச்சல்.அப்படிப்பட்ட துணிச்சலான இந்த படத்தை இயக்கியதன் மூலம்  தமிழ் சினிமா வரலாற்றில் தனக்கான இடத்தை அழுத்தமாக பதிய வைத்துக் கொண்டவர் இயக்குனர்  வீணை எஸ் . பாலச்சந்தர் 

வீணை எஸ்.பாலசந்தர் 

1927 ஜனவரி 18-ல் சென்னை மயிலாப்பூரில், சுந்தரம் – செல்லம்மாள் தம்பதியின் மகனாக பிறந்தவர், பாலசந்தர். அவரது தந்தை சுந்தரம், இசைக் கலைஞர்களின் புரவலராக இருந்தவர். அவரது வீட்டுக்கு ஏராளமான இசைக் கலைஞர்கள் வருவது வழக்கம் என்பதால், குழந்தைப் பருவத்திலிருந்தே பாலசந்தருக்கும் இசையார்வம் தொற்றிக்கொண்டது. பாபநாசம் சிவன் போன்ற இசை மேதைகளிடம் இசை கற்றுக் கொண்டாலும், சுயம்பு கலைஞராகவே அவர் பரிணமித்தார். கேள்வி ஞானத்தில்தான் தனது இசையார்வம் முகிழ்த்ததாக அவரே குறிப்பிட்டிருக்கிறார்.

குடும்பமே கலைக் குடும்பம் என்பதால், இளம் வயதிலேயே சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார் பாலசந்தர். 1934-ல் மகாராஷ்டிரத்தின் கோலாப்பூரில் தயாரான ‘சீதா கல்யாணம்’ எனும் திரைப்படம்தான் அவரது முதல் படம். திரைமேதை சாந்தாராம் தயாரிப்பில் உருவான அந்தப் படத்தில் ராமர் வேடத்தில் நடித்தது பாலசந்தரின் சகோதரர் எஸ்.ராஜம். அக்கா ஜெயலட்சுமி சீதாவாக நடித்தார். தந்தை சுந்தரம் அய்யர், ஜனகராக நடித்தார்.

இப்படி ஆரம்பித்த பாலசந்தரின் திரையுலகப் பயணம், பின்னாட்களில் புதுமையான கதைகளுடன் கூடிய திரைப்படங்களைத் தமிழ்த் திரையுலகுக்கு வழங்கும் அளவுக்கு அவரை உயர்த்தியது. பாலசந்தர் நடித்து இயக்கிய ‘என் கணவர்’ திரைப்படம் 1948-ல் வெளியானது. அதற்கு முன்னதாகவே, ‘இது நிஜமா?’ திரைப்படத்தில் நாயகனாக பாலசந்தர் நடித்திருந்தார். கதாநாயகனாக நடித்த முதல் படத்திலேயே இரட்டை வேடம் அவருக்குக் கிடைத்தது. சிவாஜி நடிப்பில் அவர் இயக்கிய ‘அந்த நாள் ’(1954) திரைப்படம் அவருக்குப் பெரும் புகழ் சேர்த்தது. அகிரா குரோசாவாவின் ‘ராஷோமோன்’ திரைப்படத்தின் கதைசொல்லல் உத்தியின் பாதிப்பில் பாலசந்தர் உருவாக்கிய அந்தப் படம், அதன் திரைக்கதை நேர்த்திக்காக இன்று கொண்டாடப்படுகிறது.

பாலசந்தர் 4 வயது சிறுவனாக இருந்தபோது ஒரு இசைக் கலைஞர் அவருக்குக் கொடுத்த தாள வாத்தியமான கஞ்சிரா, பாலசந்தரின் இசைப் பயணத்தின் தொடக்கப் புள்ளியாக அமைந்தது. ‘சீதா கல்யாணம்’ திரைப்படத்தில் கஞ்சிரா வாசிக்கும் சிறுவனாகவே நடித்திருந்தார் பாலசந்தர். 10 வயதிலேயே ஹார்மோனியம் இசைத்துப் பாடும் அளவுக்குத் திறன் பெற்றார். பின்னாட்களில் வீணை எஸ்.பாலசந்தர் என்றே அழைக்கப்படும் அளவுக்கு மிகச் சிறந்த வீணைக் கலைஞராக உருவெடுத்தார்.

பல திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். கே.ஜே.யேசுதாஸ் தமிழில் பாடி முதலில் ஒலிப்பதிவான ‘நீயும் பொம்மை நானும் பொம்மை’ பாடல், பாலசந்தரின் ‘பொம்மை’ படத்தில் இடம்பெற்றதுதான். இசை, நடிப்பு, நடனம், ஒளிப்பதிவு, திரைக்கதை, இயக்கம், தயாரிப்பு எனத் திரைக் கலையின் அனைத்து நுட்பங்களையும் அறிந்தவர் அவர். திரைப்பட உருவாக்கத்தில் பல புதுமைகளைச் செய்தார். சென்னையில் உலகத் திரைப்பட விழாக்களுக்குத் தொடக்கப்பள்ளி வைத்தவர்களில் பாலசந்தரும் ஒருவர். திரையுலகப் பிரபலங்கள் பங்கேற்கும் நட்சத்திரக் கிரிக்கெட்டும் அவரது முயற்சியில் சென்னையில் நடத்தப்பட்டது.

கர்நாடகா இசையுலகில் பாலசந்தர் நிகழ்த்திய கலகங்கள் புகழ்பெற்றவை. இசை விமர்சகர் சுப்புடுவுடன் அடிக்கடி மோதினார். பாலமுரளி கிருஷ்ணாவைச் சீண்டினார். சுவாதி திருநாள் குறித்து சர்ச்சையை கிளப்பினார்.எல்லாவற்றையும் தாண்டி, அபாரமான பகடித் தன்மையும், போர்க்குணமும் கொண்ட பாலசந்தர், தனித்தன்மை கொண்ட சுயம்பு கலைஞராகவே தமிழ்த் திரையுலகிலும், இசையுலகிலும் முத்திரை பதித்தார்.

சங்கீத கலாசிகாமணி, பத்மபூஷண் உள்ளிட்ட பல்வேறு விருதுகளால் அலங்கரிக்கப்பட்ட பாலசந்தர், 1990 ஏப்ரல் 13-ல் மறைந்தார்.

(தொடரும்)

– எழுத்தாளர். அஜயன் பாலா.

பின் குறிப்பு : ஆசிரியரின் தமிழ் சினிமா வரலாறு பாகம் ஒன்று 1916-1947 நாதன் பதிப்பகம் வெளியீடாக நூலாக வெளி வந்துள்ளது. அதனைத்தொடர்ந்து  இரண்டாம் பாகமாக இத்தொடர் 1948 துவங்கி தமிழ் சினிமாவின் முக்கிய வரலாற்றுத்தடங்களை விவரிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published.